அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 16வது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும்
பாறுக் ஷிஹான்
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 16வது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை (29) தலைவர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி காமினி விமலசூரிய கலந்து கொண்டதுடன் மத அனுஸ்டானம், மறைந்த அங்கத்தினர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் வரவேற்புரை உப தலைவர் ஏ.எம்.அமீர் ஜேபி நிகழ்த்தினார்.
கடந்த வருடாந்த பொதுக்கூட்ட அறிக்கையை பொதுச் செயலாளர் எம்.ஜே.எம் சல்மான் மேற்கொண்டு வருடாந்த அறிக்கை மற்றும் தீர்மானங்களை அறிவித்தார்.
இதனை தொடர்ந்து வருடாந்த கணக்கறிக்கை பொருளாளர் ரீ.குணநாதன் சமர்ப்பித்து உரையாற்றினார்.அம்பாறை அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.ஆர்.கே.ஜாகொட தமிழ் பாடல் ஒன்றினை பாடினார்.பொதுச்செயலாளரின் உரை இடம்பெற்றது.
சங்கத்தின் தலைவர் தேசமான்ய யூ.எஸ்.எம். பைஸர் ஜேபி காதல் கவிதை ஒன்றினை வாசித்தார்.சிலோன் மீடியா போரம் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீட் அஞ்சல் சேவையின் முக்கியத்துவம் தொடர்பில் உரையாற்றினார்.,அங்கத்தவர்களுக்கான நேரம் வழங்கப்பட்டது.தொடர்ந்து முன்னாள் பிரதி அஞ்சல் மா அதிபதியும் தற்போதைய வாழைச்சேனை பிரதேச செயலாளருமான ஜெயானந்தி திருச்செல்வம் பொன்னாடை மற்றும் நினைவு சின்னம் கடந்த கால சேவைக்காக வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பின்னர் நடப்பு வருடங்களுக்கான நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டதுடன் சங்கத்தின் UPDO NEWS எனும் செய்தி மடலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன் பாடல்கள் கௌரவிப்பு நன்றியுரை என நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.இவ் வைபவத்தில் தபால் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி ஏற்பாட்டாளர் தலைவர் சிந்தக பண்டார உள்ளிட்ட கிழக்கு மாகாண அக்கரைப்பற்று மட்டக்களப்பு அம்பாறை அஞ்சல் அத்தியட்சகர் பிரிவிலுள்ள தபால் அதிபர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொழிற் சங்கங்கள் தான் சார்ந்த திணைக்களத்தின் வளர்ச்சிக்கும் அதன் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபரும் தற்போதைய வாழைச்சேனை பிரதேச செயலாளருமான திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபரும் தற்போதைய வாழைச்சேனை பிரதேச செயலாளருமான திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
தபால் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஆகியோர் பல சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றார்கள். எனது சேவை காலத்திலும் தபால் திணைக்களத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தொழிற் சங்கங்கள் எப்போதும் முற்போக்குத் தன்மையுடன் இயங்கினால் தான் ஒரு வலுவான தொழிற் சங்கமாக இயங்க முடியும் தொழிற் சங்கங்கள் வெறுமனே போராட்டங்களையும் வேறு விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமானால் அவை ஒரு வலுவான சங்கமாக அமையாது. எப்போதும் நல்லவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு தீயவைகளுக்கு எதிர்த்து போராட வேண்டும்.
அந்த வகையில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் ஒரு முன்மாதிரியாக செயற்படுவதையிட்டு நான் பாராட்டுகின்றேன். அஞ்சல் திணைக்களத்திற்கு இத் தொழிற் சங்கம் ஒரு வழிகாட்டியாக செயற்படும் என்பதில் ஐயமில்லை. தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்கு அதன் உறுப்பினர்களின் பங்களிப்பு இன்றியமையாததொன்றாகும். என்றார்.
No comments