Breaking News

டீசல்,மண்ணெண்ணெய் விரைவாக பெற்றுக் கொடுக்கவும் -ரவூப் ஹக்கீம் கோரிக்கை.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் -ஓட்டமாவடி.

அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்  குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு சென்று மக்களோடு உரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.


இவ்வாறான சந்திப்புகளின் போது மீனவர்கள்,விவசாயிகள்  தற்போது தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக  ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவந்தார்கள்.


தற்போது நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் அறுவடையை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்திற்கு டீசல் எரிபொருள் அவசியமாகவிருக்கும் போது  அவற்றை போதுமான அளவு பெற்றுக் கொள்வதிலுள்ள சிரமத்தை  தெரியப்படுத்தியிருந்தார்கள்.


அதே போல் மீனவர்கள் தங்களின் தொழிலை மேற்கொள்வதற்கு மண்ணெண்ணெய் அவசியமாகவிருப்பதையும் அது தட்டுப்பாடாகவிருப்பதால் கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதையும் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.


அதன்  பின்னர் அங்கிருந்து அண்மையில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு ரவூப் ஹக்கீம் சென்று வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலமையை அவதானித்து குறித்தவிடயம் தொடர்பாக பிரதேச செயலாளரைச் சந்தித்து நிவாரணம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றியும்  ஆராய்ந்தார்.


இவ்வாறு தனது விஜயத்தில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரச்சனைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அண்மையில் சர்வகட்சி ஆட்சி முறைமை தொடர்பிலான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியின் அழைப்பின்பேரில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில்  கலந்து கொண்டது. இச்   சந்தர்ப்பத்தில் தேசிய ரீதியான பிரச்சனைகள் மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட பிரச்சனைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு ரவூப் ஹக்கீம் கொண்டுவந்தார். அதன் போது அண்மையில் விவசாயிகள்,மீனவர்கள் முன்வைத்த டீசல்,மண்ணெண்ணெய் தொடர்பாகவும், நாவலப்பிட்டி வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியிடத்தில் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.


அதே போன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற (12) ஜனாதிபதியின் கொள்கை கூற்று உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ரவூப் ஹக்கீம் உரையாற்றும் போதும் மேற் குறிப்பிட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பிரச்சனைகளை விரிவாக பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து அதனை அவசரமாக உரிய தரப்பிற்கு பெற்றுக் கொடுக்கவேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தி  குறித்த துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் குறித்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.


மேலும்  நாவலப்பிட்டி வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் சேத விபரங்களையும் விரிவாக பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் மேற்குறிப்பிட்ட விடயங்கள்  தொடர்பாக அண்மையில் ஜனாதிபதியுடனாக கலந்துரையாடலில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததையும் நினைவுபடுத்தினார்.    


ரவூப் ஹக்கீமின் அம்பாறை பிரதேச விஜயம் மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி விஜயங்கள் சிலரால் விமர்சிக்கப்பட்டாலும் குறித்த விஜயங்களின் போது தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட விடயங்களை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் ரவூப் ஹக்கீம் முனைப்போடு செயற்படுவது வரவேற்கத்தக்கது.




No comments

note