இறைதூதர் இப்ராஹிமின் இலட்சியங்கள் மனித நாகரீகத்துக்கு ஔி விளக்காகிறது! - சுஐப் எம். காசிம்-
- சுஐப் எம். காசிம்-
இடப்பெயர்வு, தியாகங்களின் அத்திவாரங்களிலிருந்து கட்டமைக்கப்பட்ட இஸ்லாம், மனித நாகரீகத்துக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இந்த முன்மாதிரிகள் சமயங்களுக்கென மட்டும் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. நாகரீகம், குடும்ப அமைப்பு, இலட்சியங்களை வெல்வதற்கான பயிற்சி, கொள்கைகளை உயிரூட்டுவதிலுள்ள சவால்களை எதிர்கொள்ளல் மற்றும் சமூகத்தை கட்டமைப்பதிலுள்ள தியாகங்களையும் இந்த முன்மாரிகள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்த ஊற்றுக்களிலிருந்துதான், இறைதூதர் இப்பராஹிம் தனது உயரிய இலட்சியங்களை வென்றெடுத்தார். இவரின் வெற்றிக்கு இடப்பெயர்வு மற்றும் தியாகங்களே அத்திவாரமாகியிருந்தன. இந்த வெற்றிகள் உலகில் பல நாகரீகங்களை உருவாக்கின.
பாரான் தேசத்திலிருந்து நாற்பது நாட்கள் ஒட்டகைப் பயணத்தில், அன்னை ஹாஜரா (அலை) மற்றும் பாலகர் இஸ்மாயில் ஆகியோர் பண்டைய பக்காவுக்கு (மக்கா) புலம்பெயர்ந்ததாலே பின்னர் ஒரு நாகரீகம் உருவானது. குடும்பம், சமூகம், பொருளாதாரம் மற்றும் சமயம் என்பன இந்நாகரீகத்தில் இருந்தன. "என் இறைவனே மக்காவாகிய இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக ஆக்கிவை. கஃபாவான உனது இல்லத்தை நாடி வருவோருக்கு பழங்கள், கனிகளைச் சொரிந்துவை. எனது மக்களை சிலை வணக்கத்திலிருந்தும் இரட்சித்துக்கொள்". அன்னை ஹாஜராவையும் பாலகர் இஸ்மாயீலையும் மக்கா பாலைவனத்தில் தனியே இருக்கச் செய்த இறைதூதர் இப்ராஹீம், இவ்வாறுதான் இறைவனிடம் பிரார்த்தார்.
இதிலிருந்து அரேபியாவில் புதிய சமூகம் தோன்றியதை உணர முடிகிறது. விவசாயம் செழித்திருந்த அன்றைய பாரான் தேசத்தை (ஈரான், ஈராக், பலஸ்தீன்) நோக்கி இறைதூதர் பிரார்த்தித்தது ஏன்? அதேபோன்ற ஒரு செழிப்புமிக்க தேசத்தை அரேபியாவிலும் உருவாக்குவதே இவரது நோக்கம். குடியிருப்புக்களை அமைத்தல், பட்டணத்தை உருவாக்கல், புதிய மார்க்கத்தை தோற்றுவித்தல் இவைகளே இறைதூதர் இப்ராஹிமின் இலட்சியங்களாக இருந்தன. ஐய்யாயிரம் வருடங்களுக்கு முன்னர் இதற்காக அவர் செய்த தியாகங்களே எமக்கு மார்க்கமாக்கப்பட்டுள்ளது.
எனவே, சமயத்தை தோற்றுவிக்கும் நோக்கில் மாத்திரம்தான் இறைதூதர் இப்ராஹிமின் இடப்பெயர்வுகள், தியாகங்கள் இருந்ததாகக் கருத முடியாது. ஒரு உன்னத சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளும் இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்படும் என்ற தத்துவத்தையே புனித ஹஜ் கற்றுத்தருகிறது.
பாலகனாக வளர்ந்திருந்த இஸ்மாயீலை (அலை) அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடத் துணிந்த இறைதூதர் இப்ராஹிமின் தியாகம், இதற்கு கட்டுப்பட்ட மகனின் ஒழுக்கம் மற்றும் இந்தத் துயரங்களில் அன்னை ஹாஜரா (அலை) நடந்துகொண்ட விதங்களே இன்று மனுக்குலத்துக்கு ஔி விளக்காக இலங்குகிறது. மனுக்குலத்தையே மீட்சிக்கும் ஒரு மார்க்கத்தை உருவாக்கிய இக்குடும்பத்தவர்களது முன்மாதிரிகள், உலகம் முடியும் வரைக்கும் யூத, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு மார்க்கமாக்கப்பட்டுள்ளது.
முஹம்மது நபியவர்களும் இவ்வாறான தியாகம், இடப்பெயர்வுக்கு உள்ளாகியே இஸ்லாத்தை நிலை நிறுத்தினார். மக்காவிலிருந்து புலம்பெயர்ந்த முஹம்மது நபியவர்கள் மதீனாவில் நிறுவிய அரசுதான் பல்லின சமூகத்தாரையும் பாதுகாத்தது. இந்நம்பிக்கையின் நிழலில்தான் மதீனாச்சாசனத்திலும் யூத, கிறிஸ்தவர்களுக்கு முஹம்மது நபியவர்கள் பாதுகாப்பு வழங்கினர். இந்தப் பாதுகாப்பில் முழுமைப்படுத்தப்பட்ட இஸ்லாம் ஈருலகுக்குமே வழிகாட்டுகிறது. இந்த வழிகாட்டல்களிலிருந்து விலகாதிருக்க இறைதூதர்களின் முன்மாதிரிகளைப் பின்பற்றுவோம். எமது ஆத்மீக நம்பிக்கைகளுக்குள் ஊடுருவ முனையும் தீய சக்திகளைத் தோற்கடிக்கவும் இறைதூதர்களின் வழிகாட்டல்களே வழிகோலும்.
No comments