கல்முனை சாஹிராவின் 'ஓ.எல்' தின விழாவும் 'சாகரம்' நூல் வெளியீடும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 2021ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர்களின் ஓ.எல். தின விழாவும் 'சாகரம்' நூல் வெளியீடும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலிக் மற்றும் விசேட அதிதிகளாக பிரதி அதிபர்களான எம்.எச்.எம். அபூபக்கர், ஏ.எச்.எம்.அமீன், திருமதி றிப்கா அன்ஸார் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் டாக்டர் ஸனூஸ் காரியப்பர் உட்பட மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் 'சாகரம்' எனும் தலைப்பில் நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலாசிரியர் ஏ.பி.சம்சுனா தலைமையில் தரம் 11 இன் பகுதித் தலைவர் ஏ.எச்.எம்.றிசான் ஆசிரியர் உட்பட மலர் குழுவினரோடு அதிதிகள் புடைசூழ இந்நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.
அத்துடன் தரம் 11 கனிஷ்ட பிரிவு மாணவத்தலைவர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்கள் பதக்கம் அணிவித்து பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதோடு, 3ஆம் தவணை வலய மட்டப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப்பெற்ற 20 மாணவர்களும் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
தரம் 11 இன் பகுதித் தலைவர் ஏ.எச்.எம்.றிசான் ஆசிரியரின் சிறப்பான ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாணவர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டி சபையோரை மகிழ்வித்தனர். அதில் மிகச் சிறப்பாக ஆங்கில மொழிப் பாடல் ஒன்றைப்பாடி மாணவனான ஏ.எப்.எம் தாலிப் மற்றும் ஹிந்திப்பாடல் ஒன்றை இஷட்.ஏ.ஹாதி என்ற மாணவனும் சிங்கள மொழியில் யூ.கே.எம்.இர்ஷாத் மற்றும் எம்.எப்.எம்.பாதில் ஆகியோர் மிக அருமையாகப் பாடியும் ஆர்.எம்.அப்லல் மற்றும் முஷாரப் ஆகியோர் மிகச் சிறப்பாக கவிதை மழை பொழிந்தும் சபையோரின் பாராட்டைப் பெற்றனர்.
ஜே.ஜே.எம். ஜாஇப் குழுவினர் நடித்த 'கலக்கல் காமெடி' நாடகமும் சபை அதிர்ந்த கரகோசத்தைப் பெற்றது.
ஆசிரியர் யூ.எல்.எம்.ஹிலால் பாடல் ஒன்றைப்பாடி நிகழ்வை பரவசப்படுத்தினார்.
இறுதியாக இஷட். ஏ. ஹாதி குழுவினரால் பிரியாவிடைப் பாடல் ஒன்றும் மாணவர்களால் பாடப்பட்டு, பிரிய மனமில்லாது கண் கலங்கிய நிகழ்வும் அதிதிகளை பிரமிக்க வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வை ஆசிரியரும் அறிவிப்பாளருமான ஏ.எல்.நயீம் தொகுத்து வழங்கினார்.
No comments