Breaking News

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சை- 2021 பெறுபேறு வெளியிடப்படாமை கவலையளிக்கிறது - பரீட்சாத்திகள்

நூருல் ஹுதா உமர்

2021 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (மட்டுப்படுத்தப்பட்ட) (Sri Lanka Teacher Educator Service(Limited) Competitive Examination-2021) பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு வருட காலமாகியும் இதுவரையில் பரீட்சை திணைக்களத்தினால் அல்லது கல்வி அமைச்சினால் வெளியிடப்படாமல் உள்ளமை குறித்து பரீட்சாத்திகள் கவலை வெளியிட்டுள்ளனர்.


பாரிய பொருளாதார ரீதியான சிரமத்திற்கு மத்தியில் குறித்த பரீட்சையினை நம்பிக்கையோடு எழுதிய பரீட்சார்த்திகளின் முடிவை சுமாராக ஒரு வருட காலம் தாமதப்படுத்துவது அவர்களின் சட்ட ரீதியான எதிர்பார்ப்பை (Legitimate Expectation) மழுங்கடிப்பதாக அமைகின்றதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


நாட்டில் காணப்படுகின்ற 19 கல்வியியல் கல்லூரிகளையும் இணைத்து ஆசிரியர் பல்கலைக்கழகம் உருவாக்க உள்ளதாக அண்மையில் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்திலே தெரிவித்து இருந்தார். உண்மையில் எமது நாட்டில் இவ்வாறான ஒரு பல்கலைக்கழகத்தினை அமைப்பது அதில் கல்வி கற்கின்ற ஆசிரிய மாணவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே குறித்த மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர் கல்வியியலாளர் சேவை பரீட்சையினை எழுதிய ஆசிரியர்களினது பொறுபேற்றை உடனடியாக கல்வி அமைச்சு வெளியிட்டு அவர்களை நேர்முகப் பரீட்சைக்குட்படுத்தி ஆட்சேர்ப்பினை மேற்கொள்வதன் மூலம் குறித்த ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பொறுப்பான அமைச்சரிடம் இது தொடர்பான பதிலை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஏற்கனவே ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் திறந்த போட்டி பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பிலும் எதுவிதமான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தான் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சையின் மூலம் ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்குள் உள்வாங்கப்படுவதானது புதிய வகை நியமனமாக அமையாது என்பதால் அதனை உடனடியாக வழங்குவதற்கு அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பரீட்சாத்திகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




No comments

note