தென்கிழக்கு பல்கலையில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு
நூருள் ஹுதா உமர்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் இஸ்லாமிய சட்டம் மற்றும் சட்டமியற்றல் பிரிவு இணைந்து ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தது. இந்நிகழ்வானது சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) அப்பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ்வாண்டுக்கான சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளாகிய "I have a voice" என்ற தொனிப்பொருளிலேயே இந்நிகழ்வானது இடம்பெற்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ. ஸி அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஏ. எம் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தலைமை உரையினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ. ஸி அப்துல் அஸீஸ் நிகழ்த்தினார். இவர் தனது உரையில் அடிப்படை உரிமைகள் தொடர்பாகவும், அவ்வுரிமைகள் மீறப்படும்போது அதனைப் பெற்றுக் கொள்வதற்காக மாணவர்கள் செயற்படுத்த வேண்டிய மூலோபாயங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய சட்டம் மற்றும் சட்டமியற்றல் பிரிவின் தகுதிகாண் விரிவுரையாளர் எம். எம் சியானா சிறப்பு உரையினை ஆற்றினார். இவர் இஸ்லாத்தின் பார்வையில் மனித உரிமைகள் எனும் தொனிப்பொருளில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து பொறியியலாளர் எம். எம் பதுலுல் ஹக், எதிர்கால சந்ததியினர்க்கான உரிமைகள் தொடர்பாகவும் அதற்காக நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஒரு விசேட உரையினை ஆற்றிச் சென்றார்.
இந்நிகழ்வின் பிரதம அதிதி உரையினை தென் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் துறைத்தலைவர் ஏ. எம் முஸ்தபா நிகழ்த்தினார்.
இவர் இலங்கையின் பொருளாதார நெருக்கடியும், மனித உரிமை மீறல்களும் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்வின் நன்றியுரையினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்தியத்தில் முகாமைத்துவ உதவியாளர் ஜே. துரைராணி வழங்கினார்.
இந்நிகழ்வில் குறித்த பீடத்தின் விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments