சம்மாந்துறை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் 25 வருடங்களின் பின்னர் இல்ல விளையாட்டுப்போட்டி! சம்பியனானது சபா இல்லம் !!
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/ அல்-ஹம்றா வித்தியாலயத்தின் வரலாற்றில், 25 வருடங்களின் பின்னர் இல்ல விளையாட்டுப்போட்டி; வித்தியாலயத்தின் அதிபர் ஏ. முகம்மது றிஸ்வான் தலைமையில் 2023.02.08 ஆம் திகதி மிகக்கோலாகரமாக பாடசாலை முற்றலில் அமைந்திருக்கும் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சபா மற்றும் மர்வா என; மாணவர்கள் இரு அணிகளாக பிரிந்து போட்டிகளில் பங்குகொண்டனர். 25 வருடங்களைத் தாண்டிய போட்டியென்பதால் குறித்த பாடசாலையின் முற்றல் விழாக்கோலம் பூண்டிருந்தது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ் உமர் மொளலானா கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்து இருந்தார். போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் 300 புள்ளிகளை பெற்று சபா இல்லம் (பச்சை இல்லம்) வெற்றிவாய்ப்பை தனதாக்கிக் கொண்டது. இதில் மர்வா (மஞ்சள் இல்லம்) 267 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் தனதாக்கிக் கொண்டது.
போட்டியின் இறுதி நாள் நிகழ்வுக்கு சம்மாந்துறை வலய கல்வி அலுவலகத்தின் சார்பில் அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி. நிதர்சினி, பிரதிக் கல்விப் பணிப்பாளரும் சம்மாந்துறை கோட்டக் கல்வி பணிப்பாளருமான ஏ.எல்.ஏ.மஜீட், உதவிக் கல்விப் பணிப்பாளர் நைறூஸ்கான் ஹிதாயத்துள்ளாஹ், உதவிக் கல்விப் பணிப்பாளர் பி. பரமதயாளன், ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலைய முகாமையாளர் எம்.ஐ.அஸீனா மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் ஏ.எல்.எம்.பைரோஜ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ் உமர் மொளலானா, அல் ஹம்றா வித்தியாலயத்தை கையேற்ற கையோடு அதிபர் ஏ. முகம்மது றிஸ்வான்; பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்திச் சபையினர் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் இவ்வாறானதொரு பிரமாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை மகிழ்வைத் தருவதாகவும் இறுதி நிகழ்வில் இல்லங்களுக்கான வடிவமைப்பை மிக நேர்த்தியான முறையில் உருவாக்கியிருந்தமை தனக்கு வியப்பைத் தந்ததாகவும் தெரிவித்தார். மாணவர்கள், புறக்கீர்த்தி செயற்பாடுகள் போன்று அவர்களது ஏனைய கல்வி அபிவிருத்தி விடயங்களிலும் சிரத்தையுடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சம்மாந்துறை வலைய பிரதிக் கல்விப் பணிப்பாளரும் சம்மாந்துறை கோட்டக் கல்வி பணிப்பாளருமான ஏ.எல்.ஏ.மஜீட், இவ்வாறான போட்டிகளை நடாத்துவதன் நோக்கம் மாணவர்களுக்கிடையேயோ அல்லது ஆசிரியர் பெற்றோர்களுக்கிடையேயோ பிரிவினையை ஏற்படுத்துவதற்காக அல்லவென்றும்; மாணவர்கள் ஆரம்பத்திலிருந்தே வெற்றி தோல்வி போன்ற கட்டங்களை சகித்துக்கொள்ளும் மனோபக்குவ நிலையை அவர்களது மனங்களில் உருவாக்குவதே என்றும் போட்டிகள் முடிவடைந்ததன் பின்னர் மாணவர்கள் தாங்களது வழமையான பணிகளை தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் பாடசாலைமுற்றல், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அயலவர்கள் என விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ் உமர் மொளலானா பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் போட்டிகளின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் சாம்பியனான இல்லங்களுக்கு கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
No comments