முன்னாள் அமைச்சர் மன்சூர் பிரசவித்த குழந்தைக்கு அதாஉல்லா எம்.பி உரிமை கோருகிறார் - அக்கரைப்பற்றில் எழும் எதிர்ப்பு குரல் !
நூருல் ஹுதா உமர்
முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூர் ஆரம்பித்து வைத்த அக்கரைப்பற்று வைத்தியசாலையை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தான் ஆரம்பித்து வைத்ததாகவும், அவரே தான் ஸ்தாபகர் எனவும் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது அப்பட்டமான பொய்யாகும். வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது. உண்மைகளை யாரையும் மறைக்க அனுமதிக்க முடியாது என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் அபிவிருத்தி சபையினர் தெரிவித்தனர்.
இன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் ஆலோசகரும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் முன்னாள் இணைப்பாளருமான எம்.ஐ.ஏ.ஆர். புஹாரி, ஓய்வு பெற்ற விவசாய போதனாசிரியர் எல்.எம். இஸ்மாயில், முஸ்லிம் வாலிப முன்னணியின் முன்னாள் தேசிய தலைவர் எம்.ஐ. உதுமாலெப்பை ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள், யுத்தம் காரணமாக சேதமாகி இருந்த பொலிஸ் நிலையம் அமைந்திருந்த இடத்தில் பல்வேறு முயற்சிகளை செய்து 1990.09.13 அன்று இந்த வைத்தியசாலையை உருவாக்கினோம். அப்போதைய அமைச்சர் மன்சூர் அவர்கள் இந்த வைத்தியசாலையை உருவாக்க முழுமையாக பணியாற்றினார். நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அப்போதைய சுகாதார அமைச்சர்களான ரேணுகா ஹேரத், ஏ.எச்.எம். பௌஸி, பீ. தயாரத்ன போன்றோர்கள் இந்த வைத்தியசாலைக்கு பெரியளவில் உதவி செய்தார்கள். கடந்த 2003ஆம் ஆண்டுவரை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த வைத்தியசாலையை கட்டியெழுப்பினோம். இதனையெல்லாம் மறைத்து வரலாற்றை பொய்யாக்கும் வேலையை அண்மையில் வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வில் அரங்கேற்றியுள்ளனர். இதனால் தான் உண்மைகளை எல்லோரும் அறிந்து கொள்ள நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளேன்.
இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவுக்கு கடந்த எட்டம்மாதம் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கொல்ளவினால் முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் சிபாரிசின் பேரில் நான் நியமிக்கப்பட்டும் இதுவரை இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் எவ்வித மேலதிக நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தகவலறியும் சட்டத்தின் மூலம் தகவல் கோரியும் முறையான பதில் கிடைக்கவில்லை. இந்த விடயத்தில் நீதி கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடும் வேலைகளை செய்து வருகிறேன். டாக்டர் ரக்கிஸ்து என்பவர் உண்மைக்கு புறம்பான தகவல்களை வைத்தியசாலை வரலாறாக உத்தியோகபூர்வ இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அவ்வளவும் அப்பட்டமான பொய்யாகும் என முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் ஆலோசகரும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்பாளருமான எம்.ஐ.ஏ.ஆர். புஹாரி தெரிவித்தார்.
மேலும், அதாஉல்லாவின் இணைப்பாளராக இருந்த காலத்தில் தனது வாக்குகளுக்காக பேரியல் அம்மையாருக்கு அநியாயம் செய்து நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு கையளிக்கவிடாது தடுத்தமை, வட்டமடு காணியில் அவர் நடந்துகொண்ட விதங்களை கண்டுகொண்டமையினால் அவரிடமிருந்து விலகிக்கொண்டேன் . அவரது இணைப்பாளராக இருந்து நான் எவ்வித சலுகைகளையும் அனுபவிக்காதவன் என்ற அடிப்படையில் அவரது பிழைகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டுகின்றேன் என்றார்.
அதாஉல்லா அரசியல் அதிகாரம் பெற்ற பின்னர் சில பௌதிக வளங்களை உருவாக்கியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக வைத்தியசாலையின் ஆரம்பகர்த்தா அவராகிவிட முடியாது. இந்த வைத்தியசாலையை உருவாக்க முன்னாள் அமைச்சர் மன்சூர் உட்பட பலரும் அனுபவித்த கஷ்டங்களை நாங்கள் ஆரம்பித்த கால உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் நன்றாக அறிவோம். ஒழுங்கான திட்டமிடல்கள் இல்லாது வைத்தியசாலையை சுருக்கி அதாஉல்லா மண்டபம், மாநகர சபை கட்டிடத்தை கட்டியுள்ளார்கள். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமைந்தால் இந்த வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக உருவாக்கும் எண்ணம் எங்களுக்கு இருந்தது.
வண்டிக்கு கீழால போகின்ற நாய் தான்தான் வண்டியை இழுத்து செல்வதாக எண்ணுவது போன்று சிலரின் நடவடிக்கைகள் இங்கு அமைந்துள்ளது. தமது சொந்த அரசியலுக்காக முன்னாள் அமைச்சர் தயாரத்னவை இனவாதியாக காட்டும் சிலர் அவர் முஸ்லிங்களுக்கு செய்த நல்லவிடயங்களை மறந்து விட்டார்கள் என்றனர்.
No comments