Breaking News

13வது திருத்தம், அதிகாரப் பகிர்வு தமிழர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல; முஸ்லிம்களினதும் உரிமைகளுக்கு இவை அவசியம் என்கிறார் மு.கா.தவிசாளர் மஜீத்

(சாய்ந்தமருது நிருபர்)

13வது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு என்பன தமிழ் மக்களுக்கு மட்டும் உரித்தானது எனவும் அது முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பாக அமைந்து விடும் எனவும் தப்பபிப்பிராயம் பரப்பப்படுகிறது. ஆனால் இத்தகைய அதிகாரப் பகிர்வின் மூலம்தான் முஸ்லிம்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.


அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. அது தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;


இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக் கொண்ட போதிலும் 1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதியன்றுதான் சுதந்திரக் குடியரசாக மாறியது. அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட முதலாவது குடியரசு சாசனம் சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை முழுவதுமாக புறந்தள்ளி சிங்கள பௌத்த மேலாண்மையை வலியுறுத்தி நின்றது.


குறிப்பாக சோல்பரி அரசியல் யாப்பில் இடம்பெற்றிருந்த செனட் சபை (மூதவை) இல்லாதொழிக்கப்பட்டதுடன் பௌத்த மதத்தை அரச மதமாகவும் சிங்கள மொழியை அரச கரும மொழியாகவும் பிரகடனம் செய்திருந்தது .


சிறுபான்மை மக்களின் உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக மாற்றும் அக்குடியரசு சாசனத்தை  தமிழ் மக்கள் எதிர்த்து நின்றதுடன் அப்போது நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் அமிர்தலிங்கம் அவர்கள் பகிரங்கமாக அரசியலமைப்பை தீயிட்டுக் கொளுத்தினார். இதன் விளைவாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


அதுபோல் கடந்த 8ஆம் திகதி அன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அக்கிராசன  உரையை உரையாற்றிக் கொண்டிருக்கையில் பௌத்த பிக்குமார் பாராளுமன்றை நோக்கி ஆர்ப்பாட்டமாக சென்றதுடன் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்தினர். அவர்களை பொலீசார் கைது செய்ய முன்வரவில்லை. பொலீசாரின் அச் செயலானது நாட்டில் இரண்டு சட்டங்கள் உள்ளது போல் என்னத் தோன்றுகிறது.


1957ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான பிற்குமார் பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் இருந்தனர். இதனால் வேறு வழியின்றி அவ் ஒப்பந்தம் கிழித்து வீசப்பட்டது.


1965ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட டட்லி- செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து அன்றைய எதிர்கட்சியான ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினர், டட்லியின் தலைக்குள்  "மஸாலா வடே" என்ற கோசத்தை முன்னெடுத்துச் சென்றதுடன் அவ் ஒப்பந்தத்தை தோல்வியடையச் செய்தனர்.


இனப்பிரச்சனைக்குத் தீர்வாக 1981ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை தோல்வியைத் தழுவிக் கொண்டது போல் மாகாண சபை முறைமையையும் தோல்வியடையச் செய்வதற்கு பௌத்த சிங்கள கடும் போக்குவாதிகள் முயன்று கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.


அரசியலமைப்பிற்கான 6வது திருத்தச் சட்டம் 1983ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டமானது நாட்டிற்குள் பிரிவினை கோருவதை தடுத்து நிற்கிறது. அச்சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுத்ததனால் அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை வரிதாக்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் உட்பட 18 பேர் பதவியிழந்தனர்.


இன்று பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள் பலர் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 13வது திருத்தச் சட்டத்தை ஏற்க மறுப்பதனால் அவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்து நிற்கின்றது.


13வது திருத்தம் என்பதும் அதிகாரப் பகிர்வு என்பதும் தமிழ் மக்களுக்கே உரித்தான சொந்த விடயம் என முஸ்லிம் சமூகத்தில் பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அது அவர்களின் அரசியல் அறியாமையை பிரதிபலிக்கின்றது. அதிகாரப் பகிர்வு என்பது வடக்கு கிழக்கிற்கு மாத்திரமன்றி அதற்கு வெளியே உள்ள 07 மாகாண சபைகளும் உள்ளன என்பதனையும் விஷேடமாக சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளையும், பிராந்திய அபிவிருத்தியையும் அவர்களது வாழ்விடங்களையும் உறுதிப்படுத்துவது அதில் தங்கியுள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொண்டு செயற்பட முன்வர வேண்டும்- என அப்துல் மஜீத் வலியுறுத்தியுள்ளார்.




No comments

note