Breaking News

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே கல்முனையிலும் திண்மக்கழிவகற்றல் தடைப்பட்டது; தெளிவுபடுத்துகிறார் முதல்வர் ஏ.எம்.றகீப்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே ஏனைய சில உள்ளூராட்சி மன்றங்கள் போன்று கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது டீசல் கிடைக்கப் பெற்றுள்ளமையால் இச்சேவை வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும் சிலர் இதனை வைத்து எமது மாநகர சபை நிர்வாகத்தின் மீது முகநூல் வாயிலாக திட்டமிட்டு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டிருகின்றனர் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.


கல்முனை மாநகர சபையின் 52ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று புதன்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது திண்மக்கழிவகற்றல் சேவையில் ஏற்பட்ட தடங்கல் குறித்து விபரிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்;


பொருளாதார நெருக்கடி காரணமாக உருவாகியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு என்பது முழு நாட்டினதும் இயல்பு நிலையை வெகுவாக பாதிப்படைய செய்திருக்கிறது. தமது திண்மக்கழிவகற்றல் வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் நாட்டிலுள்ள பல உள்ளூராட்சி மன்றங்கள் திண்மக்கழிவகற்றல் சேவையை நீண்ட நாட்களாக இடைநிறுத்தி வைத்திருக்கின்றன. இன்னும் சில உள்ளூராட்சி மன்றங்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இச்சேவையை முன்னெடுத்துள்ளன.


ஆனால் எமது கல்முனை மாநகர சபையினால் சில நாட்கள் மாத்திரமே இச்சேவையை முன்னெடுக்க முடியாமல் போயிருந்தது. முழு நாட்டிலும் டீசல் இல்லா விட்டாலும் தனது கையிருப்பில் உள்ளதைக் கொண்டு கல்முனை மாநகர சபைக்கு டீசல் விநியோகிக்கப்படும் என்ற உடன்பாட்டின் பிரகாரம் எமக்கு எரிபொருள் வழங்குகின்ற நிலையத்திலிருந்து முடியுமானளவு டீசல் தரப்பட்டது. அதனால் டீசல் இறக்குமதி தடைப்பட்டிருந்த காலப்பகுதியில் கூட மாநகர சபைக்கென பிரத்தியேகமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் கிடைத்தது. அதன் பயனாக ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் திண்மக்கழிவகற்றல் சேவை தடைப்பட்டிருந்தபோதிலும் எமது மாநகர சபையினால் எவ்வித தடங்கலுமின்றி இச்சேவை முன்னெடுக்கப்பட்டு வந்தது. அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் முற்றாக தீர்ந்த பின்னரே எமக்கும் எரிபொருள் தடைப்பட்டது.


ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவினால் இறுதியாக வெளியிடப்பட்ட அத்தியாவசிய சேவைகள் சம்மந்தமான வர்த்தமானியில் உள்ளூராட்சி மன்றங்களின் திண்மக்கழிவகற்றல் சேவை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அவரது பிழையான அறிவிப்பினால் உள்ளூராட்சி மன்றங்களின் வாகனங்களுக்கு எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் டீசல் பெற முடியாத துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. இதனால் எமது மாநகர சபையின் கடந்த மாத அமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின் திண்மக்கழிவகற்றல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துமாறு கோரி பிரேரணையொன்றை நிறைவேற்றி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அனுப்பியிருந்தோம். எனினும் அரசியல் குழப்ப நிலை காரணமாக எதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.


எவ்வாறாயினும் இப்போது எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு, விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், கல்முனை மாநகர சபை வாகனங்களுக்கும் டீசல் கிடைப்பெறுகின்றன. இதையடுத்து குப்பை அள்ளும் செயற்பாடுகளை வழமைபோல் கிரமமாக முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம். பிரதான வீதிகள், முக்கிய தெருக்கள் மற்றும் பொது இடங்களில் குவிந்து கிடக்கின்ற திண்மக்கழிவுகள் துரிதமாக அகற்றப்பட்டு வருகின்றன. வீடுகளில் தேங்கிக்கிடக்கின்ற குப்பைகள் யாவும் அடுத்த ஒரு சில தினங்களில் முற்றாக அகற்றப்பட்டு விடும்.


இடைப்பட்ட சிறிது காலத்தில் இலங்கை போக்குவரத்து பஸ் சாலையில் டீசலை பெற்றுக்கொள்ள முயற்சித்தோம். ஆனால் ஓரிரு வாகனங்களுக்கு மாத்திரமே தர முடியுமென கூறப்பட்டது. கல்முனை மாநகர சபையை பொறுத்தளவில் முப்பதுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு டீசல் தேவையாக உள்ள நிலையில், ஓரிரு வாகனங்களைக் கொண்டு, ஓரளவே சேவையை முன்னெடுக்க முடிந்தது.


டீசல் இல்லாத காரணத்தினாலேயே திண்மக்கழிவகற்றல் சேவை பாதிக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு சிலர் முகநூல்களில் வேண்டுமென்றே மாநகர சபையை மூர்க்கத்தனமாக விமர்சித்துள்ளனர். எம்மீது கொண்ட தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் மத்தியில் பிழையான அபிப்பிராயங்களை தோற்றுவித்து, அரசியல் குளிர்காய முயற்சிக்கின்றனர். உண்மை என்னவென்று தெரிந்திருந்தும் இவர்கள் முகநூல்களில் வசை பாடுகின்றனர் என்றால், அவர்கள் மன நோயாளிகளாகவே இருக்க வேண்டும். ஆக, இன்று முகநூல் என்பது இல்லாதிருந்தால், அவர்கள் அங்கோடையில்தான் இருந்திருப்பார்கள்.


சமகாலத்தில் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்ற விடயத்தில் நாங்கள் அர்ப்பணிப்புடன் முன்நிற்கிறோம். எரிவாயு விடயத்தில் பிரதேச செயலாளர்களையும் எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து, நான் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கை காரணமாக மாநகர சபைக்குட்பட்ட அனைத்து குடும்பங்களும் எரிவாயுவை பெற்றுக்கொள்ளும் வகையில் எம்மால் குடும்ப அட்டை வழங்கப்பட்டு, எரிவாயு விநியோகம் சீராக முன்னெடுக்கப்பட்டு வருவதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்- என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.










No comments

note