Breaking News

பிந்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு.

நூருள் ஹுதா உமர்

பிரன்லி சிப் அமைப்பும் நியூ சன் ஸ்டார்  கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலையத்தினால் பதுளையிலுள்ள பிந்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு பதுளை பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும், சக்கர நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டது. 


பதுளை சுகாதார வைத்திய அதிகாரி சுரேஸ்கண்ணண் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், சிறு வயதிலிருந்தே கண்களை கண் மருத்துவர் மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். கண்களில் ஏதேனும் குறைபாடு இருப்பது தெரியவந்தால் ஆரம்ப கட்டத்திலேயே உரிய சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஆரம்பகட்ட சிகிச்சையை மேற்கொள்வது கண்களை பாதுகாக்கும் வழியாகும். வளர்ந்த குழந்தைகளையும் ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதிப்பது அவசியம். புத்தகம் படிக்கும் போது எழுத்து வேளையில் ஈடுபடும் போது சரியான கோணம் போதிய அளவு வெளிச்சம் ஆகியன இருக்குமாறு பாத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் தொலைகாட்சி பார்ப்பது, கணினி விளையாட்டுகள், கைபேசி விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபடுவதால் கண்கள் சோர்வடைந்து கண்களின் விழித்திரையை பாதிக்கும். மாறுகண் ஏற்படுவதற்கான ஆபத்தும் இருக்கிறது.


கணினி துறையில் வேலை செய்பவர்கள் நீண்ட நேரம் கணினியை பார்த்துக்கொண்டு இருப்பதால் கண்கள் வறட்சி அடையும். எனவே அளவுக்கு அதிகமாக கண்களுக்கு வேலை தராதீர்கள். சில நேர இடைவெளியில் கண்களுக்கு பயிற்சி அளியுங்கள். வெளியில் சென்று வெளிப்பொருட்களை பார்த்து வாருங்கள். பசுமையான பொருட்களை சில நேரம் பாருங்கள். மேலும் விட்டமீன் ஏ உள்ள பழங்களை உண்ணுங்கள். அறிவொளி வளையம் 25 மாணவர்களுக்கு கண்களைக் கொடுத்துள்ளது. அவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 


இநிகழ்வில் பதுளை வலயக்கல்வி பணிப்பாளர் கார்த்தீபன், பதுளை சுகாதார வைத்திய அதிகாரி சுரேஸ்கண்ணண், ஆசிரிய ஆலோசகர் இந்திராணி யோகேந்திரன், பிரன்லிசிப் அமைப்பின் தலைவர் எஸ் யசோதராஜன், சேவைக்கான இணைப்பாளர் பன்னீர்ச்செல்வம், பிரன்லி சிப் அமைப்பின் செயலாளர் எம். எப் ஆரிபா, நியூ சன் ஸ்டார் கழகத்தின் தலைவரும் இளம் விஞ்ஞானியுமான சோ. வினோஜ்குமார், பாடசாலை ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.


மக்களுக்கு யோகாக்கலையின் உண்மைகளை உணர்த்த, பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் மற்றுமொரு சேவையே " அறிவொளி வளையம்" என்பது குறிப்பிடத்தக்கது.








No comments

note