நாளையும், நாளை மறுதினமும் ஆசிரியர்கள் பாடசாலை பகிஷ்கரிப்பு போராட்டத்தில் !!
நூருள் ஹுதா உமர்.
எரிபொருள்களைப் பெற்றுக் கொள்ள வழி செய்தல் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கென தனியான பாடசாலை அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அம்பாறை மாவட்ட ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் பாடசாலை பகிஷ்கரிப்பு போராட்டம் நாளையும், நாளை மறுதினமும் ( 30.06.2022 - 01.07.2022 - வியாழன் மற்றும் வெள்ளி ) இடம்பெறும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தினர் இன்று (29) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தலைவர் ஜெஸ்மி மூஸா தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த பாடசாலை பகிஷ்கரிப்பு தொடர்பான அறிவிப்பை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளருக்கு சங்கம் அறிவித்திருப்பதாகவும், அவர்களின் அறிவித்தல் கடிதத்தில் எரிபொருள் பிரச்சினையினை மையமாகக் கொண்டு ஜுலை 10 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளதனைத் சுட்டிக்காட்டியுள்ளதாவும் தெரிவித்தார்.
மேலும், இக்காலப்பகுதிக்குள் ஆசிரியர்களுக்கான சொந்த விடுமுறை தொடர்பிலும் தெளிவான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நடத்துமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினால் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் அதனை மேற்கொண்ட நிலையில் சில வலயங்களில் பாடசாலை மூடல் தொடர்பான அறிவிப்பு ஆசிரியர்களுக்கிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றது.
இதனடிப்படையில் தொழிற்சங்கம் என்ற ரீதியில் ஆசிரியர்களால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளை நாம் செவிமடுக்க வேண்டியுள்ளது. அம்பாறை மாவட்டத்திலுள்ள வலயங்களிலும் வெளிப்பிரதேச ஆசிரியர்கள் செல்லாமையினால் பாடசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைத்துள்ளன. எரிபொருள் பிரச்சினை என்பது ஒரு வலயத்திற்கானது மாத்திரமல்ல என்பதனைத் எல்லோரும் அறிவார்கள்.
எனவே, எரிபொருள் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமொன்று உருவாகும் வரை கல்வியமைச்சின் அறிவித்தலினை மாகாணத்திற்கு அறிவிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளையும் நாளை மறுதினமும் (30.06.2022 முதல் 01.07.2022) வரை பாடசாலை பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கான தீர்வு எட்டவில்லையாயின் இதனை மேலும் தொடர வாய்ப்புள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் 30.06.2022 முதல் 01.07.2022 வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் அம்பாறை மாவட்ட பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பாடசாலைப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக
எரிபொருளைப் பெற்றுக் கொள்ளவதற்கு ஆசிரியர்களுக்கென தனியான வழிமுறையொன்றினை மாகாணக் கல்வி அமைச்சினூடாக கல்வியமைச்சு அறிவிப்புச் செய்தல், எரிபொருள் பிரச்சினை காரணமாக பாடசாலைகளை மூடும் போது கிழக்கு மாகாணத்திற்கென தனியான அறிவிப்பினை விடுக்காதிருத்தல்.
கல்வி அமைச்சு அறிவித்துள்ளது போல் ஜுலை 10 வரை மாகாணப் பாடசாலைகளை மூடுவதற்கான அறிவிப்பினை மேற்கொள்ளல், கிழக்கு மாகாணத்தில் தனித்தனி வலயங்களில் பாடசாலைகளை மூடுவதனை கைவிட்டு மாகாணத்திற்கென பொதுவான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல், அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு தனியாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை நிறுத்தி அறிவித்தல்களை ஒருமுகப்படுத்தல், கைவிரல் அடையாளம் இடும் இயந்திரப் பாவனையினை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளையும் முன்வைக்கின்றோம் என்றார்.
Post Comment
No comments