பாடசாலைகளில் வழக்கத்திலுள்ள கைவிரல் அடையாள இயந்திர நடைமுறையினை ரத்துச் செய்ய கோரிக்கை !
நூருல் ஹுதா உமர்
நாட்டின் சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு பாடசாலைகளில் வழக்கிலுள்ள கைவிரல் அடையாள இயந்திர நடைமுறையினை ரத்துச் செய்யுமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சுக்கு கோரிக்கையொன்றை விடுத்துள்ளது
கல்வியமைச்சுக்கு சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
எரிபொருள் சிக்கல் காரணமாக தூர இடங்களில் உள்ள ஆசிரியர்கள் பாடசாலைக்களுக்குச் செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பொதுப் போக்குவரத்துக்காகப் பயன்பாட்டிலுள்ள வாகனங்களின் குறைவு மற்றும் தாமதம் காரணமாக உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.
பாடசாலை சென்று பதிவிடும் நேரத்தை கைவிரல் அடையாள இயந்திரங்கள் கணக்கிடுவதனால் தேவையற்ற கட்டாய விடுமுறையினை ஆசிரியர்கள் அனுவிக்க வேண்டி வருகின்றது. மலையிலிருந்து விழுந்தவனை மாடேறி மிதத்தது போன்ற நிலைக்கு ஆசிரியர்கள் ஆளாகி வருகின்றனர். இந்நிலை தொடருமானால் நல்லதொரு மனநிலையில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாத சூழ்நிலையேற்படுகிறது.. இந்நிலையிலிருந்து விடுவிப்பதற்காக பாடசாலைகளில் நடைமுறைகளில் உள்ள குறிப்பாக வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் உள்ள கைவிரல் அடையாள இயந்திர நடைமுறையினை ரத்துச் செய்யுமாறு அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் உள்ள சில அதிபர்கள் நாட்டின் சூழ்நிலைகளைக் கவனத்தில் எடுக்காது மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளவதாகவும் ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அவ்வாறான அதிபர்கள் தொடர்பில் எமது சங்கம் தகவல்களைத் திரட்டி வருவதாகவும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments