மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் கற்றுத்தான் சாதிக்க வேண்டும் என்பதல்ல, எங்கிருந்தாலும் சாதிக்கலாம் - கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம்
நூருள் ஹுதா உமர்
பாடசாலைகளை மேம்படுத்த பிரதேச நலன்விரும்பிகள், பெற்றோர்களின் பங்களிப்பு இருக்குமானால் தனியே அரச நிதியை மாத்திரம் நம்பியிருக்காமல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக பாடசாலையின் பௌதீக வளங்களையும் கூட நாங்கள் விருத்தி செய்ய முடியும் என்று கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் ‘லீடரின் புலமை மொட்டுக்கள்’ கௌரவிப்பு நிகழ்விலே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (19.03.2023) பாவா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹுதுல் நஜீம் கலந்து கொண்டதுடன் கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், அரச உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்திபெற்ற 5 மாணவர்கள் உட்பட பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 59 மாணவர்களில் சித்தி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் கூறியதாவது;
இந்தப் பாடசாலை 2004 சுனாமியால் அழிவடைந்த ஒரு பிரதேசத்திலே மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் பெயரிலே மீள உருவாக்கப்பட்ட பாடசாலை.கல்முனை வலயத்தில் இருக்கின்ற 65 பாடசாலைகளிலிமிருந்து 386 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று தெரிவாகியிருந்தனர். அவர்களில் 179 ஆகக் கூடுதலான புள்ளியை மருதமுனை அல்மனார் தேசியப் பாடசாலை மாணவன் பெற்றான். அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை இந்தப் பாடசாலை மாணவன் 178 புள்ளிகளை பெற்றுள்ளான்.
386 மாணவர்களில் இரண்டாவது இடத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோரப் பிரதேசத்தின் மீளக் கட்டியெழுப்பப்பட்ட ஒரு புதிய பாடசாலையிலிருந்து ஒரு மாணவன் 178 புள்ளிகளைப் பெற்றிருப்பது பெரியதொரு சாதனையான விடயமாகும்.
அது மாத்திரமல்ல பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்த வீதம் 83.5 வீதமாக காணப்படுகின்றது. சாய்ந்தமருது பிரதேசத்திலே இருக்கின்ற முன்னணிப் பாடசாலைகளை விட அடிப்படை வசதிகள் குறைந்த இந்தப்பாடசாலை கனிசமானளவு சித்தி வீதத்தைப் பெற்றிருக்கினறது. மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் கற்றுத்தான் சாதிக்க வேண்டும் என்பதல்ல. எங்கிருந்தாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
இந்தப் பாடசாலையின் பௌதீக வள நிலைமை மிகவும் கவலையானதுததான். அதற்கான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறோம். பாடசாலையின் அபிவிருத்திக்கு சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமாக இருக்கின்றது. வடக்கில் தமிழ் சமூகம் தனியே அரச நிதியை மாத்திரம் நம்பியிருப்பதில்லை. புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஒத்துழைப்போடு பாடசாலைகளுக்கான வளங்களைப் பெற்று அபிவிருத்தி செய்திருக்கிறார்கள். அதேபோன்று எமது முஸ்லிம் சமூகத்தின் அபிமானிகளும் தங்களது பிரதேசங்களின் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
பெற்றோர்களின் பங்களிப்பு இருக்குமானால் தனியே அரச நிதியை மாத்திரம் நம்பியிருக்காமல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக பௌதீக வளங்களையும் கூட நாங்கள் விருத்தி செய்ய முடியும். அரசியல் சக்திகளின் உதவிகளைப் பெறுவதற்கு முயற்சி செய்கின்ற அதேவேளை அதற்கு அப்பால் நாங்கள் ஒன்றுபட்டால் நிதியை வெளியிடங்களில் இருந்து பெறமுடியுமாக இருந்தால் அவ்வாறான பௌதீக வசதிகளையும் எமது பாடசாலைகளில் ஏற்படுத்த முடியும்.
ஒரு பாடசாலை அமையப் பெறுவது 100 சிறைக்கூடங்கள் மூடப்படுவதற்கு சமானாகும் என்ற அறிஞரொருவரின் கருத்து இருக்கிறது. கல்விதான் சமூகத்தின் மிகபப் பெரியதொரு ஆயுதம். இப்பாடசாலை அமைந்திருப்பது மீனவப் பிரதேசமாக இருந்தாலும் அச் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு இந்தப் பாடசாலை என்றும் ஒத்துழைப்போடு இருக்கும் என்று நம்புகிறோம்.
No comments