சாய்ந்தமருதில் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, உலமாக்கள், முஅத்தீன்களைக் கௌரவிக்கும் நிகழ்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது மாளிகைக்காடு பள்ளிவாசல்களில் சன்மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் கண்ணியத்துக்குரிய உலமாக்கள் மற்றும் முஅத்தீன்களைக் கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது மஸ்ஜிதுல் சுஹதாப் பள்ளிவாசலில் நேற்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் எல். நாஸ்சரின் முயற்சியினால் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல்களில் நிர்வாக எல்லைக்குள் காணப்படுகின்ற 28 பள்ளிவாசல்களில் சன்மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் கண்ணியத்துக்குரிய உலமாக்கள் மற்றும் முஅத்தீன்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலின் செயலாளர் ஐ.எல்.எம் மன்சூர் மற்றும் இந்நிகழ்விற்குப் பூரண அனுசரணை வழங்கிய பெமிலி ரிலீப் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத் ஆகியோருடன் சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளீர், சாய்ந்தமருது மஸ்ஜிதுல் சுஹதாப் பள்ளிவாசலின் செயலாளர் எஸ்.எம். நசீர், சாய்ந்தமருது சமூக சேவை அமைப்புகளின் உறுப்பினரும் ஊடகவியலாளருமான யூ.கே காலிதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருதில் மாளிகைக்காடு பள்ளிவாசல் நிர்வாக எல்லைக்குள் கடமையாற்றுகின்ற அனைத்து முஅத்தீன்மார்களும் உலமாக்களும் மற்றும் பள்ளிவாசல்களில் உள்ளகக் கடமைகளை மேற்கொள்கின்ற சிற்றூழியர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments