போதைக்கு அடிமையான பிள்ளைகளை அதிலிருந்து மீட்டெடுப்பதை விட, போதைப் பொருட்களின் பக்கம் செல்வதிலிருந்து பிள்ளைகளைத் தடுத்து நிறுத்துவது எளிதானது : - வைத்திய அதிகாரி முஹம்மது தில்ஷான் தெரிவிப்பு!.
நூருள் ஹுதா உமர்
போதைக்கு அடிமையான பிள்ளைகளை அதிலிருந்து மீட்டெடுப்பதை விட, போதைப் பொருட்களின் பக்கம் செல்வதிலிருந்து பிள்ளைகளைத் தடுத்து நிறுத்துவது எளிதானது : - கல்முனை பிராந்திய பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி -முஹம்மது தில்ஷான் தெரிவிப்பு!.
போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பது மிக இலகுவான காரியம் என்றும், அதற்குத் தான் மருத்துவர்கள் உள்ளார்களே என்றும் எண்ணி, உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அசிரத்தையாக இருந்துவிடாதீர்கள். போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதென்பது சாதாரண காரியமல்ல; போதைக்கு அடிமையானவரின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்காத பட்சத்தில், அது வெற்றுக் கைகளால் மலையைப் பிளப்பது போன்ற காரியமாகும் என கல்முனை பிராந்திய பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.என். முஹம்மது தில்ஷான் தெரிவித்தார்.
அவரது அறிக்கையில் மேலும், சாதாரணமாக இளைஞர்கள் கட்டுக்கடங்காத காளைகள் என்றே வர்ணிக்கப்படும் நிலையில், போதை தலைக்கேறிய இளைஞர்களை கட்டுவதற்கு பிடிப்பது கூட கடினமான காரியமாகும்.
அதுமட்டுமல்லாமல், போதைக்கு அடிமையாகிய ஒருவரை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கிடையில், பலவற்றையும் நீங்கள் இழந்திருப்பீர்கள். உங்கள் செல்வங்கள் வீணடிக்கப்பட்டிருக்கும்; உங்கள் நேரம் விரயம் செய்யப்பட்டிருக்கும், உங்கள் கௌரவம் தெருவிற்கு வந்திருக்கும்.
எனவே, எமது பிள்ளைகள் விடயத்தில் மிகவும் கவனமாக இருப்பது பெற்றோராகிய எமது கடமையாகும். போதைக்கு அடிமையான பின், நமது பிள்ளைகளை அதிலிருந்து மீட்டெடுப்பதை விட, போதைப் பொருட்களின் பக்கம் செல்வதிலிருந்து எமது பிள்ளைகளைத் தடுத்து நிறுத்துவது ஓரளவு எளிதானதும், சாமர்த்தியமானதுமான காரியமாகும்.
எமது பிள்ளைகளுடன் பெற்றோராகிய நாம், எப்போதும் கனிவான வார்த்தைகளைப் பேசுவதோடு, அவர்களுடன் ஒரு சுமுகமான தொடர்பாடலைப் பேணி வர வேண்டும். அனேகமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் காரசாரமாகப் பேசுவதாலும், அவர்களுடன் ஒரு சுமுகமான உறவைப் பேணாமையாலும், அவர்கள் பெற்றோரோடுள்ள நெருக்கத்தைக் குறைத்து, நண்பர்களுடனான நெருக்கத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள்.
தவறான நடத்தையுடைய நண்பர்களே, பொதுவாக நமது பிள்ளைகளையும் தவறான நடத்தைகளின் பக்கம் இட்டுச் செல்கின்றனர்.
தினமும் நமது பிள்ளைகளுடன் ஒரு, சில நிமிடங்களையேனும் ஒதுக்கி அன்றைய நாளில் இடம்பெற்ற சம்பவங்கள், நாளைய நாளுக்கான திட்டமிடல்கள் போன்றவற்றை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான சூழலை நாம் அமைத்துக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளது விடயங்களைக் கேட்டறிவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், நமது விடயங்களையும் அவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பிள்ளைகளுக்கும் நமக்குமிடையில் ஒரு அன்னியோன்னியம் வளர்க்கப்படுவதோடு, வாழ்வின் முக்கிய விடயங்களை நம்முடன் அவர்கள் பகிர்ந்து கொள்வதற்கான சூழல் உருவாக்கப்படும்.
பிள்ளையின் நண்பர்வட்டம் குறித்து சரியான புரிதல் நமக்கிருக்க வேண்டும். நமது நண்பர்கள் யார் என்பதைப் பிள்ளைகள் அறிவது போன்று, நாமும் அவர்களது நண்பர்களை அறிந்து வைத்திருப்பதோடு, அந்நண்பர்களில் சிலருடனேனும் நாம் அறிமுகமாகியிருப்பதும், அவர்களைப் பற்றி அறிந்திருப்பதும் அவசியமாகும்.
பிள்ளையின் தினசரி நடவடிக்கைகள் குறித்து அவதானமாயிருப்பது, மிக முக்கியமானதாகும். அதற்காக ஒரு உளவாளி போல, ஒவ்வொரு நிமிடமும் பிள்ளை என்ன செய்கிறான் என சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதல்ல; அது ஆபத்தானது; நமது பிள்ளையை நம்மை விட்டு அது தூரப்படுத்தி விடும். எனவே இத்தகைய அவதானம் மிதமானதாயிருக்க வேண்டும். அவர்கள் வழமையாக பயணிக்கும் இடங்கள் எத்தகையது? அவ்விடங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா? அவர்களின் சாதாரண நடத்தைகள் எத்தகையவை? அவர்களின் நடத்தைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா? போன்றவற்றை அவதானித்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ச்சியாக பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தேவையான சந்தர்ப்பங்களில் மட்டும், பிள்ளைகளுக்குப் பிடித்த மொழியில் நமது கருத்துக்களை எத்தி வைக்க வேண்டும். பிள்ளைகளில் ஏதேனும் நடத்தை மாற்றங்களை அவதானித்தால், அவற்றை உரிய நேரத்தில் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி கோபப்படுவது, வீட்டிற்குத் தாமதமாய் வருவது, நேரத்திற்கு சாப்பிடாமை, அறையினுள் சென்று பூட்டிக் கொள்வது, நம்மை ஒழுங்காக முகங்கொடுத்து பேசாமலிருப்பது போன்ற நடத்தை மாற்றங்கள் உடன் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பிள்ளைகளின் நடத்தை மாற்றங்களை அணுகுவதில் சிக்கல்கள் இருப்பின், தயக்கமின்றி உடன் ஒரு மருத்துவரை அல்லது உளவளத்துணையாளரை அணுகுவது மிக முக்கியமானதாகும். இத்தகைய இன்னும் பல விடயங்களைத் தேடியறிந்து, எமது எதிர்கால சந்ததியினரை போதைப்பொருட்களுக்கு அடிமையாகாத சமுகமாக வளர்த்தெடுப்பது நமது கைகளில் தான் உள்ளது என்றார்.
No comments