வாக்குகளை பெற்று உல்லாசம் அனுபவிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவோம் - முபாரக் அப்துல் மஜீட்
பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை கொள்ளையடித்துச் சென்று உல்லாசம் அனுபவிக்கும் அரசியல் கலாச்சாரத்திற்கு வரும் தேர்தல்களில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் முபாரக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.
தேர்தல் திணைக்களத்தினால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை புத்தளம் உளுக்காப்பள்ளம் பகுதியில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மௌலவி ஸப்வான் சல்மானின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் முபாரக் அப்துல் மஜீட் மேலும் குறிப்பிடுகையில்,
தேர்தல் காலங்களில் பொட்டனி வியாபாரிகளாக வரும் முஸ்லிம் கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற்று தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை தூக்கியெறிந்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் மட்டும் உல்லாசமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள் . மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்ததாக தெரியவில்லை. இதுபற்றி எமது கட்சி தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்தது. நாங்கள் மக்களின் வாக்குகளுக்காக மக்களை ஏமாற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகளை வழங்கவில்லை. மிகவும் நேர்மையாக இந்த அரசியலை செய்துகொண்டு வருகிறோம்.
2005 ஆம் ஆண்டுதான் எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அப்போது எமது கட்சி பதிவு செய்யப்படவில்லை. அதனால்தான் தேர்தல் காலங்களில் கட்சிகளோடு இணைந்தது போட்டியிட்டோம்.
2008 ஆம் ஆண்டு மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டும் என்று அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவுடமும், பஷில் ராஜபக்ஷவுடனும் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தோம்.
அந்த சந்தர்ப்பத்தில் எமது கட்சிக்கு ஆதரவு வழங்குமாறும் எமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகவும் பஷில் ராஜபக்ச எங்களிடம் தெரிவித்தார்.
எனவே, சமூக நலன்களை கவனத்தில் கொண்டு மௌலவி ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக நாம் அப்போது மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கினோம். அப்போது 150 பேருக்கு மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
அதன் பிறகு இன்று வரை ஒரு மௌலவி ஆசிரியர் நியமனங்கள் கூட வழங்கப்படவில்லை. ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். அவர்களால் கூட ஒரு மௌலவி ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுக்கவில்லை.
இதேவேளை, 2013 ஆம் ஆண்டு பேருவளையில் நடந்த அசம்பாவித சம்பவத்தை அடுத்து, மஹிந்த ராஜபக்ச அரசிலிருந்து முதலாவதாக வெளியேறிய சிறுபான்னைக் கட்சி எமது கட்சியாகும்.
அத்துடன் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் அப்போது எதிர்க் கட்சியாக இருந்த ஐ.தே.கவுடன் பேசி அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கினோம்.
ஆனால், ஏனைய முஸ்லிம் கட்சிகள் மஹிந்தவின் அமைச்சரவையில் இருந்துகொண்டு, மஹிந்தவிற்கு எதிராக பேசி மக்களை ஏமாற்றி அரசியல் செய்தார்கள். தேர்தல் காலங்களில் மஹிந்தவுக்கு எதிரானவர்களாக தங்களை காட்டிக்கொண்டு வாக்குகளைப் பெற்று மீண்டும் மஹிந்தவோடு இணைந்து கொண்டனர்.
ஆனால், நாம் சமூக நலனுக்காக மாத்திரமே அரசியல் கட்சிகளோடு இணைந்தோம், சமூகத்திற்காகவே வெளியேறினோம். எமது தனிப்பட்ட விடயங்களுக்காக அரசியல் செய்யவில்லை. பெரும்பான்மை அரசியல் கட்சிகளிடம் பணம் பெறவில்லை. பதவிகளை பெற்றுக்கொள்ளவுமில்லை.
எமது பயணம் இந்த சமூகத்திற்காக மிகவும் தூய்மையாக இருந்தமையினால்தான் பதிவு செய்யப்படாமல் இருந்த எமது கட்சி இறைவனின் உதவியால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பல கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் இப்போதும் எங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எனினும், நாம் இப்போதைக்கு யாருடனும் இணைந்து பயணிக்க விரும்பவில்லை. அவசியம் ஏற்பட்டால் எமது கட்சியின் உயர்பீடம் கூடி முடிவெடுக்கும். எனினும், நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தனித்து எங்கள் ஒட்டக சின்னத்தில் போட்டியிடுவோம்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் புதிய முகங்களை களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.
இங்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மௌலவி ஸப்வான் சல்மான் கருத்து தெரிவிக்கையில்,
நீண்ட நிலப்பரப்பைக் கொண்ட கற்பிட்டி பிரதேச சபைக்குற்பட்ட மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகிறார்கள்.
எனவே, கற்பிட்டி பிரதேச சபையை நகர சபையாக மாற்றி கற்பிட்டி பிரதேச சபையின் உப அலுவலகமாக இயங்கி வரும் கடையாமோட்டை (அக்கரைப்பத்து) உப அலுவலகத்தை தனி பிரதேச சபையாக மாற்ற நடமவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எமது கட்சி கடந்த மாதம் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகளை நிர்ணயம் செய்கின்ற கூட்டத்தில் தெளிவுபடுத்தினோம்.
இது சம்பந்தமான இதற்கு முன்னர் பல தரப்பினாலும் பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தாலும், எல்லைகளை நிர்ணயம் செய்கின்ற கூட்டத்தில் இதுபற்றி சொல்லப்படாமல் இருந்தமையால் இதற்கு எமது கட்சி முக்கியத்துவம் வழங்கி அந்தக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியது.
இதேவேளை, வட்டார முறைப்படி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல், பழைய முறைப்படி தேர்தலை நடத்தினால், உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற ஆலோசனையையும் முன்வைத்தோம்.
ஆனால், வட்டார முறைப்படி தேர்தலை நடத்தினால் தற்போது உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடவும் மேலும் கூடுதலான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் . இது தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை விடவும் மேலும் நெருக்கடியை கொடுக்கும் என்பது பற்றியும் சுட்டிக்காட்டினோம்.
அதுமாத்திரமின்றி, புத்தளம் பிரதேச சபை என்பது புத்தளத்தின் நகரை அண்டிய சில பகுதிகளை உள்ளடக்கி இயக்கப்படுகிறது. புத்தளம் நகரைத் தாண்டி சில பகுதிகள் புத்தளம் பிரதேச சபையுடன் இருக்கிறது.
எனவே, புத்தளம் நகர சபை தற்பொழுது மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதால் புத்தளம் பிரதேச சபையுடன் இருக்கும் சில பகுதிகளை புத்தளம் மாநகர சபையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.
- சாஹிப் அஹ்மட் - புத்தளம்
No comments