இன உறவுக்கு பாலமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் பஷீரை கிழக்கின் ஆளுனராக நியமமிக்க வேண்டும் - இலங்கை மக்கள் தேசிய கட்சி கோரிக்கை.
நூருள் ஹுதா உமர்
கிழக்கு மாகாண ஆளுனராக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத்தை நியமனம் செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை மக்கள் தேசிய கட்சி கோரி உள்ளது. இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என். விஷ்ணுகாந்தன் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு இது தொடர்பாக பேசினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது, கிழக்கு மாகாண ஆளுனராக கிழக்கு மண்ணையும், இங்கு உள்ள மக்களையும் நேசிக்கின்ற கனவான் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். அதே போல அவர் இங்கு வாழ்கின்ற அனைத்து இன மக்களாலும் நேசிக்கப்படுபவராக இருத்தலும் வேண்டும். எமது கட்சியை பொறுத்த வரை கிழக்கு மாகாண ஆளுனர் பதவியை அலங்கரிப்பதற்கு உண்மையிலேயே மிக பொருத்தமானவர் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத். இவர் எல்லா இன மக்களையும் அரவணைத்து நடப்பவர். எல்லா இன மக்களாலும் நேசிக்கப்படுபடுபவர். குறிப்பாக தமிழ் - முஸ்லிம் உறவுக்கு பாலமாக விளங்குபவர். தமிழ் மக்கள் மூலமாக முதன்முதல் பாராளுமன்றம் சென்றவர். தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு எப்போதும் குறுக்கே நிற்காதவர்.
இவர் கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்படுகின்ற பட்சத்தில் இம்மாகாணத்தில் இன நல்லிணக்கம் செழிக்கும். குறிப்பாக தமிழ் - முஸ்லிம் உறவு மேம்படும். பாராளுமன்ற அரசியலில் மிக நீண்ட அனுபவம் உடைய இவரின் தெளிந்த சிந்தனை, தீர்க்கதரிசனம், தூர நோக்கு ஆகியவற்றின் மூலம் கிழக்கு மாகாணம் அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் பெறுவது திண்ணம். இவர் கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்படுவதை எந்த மக்களும் ஆட்சேபிக்க போவதில்லை. எனவே ஆளுனராக இவரையே நியமிக்க வேண்டும் என்று ஜ்னாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோருகின்றோம்.
பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தற்போது கொண்டு இருக்காத அரசியல் கட்சிகளையும் சர்வ கட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி இணைத்து கொண்டு பயணிக்க வேண்டும் என்பது எமது பேரவா. பசீர் சேகு தாவூத்துக்கு வழங்கப்படுகின்ற கிழக்கு மாகாண ஆளுனர் பதவி மூலம் எமது பேரவா நிறைவேற தொடங்கும் என்று விசுவாசிக்கின்றோம். இதுவே எமது கட்சியின் சிபாரிசாகும் என்று தெரிவித்தார்.
No comments