Breaking News

நாட்டுக்காக போராடியவர்களை கைது செய்து தடுத்து வைப்பதானது ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துகிறது : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி

நூருல் ஹுதா உமர்

தேசத்தின் மீது அக்கறைகொண்டு அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்  மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கான செயற்பாடுகளை ஜனநாயகத்தை விரும்பும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜனநாயகத்தை மீறும் இவ்வாறான செயற்பாடுகளை ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 30 வருட யுத்தத்தின் காரணமாக அப்பாவி தமிழ் இளைஞர்கள் பலரும், ஈஸ்டர் தாக்குதலிலும் சம்பந்தப்படாத இளைஞர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், பலரும் இப்பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, எவ்வித விசாரணைகளுமின்றி சந்தேகத்தின் பேரில் அநியாயமாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

தற்போது, நாட்டினை நாசமாக்கி ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைக்கு மக்களை ஆளாக்கிய ஆட்சியாளருக்கு எதிராக போராடிய சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத தடை சட்டம் பிரயோகிக்கப்படுவதற்கான எத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.


பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல், பயங்கரவாதத்துக்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டதை விடவும் அரசியல் உள்நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகம் என்பது பரவலான கருத்தாக அமைந்துள்ளது. ஜனநாயக போக்கு நிறைந்தவராக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், கனவான் அரசியல் செய்து சர்வதேச மட்டத்தில் நல்ல மரியாதையை பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராடிய அறவழிப் போராட்டக்காரர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எண்ணி மிகவும் வேதனையடைகின்றோம்.


பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனநாயக ரீதியில், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்கள் மீது பிரயோகிக்கித்தால் தற்பொழுது நாடு எதிர்கொள்ளும் இக்கட்டான பொருளாதார நிலைமை இன்னும் மோசமடையும் என்பதை அச்சத்தோடு நினைவுகூற விரும்புகின்றோம். நாட்டின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சரியான முடிவை எடுக்க ஜனாதிபதியும், அரசாங்கமும் முன்வரவேண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments

note