Breaking News

கல்முனை இஸ்லாமாபாத் சாதனையாளர்களுக்கு ஊர்வலத்தில் பலத்த பாராட்டும், கௌரவிப்புக்களும் !

(மாளிகைக்காடு, கல்முனை நிருபர்கள்)

பாடசாலையில் முதன்முதலாக க.பொ.த சாதரண தரப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அன்மையில் வெளியான க.பொ.த.(சா/த)ப் பரீட்சை  பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்துப் பாடங்களிலும் 9ஏ சித்தியை பெற்று கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட   இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவன் என்.எம். நப்றத் மற்றும் 7ஏ ,2பீ சித்தியை பெற்ற மாணவி எஸ். எச்.எப். ஹீறா ஆகியோர் சாதனை புரிந்திருந்தனர். இவர்களை பாராட்டி கெளரவிக்கும் ஊர்வலம் பாடசாலை அபிவிருத்தி குழு, முகாமைத்துவ குழு, பழைய மாணவர்கள் சங்கம், பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிஸாத் தலைமையில் இன்று (2022.11.30) இடம்பெற்றது. 


கல்முனை வலயக் கல்வி அலுவலக முன்றலில் இருந்து கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் மாணவர்களுக்கு தனது வாழ்த்தினை  தெரிவித்து மலர் மாலை அணிவித்து கௌரவித்துப் பாராட்டி இந்த ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார். கல்முனை மாநகரப் பிரதேசங்களில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்ட மாணவர்களுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் அலுவலகம், இப்பாடசாலையை ஸ்தாபித்த முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் குடும்பத்தினர் அவர்களது அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்று பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தனர். 


கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ. கலீலுர் ரஹ்மான், சந்திரசேகரம் ராஜன், கதிரமலை செல்வா, எம்.ஐ.எஸ். சமீனா, எம்.ஐ.எம். முஹம்மட் மனாப் (முன்னாள் உறுப்பினர்) ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறி கௌரவமளித்ததுடன், பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள், பிராந்திய பாடசாலை முகாமைத்துவ குழுவினர், கல்முனை மாநகர மார்கட் வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், ஊர் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் இம்மாணவர்களை கௌரவித்து மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, பரிசில்கள் வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.  


இதன் போது ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவைப் பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்,பகுதித் தலைவர்கள், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கல்முனை இணைப்பாளர் எம்.என்.எம். அப்ராஸ், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு, பாடசாலை முகாமைத்துவக் குழு, பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். 


குறித்த பாடசாலையானது முதல் தடவையாக கா.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றி கணிதம் உட்பட ஆறு முக்கிய பாடங்களில் 100 சதவீத சித்திகளைப் பதிவு செய்துள்ளதுடன் கல்முனைக் கோட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், கல்முனை வலய மட்ட பாடசாலைகள் தரப்படுத்தலில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.















No comments

note