Breaking News

சோம்பேறிகளை வீட்டுக்கு அனுப்பி சேவை எண்ணம் கொண்டவர்களை மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும் - மயில் வேட்பாளர் ஹுதா உமர்.

மறைந்த தலைவர் அஷ்ரபின் தலையை காட்டி தேர்தலில் வென்று மக்களுக்கு எதுவும் செய்யாமல் அதிகார கதிரையை சூடாக்கிய மக்கள் பிரதிநிதிகளை மக்கள் நிராகரிக்கவேண்டிய காலம் கனிந்துள்ளது. தேர்தலுக்கு மட்டும் வந்து பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு சோம்பேறிகளை போன்று அசட்டையாக இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பி மக்களுக்கு நல்ல பல சேவைகளை செய்யும் எண்ணம் கொண்டவர்களை மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலான காரைதீவு பிரதேச சபை வேட்பாளரும் அல்- மீஸான் பௌண்டஷன் தவிசாளருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் தெரிவித்தார்.


மாளிகைக்காட்டில் நேற்று (01) இரவு இடம்பெற்ற காரைதீவு பிரதேச சபை தேர்தல் தொடர்பிலான மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கடந்த காலங்களில் இனவாதிகளினால் முஸ்லிங்களுக்கு அநியாயம் நடந்த போது ஊமைகள் போன்று இருந்தவர்கள், ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது அமைதி காத்தவர்கள், ஊழலுக்கு துணை போனவர்கள், எவ்வித சேவைகளும் செய்யாமல் சோம்பேறிகளை போன்று அசட்டையாக இருந்தவர்கள் இம்முறையும் தேர்தலில் களமிறங்கியுள்ளார்கள். இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள்.


சர்வதேச புகழ்பெற்ற அறிஞர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணில் கடந்த காலங்களில் தவிசாளராக இருந்தவர் முழுமையான இனவாதியாக செயற்பட்ட போது நான் துணிந்து நின்று அவருக்கு எதிராக போராடினேன். நபிகள் நாயகத்தை விமர்சித்த அவரை மாளிகைக்காட்டுக்கு அழைத்து வந்து மாலை போட்டு கௌரவித்தவர்கள் இப்போது ஜனாஸாவை எரிக்க துணைபோன முஸ்லிம் காங்கிரஸின் சார்பிலான வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கிறார்கள். இதுதான் காலம் செய்த கோலம்.


முஸ்லிங்களின் உரிமைகளை பாதுகாக்க, எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை மெய்ப்படுத்த முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனால் முடியும் என்று நிரூபணமாகியுள்ளது. சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக எப்போதும் துணிச்சலுடன் பேசக்கூடிய ஒருவரே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத். அவரை பலப்படுத்த இம்முறை மயிலுக்கு நாம் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என்றார்.




No comments

note