Breaking News

பயங்கரவாத தடைச் சட்டம் அரசியல் நோக்கங்களுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. -முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

 (தொகுப்பு: எம்.என்.எம்.யஸீர் அறபாத் , ஓட்டமாவடி )

கடந்த ஞாயிற்றுக்கிழமை(4.9.2022) தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நேர்காணலில் கூறியவை.


கேள்வி : ரவூப் ஹக்கீம் அவர்களே, முன்னாள் ஜனாதிபதி ஐம்பது நாட்களுக்கு பின்னர் மீண்டும் நாடு திரும்பியிருக்கிறார். அவருடைய மீள்வருகை கூறுகின்ற செய்தியாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமை எதனைக் காண்கிறது? அதேவேளை, முன்னாள் ஜனாதிபதியுடைய மீள் வருகை நாட்டில் ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடி நிலையை தணிக்குமா, உக்கிரப்படுத்துமா? தமிழ் பேசும் சமூகங்களுக்கு ஏதேனும் அனுகூலங்களைக் கொண்டுவருமா?


பதில் :முன்னாள் ஜனாதிபதி இந்த நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர் எனக் கூறப்படுகிறது.அவர் தன்னுடைய சகோதரரின் ஆட்சியில் அதி உச்ச அதிகாரத்தில் இருந்தவர். அவருக்கு நாட்டு மக்களிடத்தில்  பெரிய கௌரவம் இருந்து வந்திருந்தது. ஆனால், அவர் இந்த நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்த விவகாரம்  மற்றும் அதை அவர் எவ்வாறு எதிர் கொண்டார் என்று பார்க்கின்றபோது அவர்  கோழைத்தனமாக நடந்து கொண்டார் என்றுதான் எல்லோரும் பார்க்கிறார்கள்.


அந்த மக்கள் எழுச்சிக்கு முன்னால் நின்றுபிடிக்கமுடியாமல் அவர் நாட்டை விட்டே போனார் என்பது ஒரு புறம் இருந்தாலும், கள நிலைவரத்தின் யதார்த்தத்தை கடைசி நிமிடம் வரை புரிந்து கொள்ளமுடியாதவராகவே இருந்திருக்கிறார் என்ற விடயம்தான் எல்லோருக்கும் அவரைப் பற்றிய அனுமானத்தில் ஒரு பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவது, அவருடைய இழந்த மரியாதையை மீண்டும் பெற்றுக் கொள்வது என்பது சம்பந்தமாக நான் இங்கு எதுவும் எதிர்வுகூற முன்வரவில்லை.  ஆனால், இந்த நாட்டில்  இருக்கின்ற பெருந்தேசியவாதக்  கழுகுப் பார்வையுள்ள பலர் இவருடைய ஆளுமைக்கு நேர்ந்திருக்கிற ஆபத்து தங்களையும் பாதிக்கும் என்ற ஒருவிதமான பீதியில், அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். அதற்காக இவரைத் திருப்பி நிமிர்த்தி அரசியலுக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்ற ஓர் உள்நோக்கம்  சிலருக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். 


எனவே இது சம்பந்தமாக நாங்கள் அவதானமாக இருக்கவேண்டும்.யாருக்கும் இந்த நாட்டில் அரசியல் செய்வதற்கு முழு சுதந்திரமும் இருக்கிறது .ஆனால் ,இந்த நாட்டின் அரசியலையும், சமூக நல்லிணக்கத்தையும் குட்டிச் சுவராக்கிய இந்த பெரும்தேசியவாத கடும்போக்காளர்களைக் இந்த கும்பல் பலவாறாக இருக்கிறது. இதில் யார்,யார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவர்கள் எல்லோருமாகத்தான் இந்த முன்னாள் ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு இந்த நாட்டின் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையை ஒரு துருவ நிலைக்குக் கொண்டு போனார்கள்.


 அதன் உச்சக் கட்டமாகப் பல படுமோசமான நிகழ்வுகள் நடந்து முடிந்துவிட்டன. இனி அவருடைய முகாமைத்துவம், ஆட்சி, அரசியல் முதிர்ச்சி என்ற விடயங்கள் எல்லாம் இன்று  கேலிக்குரிய விடயமாக பேசப்படுவதாயினும் கூட அவரை ஒரு மிகப் பெரிய அடையாள புருஷராக வைத்து ஆட்சிக்கு கொண்டுவந்த கும்பல்களில் ஒரு சாரார் அவரால் தங்களுடைய இந்த சிந்தனாவாத கொள்கைவாதத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதால் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற ஒரு நிலையில் சில நேரம் அவருக்கு திரும்ப ஒட்சிசன் கொடுத்து உயிர்ப்பித்து கொண்டுவருவதற்கு முயற்சிகள் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


கேள்வி :  இன்னும் சில விடயங்கள் சம்பந்தமாகப் பேசி வருகிறார்கள், முன்னாள் ஜனாதிபதி மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருகைதர இருக்கிறார், பிரதமர் பதவி கொடுக்கப் போகிறார்கள் என்றல்லாம் சொல்கின்றபோது, அது சம்பந்தமான சங்கதிகள் எவையேனும்   தங்களுடைய காதுகளை எட்டியிருக்கின்றனவா?


பதில்: என்னைப் பொறுத்தமட்டில் ராஜபக்ஷ குடும்ப உள்விவகாரத்தில் என்ன முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றை வெளியுலகிற்கு கொண்டுவந்து கொட்டித் தீர்க்கின்ற நிலைவரங்கள் முன்னைய காலங்களில் இருக்கவில்லை ஆனால்,  கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்த பிறகுதான் அந்த பிளவு,பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பூதாகரமாக வடிவெடுத்தன. பாராளுமன்றத்தில்  ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்கள் சிலரும் இந்த விடயங்களைச் சற்று வெளிப்படையாகவே தொட்டுப் பேசியும் இருக்கிறார்கள். குறிப்பாக சமல் ராஜபக்ஷ அதை விமர்சித்திருந்தார் .ஒரு தடவை அவருடைய நடவடிக்கைகள் பற்றி மூத்த சகோதரர் என்ற அடிப்படையில் சிலவற்றைப் பேசியிருந்தார்.  


அவ்வாறே, உறவினரான வேறு உறுப்பினர்  ஒருவர் வெளிநாட்டில் தூதுவராகவிருந்தவர் இணையதளங்களில் மிகவும் மோசமான முறையில் "இவர் திரும்ப அரசியலுக்கு வந்துவிடவே கூடாது ; வந்தால் ஆபத்து" என்று கடுமையான விமரிசனங்களைச் செய்கிறார் . அந்த உக்ரேன் அரசோடு நடந்த மிக் விமான கொடுக்கல்,வாங்கல்கள் சம்பந்தமாகவும் நேரடியான,மறைமுகமான குற்றச்சாட்டுகளும் வெளிப்படையாக குடும்ப அங்கத்தவர்களால் பேசப்படுகின்ற ஒரு விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது 


எனவே, இவை இதற்கு முன்பு யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத விடயங்களாகும். அதன் உண்மைத்தன்மை பற்றி இங்கு நான் பேசவரவில்லை. இவ்வாறான  உட்பூசல்கள் எவ்வாறு உருவெடுக்கின்றன என்று பார்க்கிறபோது, இப்போது நேரடி அரசியலிருந்து ஒதுங்கியிருக்கின்ற ஒருவரை திருப்பி உயிர்பிப்பதற்கு ஒரு குழு முயற்சித்தாலும் கூட, குடும்பத்திற்குள்ளேயே அதற்கு அங்கீகாரம் இருக்குமா என்பது குறித்த ஒரு சந்தேகம் எனக்கிருக்கிறது.


கேள்வி :  "கோட்டா கோ கம' போராட்டம் உக்கிரமடைந்ததைப் போன்று, அதற்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட "ரணில் கோ கம "என்ற  போராட்டமாக இருந்தாலும் சரி, "நோ டீல் கம" என்று முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக இருந்தாலும் சரி அந்த அளவு உக்கிரமடைந்த ஒரு நிலைமையை விடவும், நீர்த்துப் போன ஒரு நிலையைத்தான் காணக்கூடியதாகவிருந்தது. இதே வேளையில் இடைக்கால வரவு செலவு திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. தற்போதிருக்கின்ற ஜனாதிபதியினுடைய செயற்பாடுகள் சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமையும், கட்சியும் திருப்தியான ஒரு மனநிலையோடு இருக்கிறீர்களா? அதனைத்தாண்டி இடைக்கால வரவு, செலவு திட்டத்தில் தங்களுக்கு தென்படக்கூடிய ஏதேனும் அனுகூலங்கள்  இருப்பதாகக் காண்கிறீர்களா?


