Breaking News

புதிய பிரதமர் மாமூல் அரசியலைத்தான் செய்யப் போகின்றாரா? - மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்

புதிய பிரதமர் மாமூல் அரசியலைத்தான் செய்யப் போகின்றாரா?


சிவில் சமூகம் எல்லோரையும் பூதக் கண்ணாடி போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது


தொலைக்காட்சிப் பேட்டியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  தெரிவிப்பு!


சக்தி தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(15) இடம்பெற்ற "மின்னல்" நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு,அதனை நெறிப்படுத்தியவர்  தொடுத்த கேள்விகளுக்கு அளித்த பதில்கள் .

 

கேள்வி: நல்லாட்சி அரசாங்க காலத்திலிருந்து அமைச்சரவையில் தாங்களும் ஒரு முக்கிய அமைச்சுப் பொறுப்பை வகித்தீர்கள் . அதேவேளையில் தற்போதைய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கதான் அப்போதும் பிரதமராக இருந்தார். ஆகவே அவருடைய அனைத்துவிதமான பக்கங்கள் சம்பந்தமாகவும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் அவரால் ஏற்பட்ட  அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் எவை என்பதையும் தாங்கள் தெரிந்திருப்பீர்கள். புதிய அமைச்சரவை ஒன்றை அமைப்பதில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். புதிய பிரதமராக ரணில் விக்கிரசிங்க ஆறாவது தடவையாகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார் இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறாகக் காண்கின்றது?


பதில்: புதிய பிரதமராக  ஆறாவது தடவையாகவும்  சாதனையைப் படைத்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கவின் ஆளுமையின் பல்வேறு பக்கங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். பலம் மற்றும் பலவீனம் எவை என்பனவும் எல்லோருக்கும் தெரியும்.


அவரை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஏன் இந்த அவசியம் ஏற்பட்டது என்ற கேள்வி இன்று பலராலும் கேட்கப்படலாம். எது எவ்வாறு இருப்பினும், இன்று அசாமான்யமான ஒரு சூழல் நிலவுகின்றது. இதைப்போன்றதொரு பொருளாதாரச் சிக்கலை இந்த நாடு இதற்கு முன்பு எதிர்கொண்டதேயில்லை. அதேநேரம், "ஆட்சியில் இன்னும் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் நாங்கள் தான் இருப்போம் " என்று மார்தட்டிக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றியதொரு குடும்பம் இன்று பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலவரம் ஏற்பட்டிருக்கின்றது.  இதைத்தான் நான் ஒர் அசாமான்யமான சூழல் என்று சொன்னேன்.


இந்தப் பின்னணியில், அரசியல் பாராளுமன்றத்திற்குள் மாத்திரம் நடப்பதல்ல. இன்று அரசியல் வீதிக்கு வந்து விட்டது. வீதியில் போராடிக் கொண்டிருக்கின்ற புதிய பரம்பரையினர் இன்றிருக்கின்ற அரசியல் பாரம்பரியங்களையே முழுமையாக தலைகீழாக மாற்ற வேண்டும்  என்ற கோஷத்தை முன்வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த பின்னணியில்  பழைய அரசியல் தலைவர்களையே ஒருவர் மாறி ஒருவராக தெரிவுசெய்து கொண்டு போவதன் மூலம் நாங்கள் அந்த நம்பகத்தன்மையை இந்த புதிய பரம்பரையினரிடத்தில் ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி இருக்கின்றது.


ஏற்கனவே சிவில் சமூகத்தின் மத்தியில் போராட்டத்தை முன்னெடுத்த பலரும் இதை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதேநேரம் இந்த நாட்டிலிருக்கின்ற முதலாளித்துவ வர்க்கம் இந்த நியமனத்தை ஓரளவுக்கு வரவேற்கின்தொரு  பார்வையில் பார்ப்பதாகவும் தெரிகின்றது. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை பொருளாதாரம் போகின்ற நிலையில் தங்களுடைய வியாபாரங்களை எல்லாம் இழுத்து மூடப்படுகின்ற நிலைமை வந்துவிடக் கூடாது என்று எண்ணுகின்றார்கள்.


எப்படியாவது இந்த அந்நியச் செலாவணி நெருக்கடி முதல் கொண்டு சர்வ தேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தாமதித்தேனும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற தேவைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நடத்துவதற்கு ஒரு நம்பகத்தன்மையுள்ள அமைச்சரவை மாத்திரமல்ல , அந்த அமைச்சரவை எப்படி அமைய வேண்டும் என்பதில் இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஏற்பாட்டாளர்களாக, நடுநிலையாளர்களாக இருந்து இந்த விடயத்தில் பலரோடும் கதைத்தார்கள். அவர்கள் நல்ல யோசனைகளைச் சமர்ப்பித்திருக்கின்றார்கள்.


 அதைபோல நாட்டின் மதபீடங்களின்  பிரதான மதகுருமார் எல்லோரும் வெவ்வேறு விதமாக பல விடயங்களைச் சொல்லியிருந்தார்கள். எல்லோரும் விரும்புவது ஒரு சர்வகட்சி அரசாங்கத்தையே. தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தையேஒரு வருடகாலம் தாமதித்து  பொறுப்பெடுப்பதில் தயக்கத்தோடு இருந்த ஒருவர்,அதுவும் பலரும் சொல்வதைப் போல,முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வலியுறுத்தி பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஒருவர் இன்று இந்த அந்தஸ்த்தை அடைந்திருக்கின்றார்.


ஏனென்றால் ,நெருக்கடி ஏற்படுகின்ற போது எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கு இவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். (இடையில் மனோ எம்.பி.குறுக்கிட்டு, முன்கூட்டியே மஹிந்த ராஜபக்ஷ அதனை ஊகித்து விட்டார் என்கிறார்)அப்படித்தான் நிலவரம் இருந்தது என்பது பரவலாக கதைக்கப்படுகின்ற கதை. இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் இவரால் இந்த நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்ப முடியுமா என்ற கேள்வி இருக்கின்றது. ஆனால், நண்பர் மனோ கணேசன் சொன்ன மாதிரி இந்த நாட்டினுடைய ஒரு வழமையான  அரசியல் நடைமுறை இருக்கின்றது ஆட்சிக்கு வருபவர்கள், பெரும்பான்மை இல்லையென்றால், அங்குமிங்குமாக உறுப்பினர்களை பிடுங்கி எடுப்பது .அவர்களுக்கு என்ன சன்மானம் கொடுத்தாவது பிடுங்க வேண்டும் இல்லையென்றால் எப்படியாவது அச்சுறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நடந்து கொள்கிறார்கள்.


அந்த அச்சுறுத்தல் ஒன்றுமே இனி வேலை செய்யாது. ஏனென்றால் எல்லோரும் மக்களுக்குப் பயந்து கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டிலுள்ள பொதுவான சிவில் சமூகம் இன்று எல்லோரையும்  பூதக்கண்ணாடிபோட்டுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. உதாரணத்துக்கு சொல்லப்போனால் ,பிரதி சபாநாயகர் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுவிட்டு , ஒரு கிழமைக்குள்ளே இராஜினாமா செய்து விட்டு வீட்டுக்குப் போய்விட்டார். 


மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்தவருக்கே அந்த பதவியில் நீடிப்பதற்கு விருப்பமில்லாமல் போவதற்கு காரணம் அவருக்குள் உள்ள பாதுகாப்பு பற்றிய சிக்கல் பயம், பீதி என்பனதாம்.இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க ஓர் அசாமான்ய துணிச்சலோடு இதைப் பொறுப்பெடுத்திருக்கின்றார்.அதன்  உள்நோக்கங்கள் என்ன? அவர் மாமூல் அரசியலைத்தான் செய்யப் போகின்றாரா? அல்லது எல்லாக் கட்சிகளையும் மனப்பூர்வமாக இணைத்துக் கொண்டு ஒரு பயணத்தைக்கொண்டு போவதற்கான சில விடயங்கள் சம்பந்தமாக அவர்சிந்திப்பாரா என்பதைப் பற்றி நாங்கள் எடைபோட்டுப் பார்க்க வேண்டும்.


இன்று நானும் நண்பர் மனோகணேசன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நண்பர் சுமேந்திரன் ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து சில வெளிநாட்டு  இராஜதந்திரிகளைச் சந்தித்தோம். இங்கே அதை விபரமாக கதைக்க வேண்டிய அவசியமில்லை.


