Breaking News

"தமிழ்மகன் விருது-2022" இன் 'இணையத் தமிழன்' விருதை வென்றார் ஜனூஸ் சம்சுதீன்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பல்வேறு துறைகளில் கனதியான சாதனை படைத்த ஆளுமை மிக்க சான்றோரை பாராட்டும் "தமிழ்மகன் விருது-2022" விழாவின் போது இணைய வெளி நவீன சமூக ஊடக பரப்பில் ஆக்கபூர்வமான திறன்களை வெளிப்படுத்தியமைக்காக'இணையத் தமிழன்' விருதினை வியூகம் ஊடக வலையமைப்பின் பிரதானியும்,  இலங்கையின் தேசிய வானொலி மற்றும் தேசிய தொலைக்காட்சியின் அறிவிப்பாளரும், கவிஞருமான ஜனூஸ் சம்சுதீன் பெற்றுக் கொண்டார்.


கட்டாரில் அல்-அரப் ஸ்டேடியத்தில் (24) வெகு விமர்சையாக இடம்பெற்ற இவ்விருது விழாவில், கட்டார் வாழ் அரபுலக பிரமுகர்கள், தென்னிந்திய சினிமா கலை நட்சத்திரங்கள், பல்துறை சார் ஆளுமைகள், கட்டார் வாழ் புலம்பெயர் மக்கள் என பெரும் திரளானோர் கலந்து சிறப்பித்தனர். 


இலங்கையின், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது எனும் ஊரரைச் சேர்ந்த ஜனூஸ் சம்சுதீன், இலங்கையின் தேசிய வானொலியாம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், மற்றும் தேசிய தொலைக்காட்சியாம் ரூபவாஹினி நேத்ரா டீவியின் பகுதி நேர அறிவிப்பாளராகவும் மேலும், கவிஞர், எழுத்தாளர், இயக்குனர், நடிகர், சுயாதீன ஊடகவியலாளர், சமூக ஊடக செயல்பாட்டாளர் என பல்வேறு தளங்களில்,  தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். 


'தாக்கத்தி' மற்றும் 'மூசாப்பும் ஒரு முழ வெயிலும்' என இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். 


இணைய, சமூக ஊடக அன்பர்களை கருத்திற் கொண்டு 'குரலாகி' எனும் பெயரில் கவிதை ஒலி ஒளி இறுவட்டினை வெளியிட்டுள்ளார்.


கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சக்தி எப்.எம் இல் 2005 - 2009 வரை ஒலிபரப்பாளராகவும், பிரதி எழுத்தாளராகவும் மற்றும் சுடர் ஒளி பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திலும் பணி புரிந்துள்ளார்.


2009 ஆம் ஆண்டில் சுனாமியைச் சித்தரிக்கும் ஆவணத் திரைப்படமான 'பெத்தம்மா' வையும் மற்றும் 'பதியம்', 'வை திஸ் கொல வெறி' போன்ற குறுந்திரைப்படங்களையும் வெளியிட்டுள்ளதோடு, தேசிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார். அத்துடன் தேசிய தொலைக்காட்சிகள், வானொலிகளில் நிறைய நாடகப் பிரதிகளையும் எழுதியுள்ளார்.


மிக இளம் வயதில் கலை, இலக்கியம், ஊடகம், சமூக சார்ந்த செயற்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டு உழைத்துக் கொண்டிருக்கும் இவர், இலங்கையின் சமூக ஊடக செயற்பாடுகளில் யாரும் வெளிப்படுத்தாத காத்திரமான சமூக ஊடக புரட்சியினை ஏற்படுத்தியுள்ளார்.


2016 ஆம் ஆண்டில் முகநூல் தளத்தில் குரலற்ற மக்களின் குரல் எனும் மகுட வாசகத்தில் 'வியூகம் TV' எனும் பெயரில் ஒரு முகநூல் தொலைக்காட்சியினை நிறுவி, அதனூடாக சமூக ஊடக பரப்பில் புத்தெழுச்சியான ஊடக கலாசாரத்தினை தோற்றுவித்தார். இவரின் முதன் முதலான- முன் மாதிரியான சமூக ஊடக பயணத்தின் எழுச்சியில் ஈர்க்கப்பட்டு தற்போது இலங்கையில் பல  சமூக ஊடக சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


வியூகம் இலங்கையில் மாத்திரம் அல்ல, சர்வதேசங்களிலும் மக்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு சமூக ஊடகமாய் திகழ்கிறது. சர்வதேசம் எங்கும் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் உறவுகள் வியூகம் முகநூல் நேரலை தொலைக்காட்சியினை பின் தொடர்ந்து வருகின்றனர். 


வியூகம் இலங்கையின் அரச உயர் தலைவர் முதல்-அடித்தட்டு பாமர மகன் வரை நேர்காணல்களை செய்துள்ளது.


அரசியல், கல்வி, சமூகம், சமயம், கலை, இலக்கியம், மக்களின் பிரச்சினைகள், தீர்வுகள் என பல்வேறு தலைப்புகளில் இது வரை ஆயிரக்கணக்கான காணொளி நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளது.


குறிப்பாக தேசிய ஊடகங்களில் வெளிக்கொணரப்படாத  வெகு மக்களின் பிரச்சினைகள், எளிய மக்களின் உள்ளத்து உணர்வுகள், சமுதாயம் சார் எதிர்பார்ப்புகளை சர்வதேசம் எங்கும் வெளிச்சம் போட்டு காட்டியதில் வியூகம் ஊடகத்தின் பங்களிப்பு கனதியானது.


ஏனைய ஊடகங்கள் தொடத் தயங்கிய நூற்றுக்கணக்கான பொதுச் சமூகத்தின் அவலங்களை வியூகம் ஊடகமயப்படுத்தி இருக்கிறது. 


இலங்கையில் மாத்திரம் முடங்கி விடாமல் வெளிநாடுகளுக்கும் சென்று வியூகம் தனது சமூக ஊடக பயணத்தினை விஸ்தரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா, கட்டார், துபாய் போன்ற தேசங்களுக்கு ஜனூஸ் சம்சுதீன் தலைமையிலான வியூகம் குழுமத்தினர் பயணித்து அங்கிருந்து பற்பல சமூக பெறுமானம் மிக்க நிகழ்ச்சிகள், வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


உலகத்தினை உள்ளங்கையில் உள்ளடக்கும் இணையத்தினையும், நவீன ஊடக செல்நெறிகளையும் தேசம் தழுவிய தமிழ் மக்களுக்கு  பயனுள்ள வகையில் கொண்டு சேர்த்ததில் ஜனூஸ் சம்சுதீன் வகிபாகமும் குறிப்பிடத்தக்கது.


Mojo எனப்படும் குறுகிய தொழில் நுட்ப வளங்களை கொண்டதான தனது ஊடக நகர்வுகளின் ஊடாக பாரிய சமூக மாற்றங்களை ஜனூஸ் சம்சுதீன் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.


தேசிய ஊடகங்கள், சமூக மற்றும் இணைய ஊடகங்கள் மூலமாக தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஜனூஸ் சம்சுதீன் தன்னால் இயன்ற பங்களிப்பினை நல்கிக் கொண்டிருக்கின்றார்.


அதன் பொருட்டு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இவர் பல்வேறு விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள், சான்றோரின் வாழ்த்துரைகள் பெற்றுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


இலங்கை வாழ் இலக்கிய சமூகம் இவரது அயராத சேவைகளைப் பாராட்டி மகிழ்கிறது.







No comments

note