தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தொடர்பில் வெளிவந்துள்ள செய்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உத்தியோகபூர்வ வெளியீடல்ல : சங்க செயலாளர் தெரிவிப்பு
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் விடயமாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியானது அச்சங்கத்தின் செயலாளரான என்னாலோ அல்லது எனது அறிவுறுத்தலின் பேரிலோ வெளிவந்த செய்தியல்ல. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களின் உண்மைத்தன்மை, பொருளடக்கம் தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான நாங்கள் ஊடகங்களுக்கு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க விரும்பவில்லை. சங்கம் தொடர்பில் அறிக்கையிடும் பணி என்னிடமே இருக்கின்றது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பொறியியலாளர் ஏ.எம். அஸ்லம் சஜா தெரிவித்தார்.
இந்த செய்தி வெளியீடு தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் பலரும் பல்கலைக்கழக பெயருக்கு அபகீர்த்தியை உண்டாகியிருக்கும் செய்தியின் உண்மைநிலையை வெளியில் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்க செயலாளரிடம் இது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் இதுவிடயமாக கருத்து வெளியிட்ட அவர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஆவணப்படுத்தல் பணி தனக்குரியது என்றும் இந்த வெளியீட்டை ஊடகமயப்படுத்துவது தொடர்பில் எவ்வித தீர்மானங்களையும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் எடுத்திருக்க வில்லை என்றும் இதுசம்பந்தமாக பலரும் தன்னிடம் வினவியுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை கூட்டி இவ்விடயத்தை ஆராய உள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments