Breaking News

தினகரன் ஊடகவியலாளர் மர்லின் மரிக்காருக்கு தமிழகத்திலிருந்து 'தேசத்தின் மாமணி' விருது வழங்கி கௌரவிப்பு!

அகில இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், 'தென்னாட்டு காந்தி' என அழைக்கப்பட்டவருமான மறைந்த கே. காமராஜரின் 119 ஆவது பிறந்த தினத்தை (15.07.2022) முன்னிட்டு பல்துறைச் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் திட்டத்தின் கீழ் தினகரன் - வாரமஞ்சரி பத்திரிகையின் இணையாசிரியர் மர்லின் மரிக்கார் 'தேசத்தின் மாமணி விருது' வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் திண்டுக்கல் பசுமைவாசல் பவுண்டேசன், குமரி மாவட்டத்தின் தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தின் காமராஜர் இளைஞர் வளர்ச்சி பேரவை, சேலம் மாவட்டத்தின் ஸ்ரீ சக்சஸ் அகாடமி அன்ட் பவுண்டேசன் ஆகிய அமைப்புக்கள் இணைந்து சமூக மேம்பாட்டுக்காக பங்களித்து வரும் பல்துறைச் சாதனையாளர்களுக்கு இணையவழி ஊடாக விருது வழங்கி கௌரவிக்கும் திட்டத்தின் கீழேயே ஊடகவியலாளர் மர்லின் மரிக்காருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

 'பெருந்தலைவர் காமராசரின் மாமணி விருதுகள் - 2022' என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இவ்விருது வழங்குதலில் 'தேசத்தின் மாமணி' விருது பெற்றுக் கொண்ட ஒரே இலங்கை பத்திரிகையாளர் மர்லின் மரிக்கார் ஆவார். இவ்விருதை மொத்தம் ஏழு பத்திரிகையாளர்கள் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், ஏனைய அனைவரும் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். 

இவ்விருது வழங்கும் திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சமூகசேவகர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், இளம் படைப்பாளர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகிய 09 பிரிவுகளைச் சார்ந்த சாதனையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, வெவ்வேறு பெயர் கொண்ட விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந்த விருதுகளுக்கென 1112 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  

பத்திரிகைத்துறை ஊடாக சமூக மேம்பாட்டுக்காக அளித்துவரும் பங்களிப்பில் பெற்றுக் கொண்டுள்ள சாதனைகள் மற்றும் கௌரவிப்புக்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மர்லின் மரிக்காருக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.


தினகரன் தேசியப் பத்திரிகை

15.07.2022





No comments

note