தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம் தெரிவு!
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் இரண்டாவது பீடாதிபதியாக பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம் ஏகமனதாக தெரிவானார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் தலைமையில் பொறியியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (18.08.2022) இடம்பெற்ற விஷேட ஒன்றுகூடலின்போதே பேராசிரியர் ஹலீம் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இவர் கல்முனையைச் சேர்ந்த பாடசாலை அதிபர் மறைந்த மொஹமட் அப்துல் லத்தீப் மற்றும் கதீஜா உம்மா ஆகியோரின் மூன்றாவது மகனாவார். பேராசிரியர் ஹலீம் கல்முனை சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 10 வரை (1970-1980) பயின்றார். அம்பாறை மத்திய கல்லூரியில் (தற்போது அம்பாறை டி.எஸ். சேனாநாயக்க தேசிய பாடசாலை) தரம் 11-12 கல்வியைத் தொடர்ந்தார். கணிதத் துறையில் கல்வி கற்று பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் சிறப்புப் பட்டத்தினை வெற்றிகரமாக நிறைவுசெய்தார். பின்னர் 1993 ஆகஸ்ட் மாதம் வரை பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் மின்னியல் மற்றும் இலத்திரனியல் துறையில் விரிவுரையாளராக இணைந்து பணியாற்றினார். பின்னர் கொங்கோங் சென்று அங்கு தனது முதுதத்துமாணிப் பட்டபின்படிப்பினையும் நிறைவுசெய்தார்.
1996 ஜூலையில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பெல் ஆய்வகத்தில் ஒரு ஆய்வாளராக இணைந்து கொண்டு மொபைல் மற்றும் நிலையான வயர்லெஸ் தகவல் தொடர்புகளில் அதிநவீன ஆராய்ச்சியினை மேற்கொண்டார். பெல் ஆய்வக ஆராய்ச்சி முடிவில், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஒப்ஃ டெக்னோலஜியில் கலாநிதிப்பட்டப் பின்படிப்பினைத் தொடர்ந்து அதனை வெற்றிகரமாக நிறைவுசெய்தார். பின்னர் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஒப்ஃ டெக்னோலஜி மற்றும் நியூ ஜெர்சி இன்ஸ்டிடியூட் ஒப்ஃ டெக்னோலஜி என்பவற்றில் ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டார்.
2009-2011 காலப்பகுதியில் சவுதி அரேபியாவில் உள்ள கிங் பஹட் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் ஹாய்ல் பல்கலைக்கழகத்தில் இணைந்து இணைப் பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றார். 2016-2017 காலப்பகுதியில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து கற்பித்தல் மற்றும் பொறியியல் கற்கைகளுக்கான ஐ.ஈ.எஸ்.எல். அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார். 2020 ஜனவரியில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் ஒரு முதன்மைப் பேராசிரியராகவும் இணைத்துக் கொள்ளப்பட்டார். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் டயலொக் எக்சியாடா தனியார் நிறுவனத்துடன் இணைந்து 5வது தலைமுறை வயர்லெஸ் கண்டுபிடிப்பு மையம் (5GIC) ஒன்றினை நிறுவுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினையும் அவர் வழங்கியுள்ளார் அதேநேரம் குறித்த மையத்துக்கு பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
2020 பெப்ரவரியில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் துறையிடைசார் கற்கைகள் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டதுடன் 18.08.2022 ஆம் திகதி முதல் மூன்று ஆண்டுகால பதவிக்காலத்திற்கென பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 18.08.2022ஆம் திகதி இடம்பெற்ற பீடாதிபதிக்கான தெரிவில் பீட உறுப்பினர்களின் ஏகோபித்த விருப்பத்தின்பேரில் பேராசிரியர் ஹலீம் புதிய பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தனது துறையில் குறிப்பிடும்படியான ஆய்வுகளைச் செய்துள்ள பேராசிரியர் ஹலீம், அவ்வாய்வு முடிவுகளை உலகத் தரம்வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகளிலும் வெளியிட்டுள்ளார். பல தரம்வாய்ந்த நுால்களும் கட்டுரைகளும் அவரினால் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆய்வு வெளியீடுகள் ஆய்வாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் ஹலீமுக்கு முன்னர் பீடாதிபதியாக கடமையாற்றிய கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன், தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக 2013 முதல் 2022 வரை மூன்று முறை பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments