ஹரீஸ் எம்.பியின் அதிரடி முயற்சியினால் மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை !
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 08 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தினமும் தலா 01 வவுசர் எரிபொருளை வழங்கி மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானமானது அம்பாறை மாவட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினையை தீர்த்துவைக்கும் முகமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், ஜனாதிபதிக்கு முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் ஜனாதிபதி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு முன்வைத்த பணிப்புரைக்கு அமைய இன்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகுகள் உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் உட்பட அம்பாறை மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட மீனவர்கள் மற்றும் பெரும்போக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதனால் பல ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்ட விடயங்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் எரிபொருள் தேவைகள், ஏனைய பிரதேசங்களில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் அம்பாறை மாவட்ட மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் கிடைக்காமை தொடர்பிலும், சில மீன்பிடித்துறைமுகங்களிடமிருந்து அப்பிரதேச ஒவ்வொரு மீன்பிடி படகுக்கும் கிடைக்கும் 50 லீட்டர் டீசல் அம்பாறை மாவட்ட மீனவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற விடயங்களையும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இதன்போது விளக்கினார்.
மீனவர்களுக்கு தேவையான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் தேவைகள் தொடர்பிலான விடயங்களையும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இப்பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் ஒலுவில் துறைமுக எரிபொருள் நிரப்பு நிலையம் செயற்பாட்டுக்கு வரும் வரை அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 08 நிலையங்களுக்கும் மீனவர்களின் நன்மை கருதி தலா ஒரு வவுசர் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் எம்.யூ.உவைஸ் உட்பட கூட்டுத்தாபன உயர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் புதன்கிழமை முதல் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளதுடன் பெரும்போக விவசாயத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள கிழக்கு விவசாயிகளின் விவசாய தேவைகளுக்கான எரிபொருளையும் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகள் அமைச்சரினால் பணிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தோர்கள் துரிதகெதியில் நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கும், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.
No comments