நிந்தவூரில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல் !
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தற்காலிகமாக தடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நிரந்தர தீர்வினை நோக்கிய நகர்வின் ஓர் அங்கமாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துறைசார் நிபுனர்களுடன் இன்று (24) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இக்கலந்துரையாடலில் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், நிந்தவூர் பிரதேச சபை கெளரவ உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், தேசிய அருங்கலைகள் பேரவையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.ஐ.எம். றியாஸ், கரையோர பாதுகாப்பு கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் துலசி தாசன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ. இல்ஹாம் ஜெசீல், சிரேஷ்ட பொறியியலாளர்களான றிசாத் ஆதம் லெப்பை, கே. விஜயகாந்தன், கலாநிதி ஏ.சி.அஸ்லம் சஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பிரதேச கடலரிப்பானது கடந்த 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒலுவில் துறைமுக அபிவிருத்தியின் பின்னரான காலப்பகுதியில் படிப்படியாக தென்னந்தோப்புகள், விவசாய காணிகள், மீன்பிடி வாடிகளென காவுகொண்டு இப்பொழுது குடியிருப்பு பகுதிகளை காவுகொள்ள எத்தனித்திருக்கின்றது. இதற்கான தற்காலிக தீர்வுகளை நிந்தவூர் பிரதேச சபை, கரையோர பாதுகாப்பு கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் மற்றும் ஊர் சார்ந்த அமைப்புகள் இனைந்து முன்னெடுத்து வருகின்றது. இத்தோடு நிறுத்தி விடாமல் இக்கடலரிப்பிற்கான நிரந்தர தீர்வுக்கு சாத்தியமான செயற்பாடுகள் மற்றும் முன்மொழிவுகளை வழங்குமாறு இத்துறையில் நிபுணத்துவமுள்ள சிரேஷ்ட பொறியிலாளர்களை உள்ளடக்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆலோசனை மையத்திடம் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் கேட்டுக் கொண்டார்.
இதன் போது கலந்து கொண்டிருந்த துறைசார் நிபுணர்கள் இக்கடலரிப்பினை தடுப்பதற்காக குறித்த பிரதேசத்தின் கடல் பரப்பில் நீரோட்ட அளவினை பருவகாலத்திற்கேற்ப கணிப்பீடு செய்தவன் மூலமே நிரந்தர தீர்வு நோக்கி நகர முடியுமெனவும், அதற்காக நிலையான ஆய்வினை தென்கிழக்கு பல்கலைக்கழகம், கடலோர பாதுகாப்பு கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்துடன் இனைந்து இதற்கான ஆய்வினை செய்து நிரந்தர தீர்வினை நோக்கிய திட்டத்தை தயாரிப்பதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டது. இவ்வாய்வினை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகளை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களின் பணிப்புரையில் பொறியியல் பீட நிபுணர்களால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments