"இலங்கையை பசுமையாக்குவோம்" எனும் கருப்பொருளுடன் பதுளையிலிருந்து கல்முனை நோக்கி சைக்கிள் அஞ்சலோட்டம் !!
நூருல் ஹுதா உமர்
மருதமுனை சைக்கிளிங் கிறீன் (CYCLING GREEN) அமைப்பு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துடன் இணைந்து " இலங்கையை பசுமையாக்குவோம்" (“Greening Sri Lanka") எனும் கருப்பொருளின் கீழ் இம்மாதம் 08 ம் திகதி சனிக்கிழமை சைக்கிள் அஞ்சலோட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பொன்று இன்று மருதமுனையில் இடம்பெற்றது.
இயற்கையின் மகத்துவத்தை பேணுதல், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்துதல், விதைப்பந்துகளை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குதல், சைக்கிளோட்டத்தின் பயன்களை வெளிகொண்டுவருதல் போன்ற பல காரணங்களை முன்வைத்து ”இலங்கையை பசுமையாக்குவோம்" என்ற தொனிப்பொருளில் சைக்கிள் அஞ்சலோட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை பதுளையில் இது தொடர்பிலான விளக்க நிகழ்வுடன் ஆரம்பமாகும் இந்த அஞ்சலோட்டம் சனிக்கிழமை காலை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பித்து, பதுளை , மகியங்கனை, பதியதலாவ, மகாஓயா, செங்கல்லடி, மட்டக்களப்பு ஊடாக கல்முனையை வந்தடைய உள்ளது. இந்த நிகழ்வில் மருதமுனை சைக்கிளிங் கிறீன் கழகத்தைச் சேர்ந்த சுமார் 12 வீரர்கள் பங்குபற்றுகின்றார்கள். இது தொடர்பிலான சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ் திணைக்கள உதவிகளும், இன்னும் பலரின் உதவிகளும் இந்த சைக்கிள் அஞ்சலோட்ட நிகழ்வுக்கு கிடைக்கும் என்றும் நம்புகின்றோம்.
வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வி திணைக்கள உயரதிகாரிகள், கல்விமான்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரையும் உள்ளடக்கிய எங்களின் அமைப்பினால் பல்வேறு கருப்பொருளின் கீழ் இனிவரும் காலங்களிலும் இந்த சைக்கிள் அஞ்சலோட்ட நிகழ்வுகளை பெரியளவில் செய்ய எண்ணியுள்ளோம். இயற்கையை பேணுதல், சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்துதல், மரங்களை பற்றியும் விதைப்பந்துகளை பற்றியுமான விழிப்புணர்வை உண்டாக்குதல், சைக்கிளோடுவதின் பயன்களை வெளிகொண்டுவருதல் போன்ற முக்கிய பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க காத்திருக்கின்றோம் என்றனர்.
மருதமுனை சைக்கிளிங் கிறீன் அமைப்பின் சார்பில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக பதிவாளர் எம்.எப். ஹிபதுல் கரீம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அம்ரிதா ஏ.எம்.றியாஸ் அகமட் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
No comments