தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை,கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் கடற்கரை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வு
(எம்.என்.எம்.அப்ராஸ்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை,கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் ஒலுவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வு புதன்கிழமை (01) மாலை இடம்பெற்றது.
கலை கலாசார பீடத்தினால் பிராந்திய அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன்,பாரிய கடற்கரை சுத்தப்படுத்தும் சிரமதான பணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்,பணியாளர்கள்,பிராந்திய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுமார் 2 மணி நேரம் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ.றமீஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில்,பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.சி.எம்.ஹனஸ், சமூக நலன்புரி செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஐ.எல்.மொஹமட் சாஹிர்,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,அம்பாரை மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம், இலங்கை இராணுவத்தின் 24ஆம் மற்றும் 241ஆம் காலாட்படை பிரிவுகள் என்பன இணைந்து சுத்தப்படுத்தல் பணியினை முன்னெடுத்தனர்.
கடற்கரையை சுத்தப்படுத்தும் இந்நிகழ்வில் ஏறத்தாழ 200 தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பல்கலைக்கழக சமூக உறுப்பினர்கள்,அம்பாரை மாவட்ட செயலகத்தின் மேலதிக செயலாளர் வீ. ஜெகதீசன்,அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம். றியாஸ்,அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அஹமட் ஷாபி, 24ஆவது காலாட்படை பிரிவின் தளபதி பிரிகேடியர் விபுல சந்திரசிறி,241ஆவது படைத் தளபதி கேணல் தணிக பத்திரத்ன,11ஆவது இலங்கை கடற்படையின் பிரதான அதிகாரி புபுது ஹெட்டியாராச்சி மற்றும் ஒலுவில் மீனவ சமூக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
'சுற்றுச்சூழலை வளப்படுத்துவதன் மூலம் சமூக செழிப்பு' என்பது இந்நிகழ்வின் முக்கிய கருப்பொருளாகக் காணப்பட்டது.
ஒலுவில் கடற்கரையை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, கடற்கரையோரம் 100 மரக்கன்றுகள் நடும் வகையில் மரம் நடுகை நிகழ்ச்சியும் முன்னெடுக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
கலை மற்றும் கலாசார பீடத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பொருளாதார மாணவர்கள்,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான பிரயோக அறிவை நேரடியாகப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments