Breaking News

விடியலின் விருட்சம் அஷ்ரஃப்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் -ஓட்டமாவடி.

ஒரு சமூகத்தின் விடியலுக்காய்ப் போராடி, விருட்சத்திற்கு உரமாய்ப்போன ஒரு தலைவனின்  நினைவுகள்.


இலங்கையில் மூன்றாவது பெரும்பான்மையான முஸ்லிம் சமூகம் தொன்று தொட்டு இந்த நாட்டிற்கு விசுவாசமாகவும், நாட்டின் அபிவிருத்தி, வளர்ச்சி போன்றவற்றில் கணிசமானளவு பங்களிப்புச் செய்திருக்கிறது. 


இந்த சமூகத்தில் பலர் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வரலாறும், மன்னர் காலந்தொட்டு நடைபெற்று வந்திருக்கிறது.


இவ்வாறான சமூகம் பெரும்பான்மைக் கட்சிகளோடு இணைந்தே தங்களின் அரசியல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு சென்றது. அதே நேரம், தமிழர்கள் தங்களின் உரிமைகளுக்காக தனிக்கட்சி அமைத்து போராடிக்கொண்டிருந்தார்கள். காலவோட்டத்தில் அரசியல் போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாற்றம் கண்டது.


ஆயுதப்போராட்டங்களில் முஸ்லிம் இளைஞர்களும் நாட்டம் கொள்வதைத் தடுக்குமுகமாக அரசியல் நீரோட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களையும் இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.


காத்தான்குடி மண்ணில் ஒரு அமைப்பாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கம் அஷ்ரஃப்பிடம் 1980/81 காலப்பகுதியில் ஒப்படைக்கப்பட்ட போது, 1986ல் அஷ்ரஃப்பினால் அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அன்றிலிருந்து தொடங்கிய சமூக விடுதலைப்போராட்டம் இன்று வரை பல சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


அன்று, இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் அடிக்கடி பேரினவாதிகளாலும் பயங்கரவாதிகளாலும் துன்பங்களை எதிர்நோக்க நேர்ந்தது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பேரின கட்சிகளைப் பிரநிதித்துவம் செய்த முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த தலைவர்கள் எதனையுமே செய்ய முடியாத சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்திடம் அபிப்பிராயம் பெறப்படாமல் தமிழர் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 


இதன் மூலமாக இலங்கை அரசியல் அமைப்பில் 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் வடக்கு, கிழக்கு  இணைக்கப்பட்டு ஒரு மாகாணமாக அறிமுகப்படுத்தப்பட்டது.


தமிழர் தரப்பு முஸ்லிம்கள் தனித்துவமான சமூகம் என்பதை ஏற்க மறுத்து, தமிழ்ப்பேசும் சமூகமாகக் காட்டமுனைந்தது. இதனால் உரிமை இழந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாற்றம் பெறும் போது தான் பலர் விழித்துக் கொண்டு தனி வழி அரசியல் அல்லது தனிக்கட்சி அரசியல் தொடர்பாக பல முயற்சிகள் செய்தும் அவை பெரியளவில் வெற்றி பெறாத நிலையில் தான் கிழக்கு மண்ணிலிருந்து ஒரு குரல், அது தான் அஷ்ரஃப் எனும் உரிமைக்குரல் ஓங்கி ஒலித்தது.


அரசியல் பயணத்தின் ஆரம்ப கால கட்டத்தில்  உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தன்னைக் கொல்வார்கள் என்று தெளிவாகத் தெரிந்த நிலையிலும், பல தடவைகள் தன்னைக்கொல்ல முயற்சிகள் நடந்த சந்தர்ப்பத்திலும் சமூக விடுதலையை நோக்காகக் கொண்டு இந்த பயணத்தைத் தொடர்ந்திருந்தார்.  


அரசியலில் மூத்தவர்கள், பேரினக்கட்சித் தலைவர்கள் அஷ்ரஃப்பின் போராட்டத்தை நக்கலாகப் பார்த்த போது பிற்காலத்தில் அவர்களுக்கே விக்கல் வரச்செய்தவர். 


இறை துணையோடு போராளிகளின் பலத்தோடு களம் கண்டவர். பிற்காலத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக அரசியலில் முஸ்லிம் சமூகத்தை மாற்றியவர். தனித்துவம், உரிமை என முஸ்லிம்களும் இந்த நாட்டில் வாழும் தனி இனம் என அடையாளப்படுத்தினார். முஸ்லிம் சமூகத்திற்கு தங்களின் பலத்தை தங்களையே உணர்ந்து கொள்ளச்செய்தார்.


தமிழ்ச்சமூகத்தோடு நட்புறவு பாராட்டினார். அவர்களின் அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்காது முஸ்லிம் சமூகத்தின் நியாயமான உரிமைகளைக்கோரி நின்றார். 


ஜனாதிபதி சட்டத்தரணி, கவிஞர், பாடலாசிரியர், பேச்சாளர் எனப்பல ஆளுமைகளைக் கொண்டவர் அரசியலிலும் முக்கிய அமைச்சுக்களால் அலங்கரிக்கப்பட்டார். அரசியலில் அவரின் அதிகார காலம் குறுகியதாக இருந்தாலும், இன்றும் நினைத்துப் பேசுமளவிற்கும் வியந்து பார்க்குமளவிற்கும் தடம்பதித்து விட்டுத்தான் மறைந்திருக்கிறார்.


இலங்கை அரசியல் வரலாற்றிலும் முஸ்லிம் சமூக அரசியலிலும் தனக்கான இடத்தைப்பிடித்திருக்கிறார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் வளர்த்த மரத்தில் தான் பலர் அரசியல் முகவரி பெற்றிருக்கிறார்கள். அதிலும் சிலர் நோகாம நொங்கு குடிக்கிறார்கள்.  


அன்று அஷ்ரஃப்பும் அவரோடு இணைந்து பலர் செய்த உயிர், உடமை, பொருளாதாரம் போன்ற தியாகங்களால் தான் இன்றும் இந்த இயக்கம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 


இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல் தொய்வுநிலையை அடைந்திருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையேற்று பல சவால்களுக்கு மத்தியில் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் நாட்டிற்காக நாட்டு மக்களுக்காக தன் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் தலைவராக அன்று தலைவர் அஷ்ரஃப் அடையாளங்காட்டிய தலைவர் ரவூப் ஹக்கீம் திகழ்கிறார். 


இன்றைய முஸ்லிம் அரசியல் தொய்வுநிலையிலிருந்து மீட்டு அடுத்த சந்ததிகளுக்கு சமூக அரசியலில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக எதிர்காலச் செயற்பாடுகளை ரவூப் ஹக்கீம் முன்னெடுக்க வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பாகும் என்பதை இந்த நாளில் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.


அஷ்ரஃப் என்ற விருட்சம்  22 வருடங்கள் எம்மை விட்டுப்பிரிந்தாலும் எம் மனங்களில் வாழும் தலைவருக்காகப் பிரார்த்திப்போம்…!




No comments

note