தைபா அரபுக் கல்லூரியில் 07 மாணவிகளுக்கு மௌலவியா பட்டம்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இம்முறை 07 மாணவிகள், மௌலவியா பட்டம் பெற்று வெளியேறுகின்றனர் என கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.
இக்கல்லூரியில் ஐந்து வருட கால அல்-ஆலிம் எனும் இஸ்லாமிய மார்க்க கற்கை நெறியை சிறப்பாக பூர்த்தி செய்து, இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள ஐந்தாவது தொகுதி மாணவிகளான இவர்களுக்குரிய பட்டமளிப்பு விழா விரைவில் இடம்பெறவுள்ளது.
ஏ.டபிள்யூ.எப்.அப்னா ஹனூன் (சாய்ந்தமருது), ஏ.ஜி.எப்.ஸஹ்ரா (சாய்ந்தமருது), ஏ.ஆர்.எப்.சனோபர் ஹஸீன் (சாய்ந்தமருது), ஜே.எப்.றிழா (சவளக்கடை), ஏ.எம்.எப்.சபானா (சாய்ந்தமருது), எம்.யூ.எப்.முப்லிஹா (சாய்ந்தமருது), ஏ.எம்.எப்.றிப்கானா (சவளக்கடை) ஆகியோரே 'தைபிய்யா' எனும் பட்டத்துடன் மௌலவியாக்களாக வெளியேறுகின்றனர்.
இதற்கு முன்னர் கடந்த நான்கு தொகுதி மாணவிகளில் 23 பேர் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். தற்போது பட்டம் பெறுகின்ற 07 பேருடன் மொத்தம் 30 பேர் இதுவரை இக்கல்லூரியில் மௌலவியா பட்டம் பெற்றுள்ளனர்.
இவர்களுள் 15 பேர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்ற இக்கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான அல்ஆலிம் இஸ்லாமிய கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கும் குறித்த மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர்- என்று அதிபர் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி மேலும் தெரிவித்தார்.
No comments