பதில் : நாடு எதிர்நோக்கியிருக்கின்ற மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து  மீளவேண்டுமாகவிருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  குழுவினர் அண்மையில் இங்கு வந்த பின்னர் அவர்களோடு நடந்த பேச்சுவார்த்தைகளின் பிரதிபலிப்பாக சில விடயங்களை அரசாங்கம் செய்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. அதை ஆளும் கட்சியினரும்,எதிர்க் கட்சியில் இருக்கின்ற நாங்களும் முழுக்க முழுக்கப் புரிந்துவைத்திருக்கிறோம். 


இது ஒரு சாதாரணமான காலத்தில் நிறைவேற்றப்படுகின்ற  ஒரு விடயமல்ல. அது மாத்திரமல்ல, இது ஓர் இடைக்கால வரவு செலவுத் திட்டம் மாத்திரம்தான், இருக்கிற நான்கு மாதகாலத்திற்கு செலவினங்கள் என்று அரசாங்கம் ஒதுக்கியிருந்த பணம் எதையுமே செலவிட முடியாத நிலைமையில், அதாவது அபிவிருத்திக்கு என்று கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கிவைத்திருந்த நிலைமையில் , எல்லா இடங்களிலும் வீதி போடுவதும்,பாலம் போடுவதும்தான் இவர்களது வேலையாக இருக்கிறது.அவற்றிலிருந்து எவ்வளவு தொகையைச் சுருட்டிக்கொள்ளப் போகிறார்கள் என்ற விடயம்தான் பரவலாகப் பேசப்படுகிறது . எனவே, இவ்வாறாக மிக மோசமாக இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல் சம்பந்தமான கதைகள் நிறையவே உலாவித் திரிகின்றன.


 அதுமட்டுமல்ல , இந்த அரசாங்கம் கடந்த வரவு,செலவு திட்டத்தில் அதாவது ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த உடனேயே விட்ட மிகப் பெரிய பிழைதான் அரச வருமானத்தை அப்படியே இல்லாமல் செய்தது. கிட்டத்தட்ட 600,700 பில்லியன் ரூபாய்கள் வருமானம் வருமானவரித் திணைக்களத்திற்கு இல்லாமல் செய்யப்பட்டது.அதன் பிரதிபலிப்புதான் நாங்கள் இப்போது எதிர்நோக்குகின்ற இந்த பிரச்சினையின் மூல காரணமாகும். அதற்கு முன்பிருந்தே பிரச்சினைகள் தலைதூக்க  ஆரம்பித்திருந்தன.


 குறிப்பாக கொவிட் தொற்றின் காரணமாக,உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்ததன் விளைவாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலான சூழ்நிலையில் எல்லாமாகச் சேர்ந்து நிறைய நெருக்கடிகளுக்குள் நாங்கள் சிக்கி யுள்ள காலத்தில் , இருக்கின்ற வருமானத்தையும் முழுமையாக இல்லாமல் செய்து  "புதுவிதமான நவீன பொருளாதார உத்திகளை நாங்கள் அறிமுகப்படுத்தப் போகிறோம்" என்று தொடர்ந்தும் மத்திய வங்கியினூடாக பணத்தை அச்சடித்து   செலவினங்களைச்  செய்ததன் மூலம் பணவீக்கம் அதிகரித்துவிட்டது. இந்த பணவீக்கத்தின் காரணமாகத்தான் இன்று மக்கள் படுமோசமான பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர். ஏனென்றால், அன்றாட வருமானத்தில் மாத்திரம் தங்கி வாழ்கின்றவர்கள் ஒருபுறமிருக்க,அரச ஊதியம் பெறுகின்ற ஊழியர்களின் ஊதியத்திலும் எந்தவிதமான மாற்றமுமில்லை .ஆனால், விலைவாசிகள் பல மடங்கு உயர்ந்துவிட்டன.வாழ்க்கைச் செலவு என்பது கட்டுப்படுத்தமுடியாதளவிற்கு அதிகரித்துவிட்டது. 


அதைக் கட்டுப்படுத்துவதற்கு முதலில் அரசாங்கம்  முயற்சிக்க வேண்டும். இந்த விடயம் இன்னும்  மோசமாகி விடாமல்  நல்ல நிலைமைக்கு கொண்டுவரவேண்டும்  . அதாவது முதலில் இந்த  அரசாங்கத்தின் பொருளாதாரச் செயற்பாடு  சுருங்க வேண்டும், சுருங்கித்தான் பின்னர் விரியவேண்டும்   .சுருங்கி விரியும்  (Contraction and expansion)செயற்பாட்டிற்கான  அறிகுறிகள் நிறையத் தென்டுகின்றன. அவை தவிர்க்கமுடியாத விடயங்கள் . நாங்கள் எதிர்நோக்கவேண்டிய விடயங்கள். எனவே அவற்றையெல்லாம் செய்து கொண்டு ,அடுத்த கட்டமாக இப்போது  சர்வதேச நாணய நிதியத்தின் இந்த பிரதிநிதிகள் மட்டத்திலான உடன்பாட்டைக் கண்டிருந்தாலும் இனி கடனாளிகளோடுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் . அங்குதான் பிரச்சினை இருக்கிறது எனவே அதில் எவ்வளவு தூரம் இவர்கள் முன்னேற முடியும் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அரசாங்கம் வருமானத்தைக்  கூட்டுவதற்கான பல ஏற்பாடுகளை இவர்கள் செய்திருக்கிறார்கள், செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் நடக்க வேண்டும்.


  வழமையாக எதிர்க்கட்சி என்பது  அடையாள ரீதியாகவாவது எதிர்த்து வாக்களிக்கின்ற ஒரு நிலைமை இருந்தது. ஆனால்,இம்முறை வாக்களிக்காமல் தவிர்ந்து கொண்டதற்கான காரணம், எதிர்கட்சியும் இந்த  வரவு,செலவு திட்டம் பற்றியும்   இதிலுள்ள யோசனைகள் பற்றியும்  நாங்கள் பெரிதாகபோய் பாராளுமன்றத்தில்  எதிர்த்து வாக்களித்து தவறான சமிஞ்ஞைகளை உலக நாணய நிதியத்திற்கோ, இன்று இலங்கைக்கு கடன் கொடுத்திருக்கின்ற மற்ற நாடுகளுக்கோ தனிப்பட்டவர்களுக்கோ கொடுப்பதன் ஊடாக அவர்களுடைய பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்திவிடக்கூடாது என்று  பொறுப்புணர்ச்சியோடு நடக்கவேண்டியிருந்திருக்கிறது.


கேள்வி :  இரண்டு விடயங்கள் சம்பந்தமாக பேசுவோம். ஒன்று பயங்கரவாத தடுப்பு சட்டம், ஆகவே இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்  காரணமாக பல அரசியல் கைதிகள் இன்னமும் 12 வருடங்களிலிருந்து 26 வருடங்களுக்கு அதிகமாக இருக்கக்கூடிய 46 அரசியல் கைதிகள் இருக்கிறார்கள் என்று ஜனாதிபதி சட்டத்தரணி  கே.வி.தவராசா ஒரு அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருந்தார்.  ஆகவே இந்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தினுடைய நீக்கம், அரசியல் கைதிகளினுடைய விடுதலை சம்பந்தமா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கொண்டிருக்கின்ற நிலைப்பாடு என்ன?


அத்துடன்,

அண்மையிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற எச்.எம்.எம்.ஹரீஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த இஷாக் ரஹ்மான் ஆகியோர் ஜனாதிபதியினுடைய ஓர் ஆலோசகராக இருக்கக்கூடிய சாகல ரத்நாயக்க  தலைமையில் புலனாய்வு பிரிவினுடைய அதிகாரியாகவிருந்த சுரேஷ் சாலி உள்ளிட்டவர்கள் பங்கேற்ற ஒரு கலந்துரையாடலில் ஐந்து முஸ்லிம் அமைப்புகளினுடைய தடை நீக்கம் சம்பந்தமாகவும் அங்கு பேசியிருந்தார்கள்  என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன, ஆகவே இப்படியான கலந்துரையாடல்களை முன்னெடுப்பது என்பது  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமையினுடைய,கட்சியினுடைய நிலைப்பாடாகவிருந்து இந்த கலந்துரையாடல்கள் இடம் பெற்றனவா, அல்லது தனிப்பட்ட கலந்துரையாடல்களா ?ஆகவே இந்த தடை நீக்கம் சம்பந்தமான விடயங்களைத் தாங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?


பதில் : முதலில், இந்த பயங்கரவாத தடைச் சட்ட விவகாரம் என்பது பொதுவாக தனிமனித சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்ட விடயம்.  இது தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மாத்திரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல .இன்று சிங்களவர்களும் அதனால் பாதிக்கப்பபடுகிறார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் , ஆர்பாட்டக்காரர்கள் என்று பலரும் இன்று அனுபவிக்க நேருகின்ற இந்த அநீதிகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணமே இந்த பயங்கரவாத தடைச் சட்டம்தான்.எனவே எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கத்தை விடுத்து ,வேறு அரசியல் நோக்கங்களுக்காகத்தான் அது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் அதற்கு எதிராக வைக்கப்படுகிற முதன்மையான வாதமாகும். ஆனால் அதற்கும் இந்த நிதிக் கையாடல்கள் சம்பந்தமாக ஏதும் விசாரணைகள் செய்வதாகவிருந்தால் ஏராளமான வேறு சட்டங்கள் இருக்கின்றன. பணச் சுத்தீகரிப்புக்கு எதிரான சட்டம்(Anti Money  Laundry Act) ஒன்றிருக்கிறது . Anti Terrorist Financing என்று ஐக்கிய நாடுகளின் சபையின்  சமவாயங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் இலங்கை ஏற்றுக் கொண்டு சட்டவாக்கம் செய்து  அமுல்படுத்திருக்கிறோம் . எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற தடைகள் தனிமனித சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்டவை.அநியாயமாகக் குற்றமில்லாதவர்கள் குற்றவாளிகளாக காட்டப்படுகிறார்கள். அதில் இருக்கிற மிகப் பிரதானமான பிரச்சினைதான் குற்ற ஒப்புதல் என்பது.  ஒரு நீதி மன்றத்தில் அந்த வாக்குமூலம் அவருக்கு எதிராக பாவிக்கப்படலாம்,  பலவந்தப்படுத்தி குற்ற ஒப்புதல் எடுக்கிற விடயம். நான் அண்மையில் பாராளுமன்றத்திலும்  பேசியிருந்தேன் உயிர்த்த ஞாயிறு  தாக்குதலுக்குப் பிறகு நிறைய முஸ்லிம் மாணவர்கள் சரியான தெளிவில்லாமல்,  உயர்தர பரீட்சைக்கான மீட்டல்( Revision) வகுப்புகள் என்று நடத்தப்படுகிறது என நம்பிப்போனவர்கள்,  ஒரு சில இடங்களில் இந்த பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு சிலரும் அந்தந்த வகுப்புகளை நடத்தினார்கள் என்ற காரணத்திற்காக வகுப்புகளில் போயிருந்த அப்பாவி மாணவர்கள் பலர் விடயம் தெரியாமல் போய் உட்கார்ந்திருந்தவர்களையெல்லாம்  பிடித்து அடைத்து அவர்களுக்கெதிராக ஏன் அவர்களை இந்த ஐக்கிய நாடுகள் சபையின் கீழான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களாக வர்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருப்பது  மிகப் பாரதூரமான விடயமாகும் இதை பாராளுமன்றத்திலும் சுட்டிக்காட்டியிருந்தேன், அவ்வாறு சுட்டிக்காட்டிக்  கதைத்த பிறகு உடனடியாக ஜனாதிபதி என்னை அழைத்து அந்த பட்டியலை தன்னிடம் தருமாறு கேட்டிருக்கிறார். எனவே அதிலும்  ஏதாவது மீளாய்வு நடக்கும் என்று நாங்கள்  நம்புகிறோம். 

எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் போய் சந்தித்த விவகாரத்தைச் சொன்னீர்கள் , இந்த விடயம் சம்பந்தமாக கட்சி நேரடியாக பல விடயங்களை முன்வைத்திருக்கிறது.அவர்கள் தனியாகப் போய் சந்தித்து அதை இன்னுமொரு படி மேல் கொண்டு போகலாம் என்று முயற்சி செய்திருக்கலாம். இவர்கள் இரண்டு பேரும் போய் பேசியது அதில் ஒருவர் எங்களுடைய கட்சியை சாராதவராக இல்லாவிட்டாலும் கூட அவரும் ஏதோ சமூக நன்மைக்காக" இதை நாங்களும் கதைத்தால் என்ன"  என்று எண்ணிப் போயிருக்கலாம். எனவே அதைப்பற்றி நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.  அது நல்லதாக அமையட்டும்.


கேள்வி:   இப்போது இன்னுமொரு விடயம் சம்பந்தமாகப் பரவலாகப் பேசப்படுகிறது. இராஜாங்க அமைச்சுப் பதவிகளை சிலருக்கு வழங்கப் போகிறார்கள். அமைச்சரவை மறுசீரமைப்பு சம்பந்தமான சில கருத்துக்களும் கூட சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன. அரசியல் மேடைகளில் இது சம்பந்தமாக அரசியல்வாதிகள்  சிலரும் பேசி வருகிறார்கள். ஆகவே ஒரு அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெறுகின்ற போது, இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படுகின்ற போது இவற்றைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கான அழைப்புகள் ஏதேனும் அரசாங்க தரப்பிலிருந்து தங்களுக்கு, தங்களுடைய கட்சியினருக்கு விடுக்கப்பட்டிருக்கின்றதா? அவ்வாறான ஏதேனும் அமைச்சுப் பதவிகளை ஏற்பதற்கான  உத்தேசம் முஸ்லிம் காங்கிரஸிற்கு இருக்கிறதா?


பதில்: இப்போதைக்கு எங்களிடம் அப்படியான  உத்தேசங்கள் எவையுமில்லை. இது சம்பந்தமாக பலவாறாகப் பலரும் கதைப்பார்கள்.  அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெறவேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் முதலில் அமைச்சரவை என்பது இன்றிருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இன்னுமின்னும் விஸ்தரிக்கப்படுவது மக்களுடைய விமர்சனத்திற்குள்ளாகும் என்ற ஒரு விடயம் இருக்கிறது. எனவே அதைக்  கட்டுப்படுத்துவது முக்கியமாகும். ,அதுமாத்திரமல்ல, ஏற்கனவே இந்த பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்தள்ளியவர்கள் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்தவர்கள் என்றிருக்கிறவர்களுக்கும் அந்தப் பதவிகள் வழங்கப்படுமாகவிருந்தால் அதுவும் மோசமான விமரிசனங்களைக் கொண்டுவரலாம்.அவ்வாறான எத்தனங்கள் நடப்பதான கதைகள் திரைமறைவில் இருந்து கொண்டிருக்கின்றன. அதுமாத்திரமல்ல , எங்களைப் பொறுத்தமட்டில் எங்களுடைய கட்சியில்  ஒருவரை பறித்தெடுத்து அமைச்சர் பதவி  கொடுத்த ஒரு விவகாரம் நடந்திருக்கிறது. இப்படியான விவகாரங்கள்  நிறுத்தப்படவேண்டும் இல்லை என்றால் முஸ்லிம் காங்கிரஸ் என்ற  தன்மானமுள்ள, சுய கௌரவமுள்ள ஒரு கட்சி இவ்வாறான நிலைவரங்களில்  அமைச்சு பதவிகளில் போய் குந்திக்கொண்டிருக்கமுடியாது . அது மாத்திரமல்ல முஸ்லிம் காங்கிரஸ் போன்ற ஒரு இயக்கத்தின் பலத்தைப் புரிந்து கொள்ளாமல் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ்காரர்களுக்கு ஆளுநர் பதவி என்றாவது கொடுத்து முஸ்லிம் காங்கிரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்று நினைத்தால் அது வெறும் பகல் கனவு எனற விடயத்தையும் நாங்கள் சொல்லியாகவேண்டும்.

அவ்வாறான எதையும்  ஜனாதிபதி செய்யமாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், ஜனாதிபதிக்கு அதைச் செய்யுமாறு வலியுறுத்துகின்ற  மொட்டுக் கட்சிக்காரர்கள் கொஞ்சப்பேர் இருப்பதாகவும் நான் கேள்விப்படுகிறேன்.ஏனென் றால் அவர்களுடைய  கட்டுப்பாட்டில் ஜனாதிபதியை வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு சிலருக்கு விருப்பமிருக்கலாம் ஆனால், ஜனாதிபதி கொஞ்சம்  பழுத்த அரசியல்வாதி. இவற்றிலுள்ள சூட்சுமங்கள் மற்றும் பாரதூரங்களை அவர் சரிவரப் புரிந்து நடந்துகொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.


கேள்வி: இப்போது தாங்கள் பல தேர்தல் மேடைகளில் பேசுகின்ற போது கட்சியினுடைய ஆதரவாளர்களை மிகவும் கௌரவமான முறையில் "போராளிகள்" என்று தாங்கள் விளிப்பதுண்டு, இப்போது தங்களுடைய கட்சியில் இருக்கக்கூடிய ஒருவரை அரசாங்கத்தரப்பில் இப்போது அமைச்சராக உள்ளீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் மீளவும் அவர்கள் கட்சியோடு இணைவது போன்றதான செயற்பாடுகள் ஏதேனும் ஒரு தேர்தல் ஒன்றை முன்னிறுத்தி வருவதற்கான சூழல்கள் ஏற்படுமாகவிருந்தால்,  அவர்களை உள்ளீர்த்துக்கொள்வதற்கான ஒரு மனநிலையில் தாங்கள் இருக்கிறீர்களா? தங்களுடைய கட்சியினுடைய போராளிகளும் அதற்கு உடன்படுவார்கள் என்று எண்ணுகின்றீர்களா?


பதில்: கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்தால் யாராகவிருந்தாலும் சரி அவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து மீண்டும் வருவது என்ற சில விடயங்கள் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது.  ஆனால், அண்மைக்காலமாக இந்த விவகாரத்தில் அதாவது முழு சமூகமும் பாதிக்கப்படுகின்ற போது அதைக் கணக்கிலெடுக்காமல் போயிருந்து கொண்டு ,அதாவது  ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட விவகாரம்  மிக மோசமாக மக்களுடைய மனங்களில் ஆழப்பதிந்த ஒரு காயமாகவிருக்கின்ற நிலையில், "ஜனாஸாக்கள் எரிக்கப்படவில்லை. வெறும் பெட்டிகள்தான் எரிக்கப்பட்டன "என்று பேசிய ஒருவர்தான் அமைச்சு பதவியைப் போய்  எடுத்திருக்கிறார். இப்படியாகப் பேசியவர்களைக் கொண்டுபோய் நாங்கள் தேர்தலில் நிற்கப்போனால் கட்சிப் போராளிகள் அதை அங்கீகரிக்கமாட்டார்கள். எனவே அவ்வாறான  நபர்களுக்கு இனி முஸ்லிம் காங்கிரஸில் ஒருபோதும் இடமிருக்கமாட்டாது , மக்களிடத்திலும் அதற்கான எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்கமாட்டாது என்பது எனக்கு தெளிவாகத் தெரியும்.


கேள்வி :  இன்னுமொரு விடயம் இப்போது பிரதான பேசுபொருளாக மாறியிருக்கிறது .அதுதான் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம் உள்ளூராட்சி மன்ற இணையத்தளத்திலிருந்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினுடைய  பெயரை நீக்கியிருக்கிறார்கள் , அதன்கீழ் 29 கிராம சேவகர் பிரிவு இருந்தன. அவற்றையும் நீக்கியிருக்கிறார்கள். ஆகவே அதனை ஏன் நீக்கினார்கள்? அதற்கு அரச அங்கீகாரம் கொடுத்து வர்த்தமானியில் அதை ஒரு பிரதேச செயலகமாக அறிவிப்பதில் இருக்கின்ற தாமதம் என்ன? என்கின்ற விடயங்களெல்லாம் பற்றி பேசியிருக்கிறார்கள். ஆகவே இதில் இதற்கு ஓர்அங்கீகாரம் கொடுப்பதில் முஸ்லிம் தரப்புக்களில் ஒரு விட்டுக்கொடுப்பு இல்லை என்ற விடயம் சம்பந்தமாகவும் பேசுகிறார்கள். ஆகவே , இந்த கல்முனை தமிழ் வடக்கு பிரதேச செயலகம் ஒன்றை அவர்களுக்கான ஒட்டுமொத்தமான அங்கீகாரம் கொடுப்பதில் கட்சி என்ற வகையில்    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை என்ன மனோநிலையோடு இருக்கின்றது?


பதில்: இந்த விவகாரம் இரண்டு தரப்புகளும் சிநேகமாகப் பேசி தீர்வு காணப்படவேண்டிய விடயமாகும். அதாவது நிருவாக எல்லைகள் சம்பந்தமான இந்த பிணக்குகள் என்பன சில இடங்களில் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. குறிப்பாக கல்முனை பிரதேச செயலகத்தைப் பொறுத்தமட்டில்  நிலத்தொடர்பற்ற ரீதியில் அமைக்கப்பட்ட  கல்முனை வடக்கு செயலகம் என்ற ஒரு நிலைப்பாடு பற்றிப்  பேசப்பட்டு வந்திருக்கிறது.  எங்கள் இரண்டு தரப்புகளுக்கும் பிணக்காக இருக்கிற தீர்க்கப்படவேண்டிய எல்லைப் பிரச்சனைகளை முறையாகப் பேசித் தீர்த்துக் கொள்வதற்காக இந்த கிராம சேவகர் பிரிவுகளை அமைத்த விவகாரத்திலும் அதிலும் இரண்டு தரப்பிலும் தலா 29 கிராம சேவகர் பிரிவுகள் என்று இருக்கின்றன. ஆனால், ஏறத்தாழ 70 சதவீதமாக இருக்கிற முஸ்லிம்களுக்கும் 29 கிராம சேவகர் பிரிவுதான், 30 சதவீதமாகவிருக்கிற தமிழர்களுக்கும் 29 கிராம சேவகர் பிரிவுதான் என்பதிலும் கூட இந்த நிலத்தைப் பகிர்வதில், பிரிப்பதில் சரியான நேர்மையாக செய்யப்படவில்லை என்ற  நீண்ட கால பிரச்சினை ஒன்று முஸ்லிம்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. இதற்காகவேயென்று அதை மீளாய்வு செய்வதற்காக ஒரு குழு(Commission)  நியமிக்கப்பட்டிருக்கிறது.  இதற்கு முன்பும்  குழுக்கள்(Commissions) நியமிக்கப்பட்டிருந்தன. இதே போலதான் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கோரளைப் பற்று மத்தி என்ற பிரதேச செயலகப் பிரிவிலும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில்  ஒரு பிரச்சினை நீண்டகாலமாக இருந்துவருகின்றது. இந்தப் பிரச்சினை எல்லாவற்றையும் எடுத்து குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஏனைய முஸ்லிம் தலைமைகள்,இதர தமிழ் தலைமைகள் இருந்தால் அவர்களையும் ஒன்றுசேர்த்து நாங்கள் இதை ஜனாதிபதி மட்டத்திலாவது அமர்ந்து  தீர்மானங்களை எடுக்கவேண்டும்.இடைநடுவில் சிலர் போய் நின்றுகொண்டு இதை பெரியதொரு வாதப் பொருளாக்கிக் கொண்டிருப்பது என்பது உண்மையில்  கவலைகுரிய விடயமாகும்.ஆனால், பிரச்சினை இல்லாமலில்லை அதனை பேசித் தீர்த்துக்கொள்ளத்தான் வேண்டும் அதற்கு நாங்கள் தயாராகவிருக்கிறோம்.


தரமுயர்த்தல் விவகாரம் என்பது கணக்காளரோடும் சம்பந்தப்பட்ட விடயம்தான் .எனவே தரமுயர்த்தலைச் செய்வது என்பது சம்பந்தமாக ஒரேயடியாக பேசித் தீர்த்துவிடலாம், எனவே ,அதற்கான விடயத்தில் இந்த எல்லை நிர்ணயம் என்ற விவகாரமும் பேசப்படுவதென்பது பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் எடுக்கப்படவேண்டிய தீர்மானமாகும்.


 அது சம்பந்தமாக இழுபறி இருக்கின்றது.உண்மையிலேயே நானும் இது சம்பந்தமாக பேசுகின்ற போது மிகவும் பக்குவமாகத்தான் பேசி வருகிறேன். கல்முனை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் எனக்கு நிறைய நண்பர்கள் அந்த பிரதேசங்களில் இருக்கிறார்கள்,அவர்களும் இது சம்பந்தமாக   அடிக்கடி முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு சம்பந்தமான விடயங்களில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் அதிலும் குறிப்பாக இன்று கல்முனை மாநகர சபையின் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த  உறுப்பினர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே அந்த நல்லுறவு கூட இதனால் உடைந்து போகக்கூடாது என்பதற்காக நிச்சயமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.  கணக்காளர் நியமனத்தோடு சேர்த்து எல்லை நிர்ணயத்தையும் செய்ய வேண்டும்.


நன்றி :வீரகேசரி -  (14-09-2022, 15-09-2022.)




No comments

note