கடையாமோட்டை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் அணி செம்பியனானது
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மதுரங்குளி மீடியாவினால் நடாத்தப்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கிடையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (06) கடையாமோட்டை தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போது கடையாமோட்டை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் அணி செம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் 7 பாடசாலைகள் பங்குபற்றி இறுதி சுற்றுக்கு பு/கடையாமோட்டை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் அணியும் பு/புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர்கள் அணியும் தெரிவானது.
இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற கடையாமோட்டை தேசிய பாடசாலை அணி களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. துடுப்பெடுத்தாடிய புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலய அணி 5 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 54/2 ரண்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கடையாமோட்டை தேசிய பாடசாலை அணி 1விகெட்டை இழந்து 18 பந்துகளுக்கு முகம் கொடுத்து வெற்றி இலக்கை அடைந்தது 55/1. இவ்வணிக்கு நுஸ்லான் ஆசிரியர் 32 ரண்களை பெற்றுக் கொடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
பாடசாலையின் முதல்வர் எம்.எச்.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ், சிறப்பு அதிதியாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார், கௌரவ அதிதிகளாக கடையாமோட்டை பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவருமான ஏ.எச்.எம். ஹாரூன், பாடசாலை விஞ்ஞான அபிவிருத்தி குழுச் செயலாளர் சீ.எம். தாவூத், நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய எம்.ஆர்.எம்.இக்ரம், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் தமிழ் மொழிக்கான ஆசிரியர் ஆலோசகர் திருமதி கீத்தா அவர்களும் கலந்து கொண்டார்.
கடையாமோட்டை தேசிய பாடசாலை ஆசிரியர் அணியின் வெற்றிக்கு அணியின் முகாமையாளர் ஜே. முபீன் ஆசிரின் வியூகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
இப்போட்டி நிகழ்ச்சிக்கு பிரதான அனுசரணை MRN & SON'S TTRANSPORT SERVICE உரிமையாளர்களான எம்.ஆர்.அக்ரம்கான் மற்றும் எம்.ஆர்.எம். இக்ரம் ஆகியோர்.
No comments