நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம் நாம் இலங்கையர்களாக சிந்திக்காமல் பிரிவினையுடன் இனரீதியாக சிந்தித்ததே : சகவாழ்வு நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் ஜெகராஜன் தெரிவிப்பு !
நூருல் ஹுதா உமர்
பிரித்தானியர்களிடமிருந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த பொருளாதார நிலையிலிருந்து நாடு இன்றிருக்கும் பொருளாதார நிலைக்கு கொண்டுவரப்பட்டமைக்கு காரணம் நாட்டில் வாழும் மக்களாகிய நாம் இலங்கையர்களாக அன்றி இன ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் சிந்தித்தமையே. எமது நாட்டின் அரசியல் சித்தாந்தங்களினாலும், பிழையான இனவாத, மதவாத பிரச்சாரங்களினாலும் நாடு சமாதானமின்றி சீரழிந்து கொண்டிருக்கிறது என காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தெரிவித்தார்.
மாளிகைக்காடு கிழக்கு சகவாழ்வு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "இனங்களுக்கிடையில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவோம்" என்ற ஒன்று கூடலும், பரிசளிப்பு நிகழ்வும் மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலயத்தில் சகவாழ்வு சங்கத்தின் செயலாளர் ஆர்.எம். தன்ஸீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எமது நாட்டில் அடையாள அட்டை ஏன் அறிமுகம் செய்யப்பட்டது என்ற வரலாற்றை ஆராய்ந்தாலே நாம் நமது நாடு ஏன் இந்த நிலைக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். செய்திகளை அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் கூட விபத்தில் அல்லது அனர்த்தங்களில் மரணித்ததை மனித உயிர்களாக பார்க்காமல் இன அடையாளம் காட்டுவதையே காணக்கூடியதாக இருக்கிறது.
எமது மூதாதையர்கள் இனங்களுக்கிடையில் வைத்திருந்த ஒற்றுமையை இன்றைய சந்ததிகளும் கட்டியெழுப்ப வேண்டும். மதங்களுக்காக சண்டையிடுபவர்கள் மதங்கள் கூறும் விடயங்களை கேட்டு, வழிப்பட்டு நடப்பதில்லை. சகல மதங்களும் சமூக நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் வலியுறுத்துகின்றது என்றார். இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர், அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி ஏ.எம்.எம். மின்ஹாஜ், காரைதீவு அம்மன் ஆலய குரு ஜீவன் குல சுவாமிகள், வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான பயிற்சியாளர் ஐ.எல். காஸிம் ஆகியோர் சமூக நல்லிணக்கம், சகவாழ்வு, இன ஒற்றுமையின் தேவைப்பாடுகள், பல்லின சகோதரத்துவத்தை வலியுறுத்தி உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் மேலும் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ். ஜெகத், மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய பிரதி அதிபர் ஏ.எல்.எம். நளீம், காரைதீவு மனித அபிவிருத்தி ஸ்தாபன உத்தியோகத்தர் எம்.ஐ. றியால், காரைதீவு பிரதேச செயலக சகவாழ்வு சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் தணிகை செல்வி, மாளிகைக்காடு கிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிழக்கு இளைஞர் அமைப்பு இளைஞர் கழக தலைவர் ஆர்.எம். தாணீஸ், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்க தலைவர் ஏ.எல். இந்தியாஸ், மனித அபிவிருத்தி ஸ்தாபன உறுப்பினர்கள், ஸ்ரீ முருகன் சகவாழ்வு சங்க உறுப்பினர்கள் உட்பட பல்லின பாடசாலைகளின் மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நல்லிணக்க சித்திர போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் இங்கு வழங்கிவைக்கப்பட்டது.
No comments