புத்தளம்: தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
புத்தளம் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை தொடர் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பத்துள்ளனர்.
கடந்த வாரம் (06) பொதுநிருவாக அமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு தேவையான எரிபொருள் வழங்க கோரியுமே சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்படி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்து வரும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எரிபொருள் இன்றி சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், இதனால் அவர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு கோரி கடந்த 6 ஆம் திகதி பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
இதற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, நடு முழுவதும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், பொதுநிர்வாக , உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர், சமுர்த்தி பணிப்பாளர், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை கவனத்தில் கொள்ளாமல் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக காலம், நேரம் பாராமல் வங்கி மற்றும் கிராமங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருள் பிரச்சினை இருப்பதாக சுட்டிக்காட்டிய புத்தளம் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தங்களை மலினப்படுத்தும் வகையில் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த தீர்மானம் பொதுமக்களை பழிவாங்கும் நோக்கம் அல்ல என்றும், தமக்கு தேவையான எரிபொருளை கோருவதே நோக்கமாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு புத்தளம் மாவட்ட அனைத்து சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வரும் நிலையில், சமுர்த்தி முகாமையாளர்கள் பணிக்கு சமூகமளித்திருந்தனர்.
இதனால், இன்றைய தினம் சமுர்த்தி வங்கிகள் முகாமையாளர்களினால் திறக்கப்பட்ட போதிலும், அங்கு உத்தியோகத்தர்கள் சமூகமளிக்காமையால் வங்கி செயற்பாடுகள் அனைத்தும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்தன.
இதனால், சமுர்த்தி வங்கிக்கு வருகை தந்த பொதுமக்கள் திரும்பிச் சென்றமையை அவதானிக்க முடிந்தது.
- சாஹிப் அஹ்மட் -
No comments