சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஷம்ஸ் அதிபரின் அதிகார அடக்குமுறை; ஆசிரியர்கள் ஒட்டுமொத்த விடுமுறை!
கல்முனை வலயத்திலுள்ள சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக விடுமுறை அறிவுத்துள்ளனர். சுமார் 47 ஆசிரியர்கள் உள்ள இப்பாடசாலையில் 36 ஆசிரியர்கள் இவ்வாறு விடுமுறை அறிவித்திருப்பதாக பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இதற்கு காரணம் அதிபரின் தன்னிச்சையான அதிகார அடக்குமுறைகளும் ஆசிரியர்களை மன உளச்சலுக்கு உள்ளாக்கும் அதிபரின் மூர்க்கத்தனமான முடிவுகளுமாகும் எனத் தெரியவருகிறது.
இன்றுள்ள எரிபொருள் நெருக்கடிகாரணமாக ஆசிரியர்கள் பாடசாலைக்கு கடமைக்கு வருவதில் பல இடர்களும் தாமதங்களும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாடசாலைக்கு வருகின்ற வரவு ஒப்பத்தினை இடுகின்ற கைவிரல் அடையாள இயந்திரப் பாவனை (Finger Mark) பல பாடசாலைகளில் தற்காலிகமாக நடைமுறைப்படுத்தாத நிலையில் மழ்ஹறுஸ் ஷம்ஸ் ஆசிரியர்களும் இதனை தற்காலிக நிறுத்துமாறு அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏனெனில் இவ்வியந்திரத்தின் மூலம் ஒப்பமிடும் போது தாமதவரவு எழுதப்பட்டு அதற்கான விடுமுறை ஆசிரியர்களின் சொந்த விடுமுறையில் கழிக்கப்படுவதை அதிபர் இக்காலத்திலும் செய்வதால் தாமதமாகச் சென்றால் எப்படியும் விடுமுறையாகத்தான் ஆகும் என்ற நோக்கில் அதிக ஆசிரியர்கள் பாசடாலைக்கு வராது விடுமுறையில் நிற்கின்றனர். இவ்வாரம் சுமார் 15, 18, 21 என்ற அடிப்படையில் நாளாந்தம் ஆசிரியர்களின் விடுமுறையில் நிற்பதாகத் தெரியவருகிறது.
இதனை தவிர்த்து ஆசிரியர்களின் வரவை அதிகரிப்பதற்கு இந்த Finger Mark இயந்திரத்தை இத்தகைய நெருக்கடி காலத்திற்கு மாத்திரம் நிறுத்தி வைக்குமாறு ஆசிரியர்கள் கோரியும், அதிபர் அதன் யதாரத்தம் விளங்காது அதற்கான நெகிழ்வுத் தன்மை எதுவுமில்லாது மிகவும் மூர்க்கத்தனமாக ஆசிரியர்களின் வரவு ஒப்ப புத்தகத்திலும் சிவப்புக் கோட்டினையும் இட்டு வருகை தரும் ஆசிரியர்களை மனஉளச்சலுக்கும் மனவேதனைக்கும் உட்படுத்தியதால் அதனைக் கண்டித்தே ஆசிரியர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில் நிற்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் அதிபர் முறைகேடாக ஆசிரியர்களுடன் தகாத பேச்சுக்களையும் நடத்தைகளையும் காட்டிவருவதனையும் கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் இக்குறிப்பிட்ட விடுமுறை போராட்டம் நிகழ்வதாகவும் அறிய முடிகிறது.
இன்று நாடுமுழுவதிலும் உள்ள பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் விஷேட தீர்மானங்களை அறிவித்துள்ளதோடு, பாடசாலை வரும் ஆசிரியரகளுக்கு ஏதும் சிரமங்கள் ஏற்படுமாயின் அதனை கருத்தில் கொண்டு அதற்கான நெகிழ்வுத் தன்மைகளை கடைப்பிடிக்குமாறும் சகல அதிபர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட பாடசாலையின் அதிபர் தனது வழக்காமான சுயரூபத்தையும் அதிகார அடக்குமுறையையும் ஆசிரியர்கள் மீது காட்டுவதனை மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் நோக்கிலும் ஆசிரியர்களின் இன்றைய விடுமுறை அறிவிப்பு காணப்படுகிறது.
No comments