அனாச்சாரங்களை ஏற்று கலாசாரத்தை மறுக்கும் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி !விலகினார் மேலும் ஒரு முஸ்லிம் உறுப்பினர்!
நூருள் ஹுதா உமர்
ஒரே நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியில் இருந்து மூன்றாவது முஸ்லிம் உறுப்பினரும் கடந்த 26ம் திகதி முதல் விலகியுள்ளார். ஏற்கனவே இன்டிகாப் சூபர், மற்றும் நிஸார்தீன் ஆகியோர் விலகிய நிலையில் கலீல் உல் ரஹ்மானும், தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
இதன்படி ஒரு முஸ்லிம் உறுப்பினர் மாத்திரமே ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவில் தற்போது அங்கம் வகிக்கிறார். இந்தநிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, முஸ்லிம் தனியார் சட்டங்களில் திருத்தம் செய்து அவற்றை பாதுகாப்பதற்கு பதிலாக அந்த சட்டங்களை பறித்தெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக அவர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள தமது 6 பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதற்கு தாம் உடன்படமுடியாது, அத்துடன் முஸ்லிம் இனத்தின் முன்னோர்கள் பெற்றுத்தந்த உரிமைகளை காட்டிக்கொடுக்கவோ, பறித்துக் கொடுக்கவோ முடியாது என்றும் கலீலுள் ரஹ்மான் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழு,இனங்களின் உரிமைகள் தொடர்பில் இணக்கங்களை ஏற்படுத்தாமல், அந்த உரிமைகளை பறிக்கத் துணிகிறது. முஸ்லிம் இன முன்னோர்கள் இலங்கையின் சட்டங்களுக்கு இணங்கவே முஸ்லிம் தனியார் சட்டங்களை இயற்றியுள்ளனர். எனவே அது அடிப்படைவாதமாக அமையாது.
அந்த வகையில், கண்டிய சட்டம் மற்றும் தேச வழமை சட்டங்கள் பிராந்தியங்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டமாக அமைகின்ற நிலையில், முஸ்லிம் தனியார் சட்டம் என்பது முஸ்லிம்களின் வாழ்க்கைத்திட்டமாகும் என்று கலீலுள் ரஹ்மான் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். காதி நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு மேன்முறையீட்டை செய்யவேண்டுமானால் இலங்கையின் மேல் நீதிமன்றத்தில் அதனை செய்யமுடியும். இதன்போது அந்த சட்டத்தை எவ்வாறு அடிப்படைவாதம் என்று கூறமுடியும்? என்று வினவியுள்ளார்.
இந்த சட்டத்தில் பிரச்சினைகள் இருந்தால் அதனை திருத்தியமைக்கமுடியும். எனினும் அதனை ரத்துச்செய்யமுடியாது என்றும் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சொத்து சட்டமும் அடிப்படைவாத சட்டம் அல்ல. அது ஒரு குடும்பத்தில் சொத்துக்கள் எவ்வாறு பிரிக்கப்படவேண்டும் என்பதை வரையறுக்கிறது.
இதேவேளை அரச பணிகளில், முஸ்லிம் பெண்களின் உரிமை என்ற விடயத்திலும் அடிப்படைவாதம் இல்லை என்று கலிலுள் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவின் வரைவுகளில் ஒரினச் சேர்க்கை குற்றமாக பார்க்கப்படாது என்று கூறப்படுகின்ற நிலையில் அநாச்சாரங்களை ஏற்றுக்கொள்ளும், ஜனாதிபதி செயலணி, முஸ்லிம் இனத்தின் கலாசாரத்தை ஏன் மறுக்கிறது என்று அவர் ஜனாதிபதிக்கான கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments