Breaking News

கல்முனை நூலகத்திற்கு மன்சூரின் பெயரை சூட்டுவதற்காக பிரேரணை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

(சாய்ந்தமருது நிருபர்)

கல்முனை பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூரின் பெயரை சூட்டுவதற்காக கல்முனை மாநகர சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதற்காகக் கூட்டப்பட்ட விசேட பொதுச் சபை அமர்வு இன்று வியாழக்கிழமை (23) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இப்பிரேரணை தொடர்பில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஆதரவாகவும் தமிழ் உறுப்பினர்கள் எதிராகவும் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்திருந்தனர்.


இந்நிலையில் இப்பிரேரணை மாநகர முதல்வரினால் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது பிரேரணைக்கு ஆதரவாக 23 உறுப்பினர்களும் எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். 05 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.


ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, சாய்ந்தமருது தோடம்பழ சுயேட்சைக்குழு மற்றும் ஹெலிகொப்டர் சுயேச்சைக்குழு உறுப்பினர்களுமாக 23 முஸ்லிம் உறுப்பினர்களே ஆதரவாக வாக்களித்திருந்தனர்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மான் சுயேட்சைக்குழு உறுப்பினர்களுமாக 12 தமிழ் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.







No comments

note