அஷ்ஷெய்க் எம். அமானுல்லாஹ் அவர்களின் மறைவுக்கு - மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்
மொனராகல, அலுபொதயை பிறப்பிடமாகக் கொண்ட நாட்டின் முக்கிய ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷெய்க் எம். அமானுல்லாஹ் அவர்களின் மரணச் செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டுக்குச் சென்றுள்ள ரவூப் ஹக்கீம் அவர்கள், அங்கிருந்து அஷ்ஷெய்க் எம். அமானுல்லாஹ்வின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மொனராகல மாவட்டக் கிளையின் தலைவராக இருந்த அஷ்ஷெய்க் எம். அமானுல்லாஹ், தனது ஆரம்பக் கல்வியை அலுபொத முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கற்றபின், பதுளை ஸீலானிய்யாஹ் அரபுக் கல்லூரியில் 1991இல் தனது ஆலிம் பட்டத்தைப் பெற்றார்.
பின்னர் காலி கடுகொட ஜும்ஆ பள்ளிவாசல், கண்டி மாவில்மட ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தெலும்புகஹவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றின் பிரதான கதீபாகவும் அவர் தொடர்ந்து கடமையாற்றியுள்ளார்.
ரவூப் ஹக்கீம் அவர்கள் 1988களில் Fairline நிறுவனத்தில் பணியாற்றியபோது, கண்டியில் அவருடன் ஒன்றாக தங்கியிருந்துள்ளதோடு, நல்ல நண்பராகவும் திகழ்ந்தார்.
ஆரம்ப காலம் தொட்டு சமூக சேவைகளில் ஈடுபட்டு, சகவாழ்வை கட்டியெழுப்பும் பணிகளில் அயராது உழைப்பவராக காணப்பட்டதால், பிற மத சகோதரர்கள், மதகுருமார்களின் உள்ளங்களை வென்றெடுத்தவராக ஒருவராக அவர் திகழ்ந்தார்.
அவர் இறுதியாக நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டிலும் கலந்துகொண்டு, சிறந்ததொரு உரையாற்றியிருந்தார். அவர் கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமான என்றும் போராளியாக தனது இறுதி மூச்சுவரை இருந்துவந்தார்.
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு, மறுமை நாளில் அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற சுவனம் கிடைக்க பிரார்த்திப்போம்.
No comments