Breaking News

சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும்

 பாறுக் ஷிஹான்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்  உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பினை வழிநடத்த வேண்டும்.சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் இன்று  ஊடகவியலாளர் சந்திப்பு மேற்கொண்டு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் இவ்வாறு குறிப்பிட்டார்.


மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது


தமிழ் மக்கள் கூட தமிழ் தலைமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.காரணம் அநேகமாக மக்கள் பிரச்சினை தீர்க்கப்படாமை ஆகும்.எதிர்கட்சி தலைவராக கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இருந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சிக்கு ஆதரவாக செயற்பட்டவர்.இவ்வாறு தங்களது மாவட்டங்களில் அகதி வாழக்கை வாழந்து கொண்டிருக்கின்ற மக்களிற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்காத தலைவராக இருந்து கொண்டு இருப்பதனால் ஏனைய மாவட்டங்களை பற்றி சிந்திக்க மாட்டீர்கள்.


உங்களுக்கு வாக்களித்த மக்களையே மாவட்ட நிலையில் மறந்து வருகின்றீர்கள்.எனவே தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுக்கோப்பு இல்லாமல் போய் உள்ளது.இதற்கு காரணம் தலைமைத்துவம் தான்.சரியான வழிநடத்தல் இன்மையினால் தான் இந்நிலை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசுக்கட்சிக்கு மாத்திரம் உரித்தானது என கடந்த கால செயற்பாடுகள் சென்று கொண்டிருக்கின்றது.


இனிவரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒற்றுமையினை ஏற்படுத்துவது என்பது சிரமம்.இந்த பிரிவுகளை நீங்களாகவே ஏற்படுத்தி கொண்டுள்ளீர்கள்.20 வருடங்கள் நம்பி கெட்ட பின்னர் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கின்றோம்.கடந்த காலங்களில் தொழிலாளர் வர்க்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை நம்பி இருந்தது.


ஏனெனில் கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்தீர்கள்.அக்காலத்தில் மக்கள் உங்களை அங்கீகரித்திருந்தார்கள்.நாங்களும் அச்சந்தர்ப்பத்தில் உங்கள் பின்னால் வந்தோம்.ஒழுங்கான வழிநடத்தல்  தமிழ் தேசிய கூட்டமைப்பில் இன்மையால் தான் கடந்த 32 வருடங்களாக இணைந்து செயற்பட்ட நாம் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டோம்.


நாங்கள் உண்மையில் தமிழ் தேசியத்தை மதிக்கின்றவர்கள்.போராட்டங்களை மதிக்கின்றவர்கள்.அண்ணன் பிரபாகரனின் போராட்டங்களை கூட மதித்திருக்கின்றோம்.தமிழீழ விடுதலை புலிகளோ அல்லது பிரபாகரனோ தற்போது இருந்திருந்தால் எமது தொழிற்சங்க உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலோ அல்லது மாகாண சபையிலோ உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள்.


ஏனெனில்  எமது பாதை சரியானது.இதனை நீங்கள்(தமிழ் தேசிய கூட்டமைப்பு)புரிந்து கொள்ளவில்லை.எங்களை போன்ற ஒரு தலைவர்களை வழிநடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை.ஆகவே தான் உலக தமிழ் மக்களும் தொழிற்சங்கங்களும் தற்போது ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்குவதை குறைத்து வருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.


தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்  உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பினை வழிநடத்த வேண்டும்.சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.




No comments

note