பறகஹதெனிய மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இடம்பெற்ற பெற்றோர்களுக்கான செயலமர்வு
பறகஹதெனிய மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யின் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் அதிபரின் தலைமையின் கீழ் பெற்றோர்களுக்கான விஷேட வழிகாட்டல் செயலமர்வு நிகழ்ச்சியொன்று கடந்த 14.01.2023, சனிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்செயலமர்வு கண்டி மாவட்டத்தின் பிரபல சர்வதேச ஆங்கில பாடசாலைகளான "வெஸ்வூட்" கல்லூரி மற்றும் "லோயல்" பெண்கள் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளரும், பிரபல உளவள ஆலோசகருமான ஃபாஸிர் மொஹிடீன் அவர்களால் நடாத்தப்பட்டது.
குறிப்பாக இச்செயலமர்வு தரம் 6 தொடக்கம் 10 வரையான மாணவர்களின் பெற்றோர்களுக்கும், தரம் 11 தொடக்கம் உயர்தர பிரிவு மாணவர்களின் பெற்றோர்களுக்குமாக இரு கட்டங்களாக நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அத்துடன் இச்செயலமர்வு பிள்ளை வளர்ப்பு,குடும்ப வாழ்க்கைச் செயற்பாடுகள் மற்றும் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள், கணவன், மனைவிக்கிடையிலான சிறப்பான புரிந்துணர்வுக்கான வழிமுறைகள் போன்ற அம்சங்களுடன் ஒரு இலக்கினை நோக்கி தமது பிள்ளைகளை நகர்த்துவதற்கு பெற்றோர் ஆற்ற வேண்டிய பங்களிப்பு என்ன போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும் தெளிவூட்டக்கூடியதொரு நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எம். நசார், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அப்துர் ரஹ்மான், உறுப்பினர்களான எம்.எம். இர்ஷாத், எம்.ஆர்.எம். முஸ்தகீம் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.எம். சஹீட் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உட்பட அனேகமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
சியாஉர் ரஹ்மான்
No comments