முஸ்லிம்களின் ஜனாஸாக்களை ஏன் மதவெறியுடன் எரிக்கிறீர்கள், என கோத்தாபயவிடம் கேட்டபோது உனது வேலையை பார் என்றார்
கொவிட் தொற்றினால் மரணித்த முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பது ஏன் என நான் கேள்வியெழுப்பிய போது ‘உனது வேலையைப் பார்’ என கோத்தாபய ராஜபக்ச கூறினார் என அவரது நண்பரான டாக்டர் கங்கா ஹேமதிலக தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பிரபல வைத்தியப் பேராசிரியரான கங்கா ஹேமதிலக, தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்காக உழைத்த வியத்மக அமைப்பின் முக்கியஸ்தரான இவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“நான் கோத்தபாயவுக்கு கடந்த தேர்தலில் இதயபூர்வமாக ஆதரவளித்தபோது இவ்வாறு நடக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஏனைய திருட்டு ராஜபக்சக்களைப் போலல்லாது ‘வியத்மக’ நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று மாற்றத்தைக் கொண்டு வருவேன் என உறுதியளித்தார்.
நான் வியத்மகவின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவன். கோத்தபாயவின் தனிப்பட்ட வேண்டுகோளின்பேரிலேயே அந்த அமைப்பில் இணைந்தேன். வியத்மக ஒவ்வொரு அமைச்சுக்கும் திணைக்களத்துக்குமென தனித்தனியான திட்டங்களை வகுத்திருந்தது, அவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் எதிர்பார்த்த மாற்றத்தை நாம் கண்டிருக்கலாம்.
எனினும் அவர் வெற்றி பெற்ற முதல் நாளிலேயே எம்மையெல்லாம் அவரது நெருக்கமான வட்டத்திலிருந்து வெளியேற்றினார். பசில் ராஜபக்சவை மாத்திரம் தனது ஆலோசகராக வைத்துக் கொண்டார். அவரது தீர்மானங்களுக்கு, வெட்கமில்லாது ஆமாம் சாமி போட்ட சில வியத்மக உறுப்பினர்கள் மாத்திரம் அவருடன் இருந்தனர். ஏனையோர் தூரமாகிவிட்டனர். பின்னர் பி.பி. ஜயசுந்தர இணைந்து, கோட்டாவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தார்.
தான் பௌத்த சிங்கள வாக்குகளால் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டதாக முதல் நாளிலேயே பிரகடனம் செய்ததுடன், அன்று முதல் ஓர் இனவாத, மத வெறியராக உருவெடுத்தார். சிந்திக்கவே முடியாத பல முட்டாள்தனமான தீர்மானங்களை நிறைவேற்றினார். இரசாயன உரத்தை தடை செய்துவிட்டு ஒரே இரவிலேயே இலங்கை 100 வீத இயற்கை விவசாய நாடு என்று பிரகடப்படுத்தினார். கொவிட்டினால், உயிரிழந்த குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி முஸ்லிம்களை பலவந்தமாக எரிக்கும் தீர்மானத்தை அமுல்படுத்தினார்.
இந்த மத வெறிமிக்க விஞ்ஞான பூர்வமற்ற தீர்மானம் குறித்து நான் கேள்வியெழுப்பியபோது, ‘நீ உனது வேலையைப் பார்’ என எனக்கு பதிலளித்தார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்று கேட்ட உங்களுக்கு கிடைத்த பதில் இதுதான்” என்றும் டாக்டர் கங்கா ஹேமதிலக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
.-Vidivelli
No comments