சில சட்ட விவகாரங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுங்கள் பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்
நீதியமைச்சரின் முன்மொழிவு தொடர்பான பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை(10) இடம் பெற்ற(10) விவாதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை.
(பாராளுமன்ற சமகால மொழிபெயர்பிலிருந்து...)
நீதியமைச்சர் தற்போதைய சட்டத்திற்கு பல சட்டத்திருத்தங்களை முன்வைத்திருக்கிறார். முக்கிய மறுசீரமைப்பு தொடர்பில் பல்வேறு விடயங்களை அவர் முன்மொழிந்திருக்கின்றார். தனது பிரேரணை பற்றிய விளக்கங்களை அவர் எடுத்துக் கூறினார்.
அது சம்பந்தமான விடயங்கள் பற்றி நான் இங்கு உரையாற்றுவதற்கு முன்னர், ஆரம்பத்தில் சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.அதாவது இவ் விடயங்கள் தொடர்பாக முரண்பாடான விடயங்களையே குறிப்பிட விரும்புகின்றேன்.
இலங்கை சட்டக்கல்லூரி பரீட்சைகளை நடாத்துவது தொடர்பில் சில விடயங்களைக் குறிப்பிடுகிறேன், அதில் நீதி அமைச்சருக்குப் பொறுப்பான விடயம் என்ற முறையில் சில தினங்களுக்கு முன்பு சபையிலும் இது சம்பந்தமாக நாம் கலந்துரையாடினோம்.
சட்டக் கல்லூரியினால் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை நாம் நோக்குகின்ற பொழுது தமிழ்,சிங்கள மொழிகள் மூலமான மாணவர்கள் விரிவுரைகளை ஆங்கிலத்தில் பெறுகின்றார்கள். இலங்கை சட்டக் கல்லூரியில் இவ்வாறு நடக்கின்றது. இவர்கள் பரீட்சை வினாத்தாள்களுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது மாணவர்களுக்கு பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றது, குறிப்பாக சுதேச மொழிகளில் கல்விகற்ற மாணவர்களுக்கு இது பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், முன்னாள் அமைச்சர் அலி சப்ரியும், சுதேச மொழிகளில் கல்வி கற்றவர்களில் முக்கியமானவர்களாக இருக்கின்றனர். நானும் முன்னாள் நீதியமைச்சராகப் பணியாற்றிருக்கிறேன். சொந்த அனுபவத்தின் அடிப்படையில் நோக்குகின்ற பொழுது, நான் கூட இலங்கை சட்டக்கல்லூரியில் பிரவேசித்த பொழுது, சில பாடங்களை தமிழ் மொழியில் எழுதியிருக்கின்றேன். ஏனென்றால்,தாய்மொழியில் பரீட்சைகளுக்குத் தோன்றுகின்ற பொழுது நம்பிக்கை அதிகரிக்கின்றது. ஆனால், தாய் மொழியில் பரீட்சைக்கு தோற்ற விரும்புகின்ற மாணவர்களுக்கு அந்த உரிமை தற்பொழுது மறுக்கப்படுகின்றது.
அவர்கள் தங்களுடைய ஆங்கிலத்திலானான ஆளுமைத் திறன்களை விருத்தி செய்து கொள்வதற்கு போதிய காலம் தேவைப்படும். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சரிடம் இந்தத் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
அவ்வாறே சட்டக்கல்லூரி போன்றவையும் இவற்றை மீள்பரிசீலனை செய்யும் என நான் நம்புகின்றேன்.பிரதம நீதியரசரும் இதை கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த சந்தர்ப்பத்தில், இந்த மாணவர்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும். இவர்கள் பரீட்சைக்கு தங்களுடைய தாய் மொழியில் தோற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும், குறிப்பாக "கிரகித்தல் "என்பதைப் பொறுத்தவரை, கேள்விகளுக்கு அவர்கள் சொந்த மொழியில் இலகுவாக விடையளிக்க முடியும். பலர் கிராம புறங்களிலிருந்து வருகை தந்திருக்கின்றார்கள். இது சம்பந்தமாக நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.
இதற்கு பல உதாரணங்களை நாம் காட்டமுடியும் எனவே இத்தகைய சந்தர்ப்பத்தில் இதனை சாதகமாகப் பரிசீலிக்குமாறு மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.
பிரதி சபாநாயகர் அவர்களே, தினசரிப் பத்திரிகையொன்றில்ஒரு விடயம் நவம்பர் 9ஆம் திகதி இடம் பெற்றிருந்தது. அதன்படி,
காதிகள் பதவிகளுக்கு முஸ்லிம் பெண்கள் விண்ணப்பிப்பதை உயர்நீதி மன்றம் மறுத்திருக்கிறது, இது சம்பந்தமாக பல முஸ்லிம் பெண்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்கள். பிரஸ்தாப வர்த்தமானிக்கு எதிராக சில விடயங்களை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.ஆனால், அந்த விடயத்தில் முஸ்லிம் ஆண்களை மாத்திரம்தான் காதிகளுக்காக பரிசீலிக்க முடியும் என்று உயர்நீதி மன்றம் குறிப்பிட்டது. இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், பெண்களுக்கு விண்ணப்பிப்பதற்குக்கூட தடைவிதிக்கவேண்டும் எனக் கூறுகின்றார்கள். இதனை மறுதலித்தமைக்கான எந்தவொரு காரணத்தையும் உயர்நீதி மன்றம் தெரிவிக்கவில்லை. இது மிக முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது.
உயர்நீதி மன்றம் சட்டத்தரணிகளின் வாதங்களைச் செவிமடுத்த பின்னர் , வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கு மறுதலித்திருக்கின்றது. ஆனால், உயர்நீதி மன்றம் அதற்கான எத்தகைய காரணத்தையும் காட்டவில்லை.
முன்னரும் இவ்வாறு நடந்திருக்கின்றது.உதாரணமாக, அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தம் தொடர்பில் சட்டத்தரணிகளின் வாதங்களைக் கேட்டறிந்ததன் பின்னர் உயர் நீதி மன்றம் எத்தகைய காரணத்தையும் காட்டாமல் அதை மறுதலித்திருக்கின்றது. இது ஒரு நகைப்புக்கிடமான விடயமாகக் காணப்படுகின்றது.
இத்தகைய முக்கிய விடயங்களை அவர்கள் பரிசீலிக்கின்ற பொழுது, ஆகக் குறைந்தது சுருக்கமாவது அதற்குரிய காரணங்களைத் தெரிவித்திருக்கவேண்டும், ஏன் அனுமதிக்கவில்லை என்பதை சுருக்கமாவது உயர்நீதி மன்றம் தெரிவித்திருக்க வேண்டும் .
இது ஒரு முக்கியமான விடயமாகவிருக்கின்றது. பொதுவாக மூல நியாயாதிக்கத்தின் படியும் கூட இந்த விடயங்கள் பார்க்கப்படவேண்டும். அரசியல் அமைப்புடன் தொடர்புடைய விடயங்களாக இருக்கின்ற காரணத்தினால், பொதுவாக இந்த சபையில் முன்வைக்கப்படுகின்ற சட்டமூலங்களின் அரசியலமைப்புத் தன்மையைப் பார்க்கின்ற போது, அதற்கான உண்மையான நியாயாதிக்கம் உயர்நீதி மன்றத்திற்குத்தான் வழங்கப்பட்டிருக்கின்றது.
இங்கு உயர் நீதி மன்றத்திற்கு அப்பால்,மேன்முறையீடு செய்கின்ற அதிகாரம் மனுதாரர்களுக்கு இல்லை. இந்த நாட்டில் உயர்நீதிமன்றம்தான் அதி உயர் நீதி நிறுவனமாகக் கருதப்படுகின்றது. அதன்படி உயர்நீதி மன்றம் மறுதலித்தாலும்கூட அதற்குரிய காரணத்தைத் தெரிவிக்கவேண்டும். இங்கு கருத்துக்களைக் கேட்டறிந்ததன் பின்னர் கூட, அதற்குரிய காரணங்களை உயர்நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. இது ஒரு திருப்தியற்ற நிலைமையாகவே காணப்படுகின்றது. எனவே, இவற்றை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பொறுத்தவரை நீதியமைச்சரிடம் ஒரு விடயத்தை நான் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன் . சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் உடைய அறிக்கை இதுவரை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அவற்றை ஆராய்ந்து பார்க்கவேண்டும். முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு அவசியமான சகல விடயங்களும் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, காலதாமதமின்றி உடனடியாகக் கொண்டுவரப்படவேண்டும் என்பதையே நான் பார்க்கின்றேன். அதன் அடிப்படையில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் ; முரண்பாடுகளையும் சீர்செய்ய முடியும். முஸ்லிம் தனியார் சட்டத்தில் உரிய திருத்தங்களை கொண்டுவரமுடியும் என நினைக்கின்றேன்.
எம்.என்.எம்.யஸீர் அறபாத் -ஓட்டமாவடி.
No comments