Breaking News

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு புத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்

அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் ஒன்றுகூடியமையால் ஏற்பட்ட அமைதியின்மையை செய்தி சேகரிக்கச் சென்ற நியுஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீது அதிரடிப்படையினரும், பொலிஸாரும் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.


ஜூடின் சிந்துஜன், ஜனித்த மென்டிஸ், வர்ண சம்பத், சரசி பீரிஸ் ஆகிய நியுஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த மக்கள் எழுச்சிப் பேரணியில் செய்தி சேகரிக்கச் சென்ற மேற்படி ஊடகவியலாளர்கள் தங்களை ஊடகவியலாளர்கள் என்று அடையாளப்படுத்திய போதிலும், அதனை ஒருபோதும் பொருட்படுத்தாமல் அவர்களை கீழே வீழ்த்தி அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியமையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

மேற்படி, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தை தான் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போராட்டக் களத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


இவ்வாறு கண்டன அறிக்கைகளை விடுவது ஒருபுறம் இருக்க மேற்படி ஊடகவியலாளர்களை கடுமையாக தாக்கிக் காயப்படுத்திய இராணுவ வீரர்களும், பொலிஸாரையும் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும்.


ஊடகவியலாளர்கள் தங்களது கடமையினை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அண்மைக்காலமாக இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் மீதான நடத்தப்பட்டு வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.


எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஊடகப் பணிகளை முன்னெடுத்து வரும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பிரதமரும், ஊடக அமைச்சரும், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரும் முன்வர வேண்டும்.


செயலாளர்,

ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம்,

புத்தளம்.




No comments

note