இந்த நெருக்கடிக்கு மாமூலான அரசியல் அணுகுமுறையின் மூலம் தீர்வு காணப் போனால், அதில் ரணில் விக்கிரமசிங்க வெற்றியடை முடியாது. எல்லாக் கட்சிகளையும் இணைத்து ஒர் ஆட்சி அமைய வேண்டுமென்றால் அந்த ஆட்சி தான் ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். ஆனால் அதை ஏற்படுத்துவதற்கு இவரும் இருந்த இடத்தில் இருந்து கொண்டு "நான் அழைத்தபோது நீங்கள் வரவேண்டும்" என்ற நிலைப்பாட்டில் இருந்தால் இதெல்லாம் நடக்கப் போவதில்லை. சில விட்டுக்கொடுப்புக்களை அவர் செய்தாக வேண்டும். அது மட்டும்தான் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். அந்த விட்டுக்கொடுப்புக்கள் எவை என்பதை பற்றி நாங்கள் பேசலாம். நான் விபரங்களுக்கு இப்போதேயே வர விரும்பவில்லை.அவற்றைப் பின்னர் கதைக்கலாம்.


கேள்வி:  அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு புதிய பிரதமரால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றதா? 

அப்படியானதோர் அழைப்பு சம்பந்தமாக ஏதேனும் நிபந்தனைகளை முன்வைக்கக்கூடிய ஏதேனும் யோசனைகள் முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைமை வசம் இருக்கின்றதா? அதேநேரத்தில்  இப்போது மக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கொண்டு வந்து தரும் என்கின்ற நம்பிக்கையை விதைக்கின்ற வண்ணம் சிலர் ஒரு விடயங்களை சொல்லி வருகின்றார்கள். ஆகவே இதன் மூலமாக மக்களுக்கு  விமோசனம்  கிடைத்து  வாழ்வாதார பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்குமா அல்லது ஓர் அபாயகரமான  நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடுமா?


பதில்: இல்லை. இங்கு எல்லோரின் நோக்கமும், அதே நேரம் நான் உளப்பூர்வமாக நம்புவதும் கூட ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாக சொல்லியிருப்பதைப் போன்று "நாட்டு மக்களின் இந்த பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் அதற்காகத் தான் பொறுப்பேடுத்திருக்கின்றேன்" என்று சொல்கின்றார். அப்படி பொறுப்பெடுத்திருப்பவர் அழைப்பு விடுக்காமலுமில்லை பலவிதமாக பலர் ஊடாக அழைப்புக்கள் வந்தாலும் கூட ,அவர் பதவியெடுத்திருப்பதைப் பார்க்கும் போது கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கின்றது. அவர் வந்தவுடன் என்ன செய்தார்? அவருயை சகபாடிகள் ஐவரை  எங்களோடு அமைச்சரவையில் இருந்தவரகளை  ஒவ்வொரு துறைக்குப்  பொறுப்பாக நியமித்திருக்கின்றார்.


 மக்கள் அவரிடத்தில் என்ன எதிர்பார்க்கின்றார்கள். சகபாடிகளுக்கு பதவி வழங்குவதை அல்ல. அந்தந்த துறைகளில் நல்ல தேர்ச்சியுள்ள துறைசார் நிபுணர்கள் இருக்கின்றார்கள். நிருவாக சேவையில் ஓய்வு நிலையில் இருந்தாலும் திறமையாக கடமையாற்றிய நிறைய பேர் இருக்கின்றார்கள். அதேபோல்  ஒவ்வொரு துறையிலும் பொருளாதார ரீதியாக இந்த விடயங்களை கையாளக்கூடியவர்கள் மற்றும் நெருக்கடிகளைக்  கையாள்வதில் நல்ல தேர்ச்சியுள்ளவர்கள் என்று பலர் இருக்கின்ற ஒரு நாட்டில் அவற்றிற்கு  இவருடைய அரசியல் சகபடிகள்தானா கிடைத்தார்கள் என்று பார்க்கின்ற போது குறுகிய அரசியல் நோக்கம் என்றே பார்க்கப்படுகின்றது.


சிறிகொத்தா அரசியலை ஐ.தே.கட்சியை வளர்ப்பதற்கு இப்பொழுதிலிருந்தே அவர் வழிசமைக்கின்றார் என்ற மாதிரித்தான் அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. இவற்றைப் பார்க்கின்ற போது  நிச்சயமாக நம்பிக்கையீனம் ஏற்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர் ஒரு நாளும் எதையும் சாதிக்க முடியாது. ஒரு நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியாது. இவ்வளவு தேர்ச்சி பெற்ற ஒருவர் ஐந்து  தடவைகள் பிரதமராக இருந்த ஒருவர் பலதடவைகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஒருவர் இந்த விடயத்திற்கு ஒரு புதிய அணுகுமுறையை  கையாளவேண்டும் அந்த அணுகு முறை சகல கட்சிகளையும் அரவணைத்துச் செல்லுகின்ற ஒரு விடயமாக இருக்க வேண்டும்.


அதேநேரம் என்னைப்பொறுத்தட்டில் அவர் தான் இருக்கின்ற நிலையிலிருந்து சற்று இறங்கி வரவேண்டும். பிரதமர் ஆசனம் என்பது மட்டும் முக்கியமல்ல என்னைப்பொறுத்தமட்டில். ரணில் விக்கிரமசிங்க என்ற அரசியல் ஞானி   திறமையாக சர்வதேச சமூகத்தோடு விடயங்களைக் கையாளக்கூடிய ஒருவர்.அவர் நிதியமைச்சராக ஒரு இடைக்கால அரசாங்கத்தில் வருவது எந்த காரணத்துக்கும் ஒரு பிழையான விடயமாக இருக்க முடியாது அல்லது அவர் வெளிவுறத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற லேண்டும். ஆனால் பிரதமர் பதவிக்கு  நடுநிலையான , பொருத்தமான எல்லாக் கட்சிகளையும் அரவணைத்து போகக்கூடிய ,அரசியல் செய்ய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இல்லாத ஒருவரைக் கொண்டு வந்து அதில் அமர்த்தி விட்டு எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 


அப்படி விடுத்தாலும் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்ற ஒரு கூட்டத்தில் அவருடைய அந்த ஆளுமைக்கு அங்கு மதிப்பிருக்கத்தான் செய்யும். அது இல்லாமல் போகப் போவதில்லை. இதை இந்த பிரதமர் பதவியில் இருந்து மட்டும்தான் செய்ய வேண்டுமா? எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. எனவே  ஒரு   பெருமை பாராட்டுக்கின்ற விடயமாக அவர் இந்த விடயத்தை கையாள்வதை விடவும் வித்தியாசமாக இதைப் பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு. அப்படியென்றால்தான் எங்களாலும் சில ஒத்துழைப்பக்களை வழங்க முடியும். 


இல்லாவிட்டால் இவர் இப்படி குறுகிய அரசியல் நோக்கத்தை வைத்துக் கொண்டு இந்த ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வந்திருக்கின்றார் என்ற மக்களுடைய இந்த கணிப்பீடு அதிலிருந்து மாற முடியாது. அது அவரை துரத்தி ஓட வைக்கும் என்ற நிலவரம் ஏற்படும் காலம் வெகுதூரத்திலில்லை. எனவே இதை அச்சுறுத்தலாகச் சொல்லவில்லை எங்களுக்கு சிவில் சமூகத்திலிருந்து வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போதும் அவர்களின் உணர்வுகளை நோக்குககின்ற போதும் கவலையாக இருக்கின்றது. இன்று நாடு இருக்கின்ற பொருளாதார நிலையில் நாங்கள் இதற்கு எல்லோரும் தோள் கொடுக்க வேண்டும் . 


எங்களுக்கு அந்தப் பொறுப்புணர்ச்சி இருக்கின்றது. அந்த கடமைப்பாடு இருக்கின்றது. ஆனால் , இப்படியான அணுகுமுறையில் செயல்படுகின்ற ஒருவர் அல்லது பழைய கோபதாபங்களை வைத்துக் கொண்டு அவருடைய கட்சிக்கு தேர்தலில் நேர்ந்த கதியில் ,இன்றைய எதிர்க்கட்சி தலைவர் உட்பட அவரோடு இருக்கின்ற சக பாடிகளிடம் பழிதீர்க்க வேண்டும் என்ற போக்கில் "அங்கிருந்து ஆட்களை ஒவ்வொருவராக கழற்றி எடுக்க வேண்டும். அதனூடாக நான் என்னுடைய கட்சியை பலப்படுத்த வேண்டும்" என்ற குறுகிய நோக்கத்தோடு இதைப் பொறுப்பெடுத்திருப்பாராக இருந்தால் அது பிழைத்து விடும். நாட்டிற்கும் அவர் செய்கின்ற மிகப் பெரிய துரோகமாகி விடும். எனவே  அவருடைய அரசியல் முதிர்ச்சியையம் அவருக்கிருக்கின்ற அரசியல் ஞானத்தையும் பாவித்து சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். 


என்னுடைய பார்வையில் ,நாங்கள் நேற்று சந்தித்த இராஜதந்திரிகளுக்குச் சொன்னோம் : இதை அவசரமாக ஓடிப்போய் எடுப்பதற்கு முன்பு கொஞ்சம் எதிர்க்கட்சி தலைவரோடு கதைத்திருக்கலாம். கதைத்துவிட்டு இப்படியொரு விடயமிருக்கின்றது இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்னமாதிரிச் செய்யலாம் என்று கேட்டிருந்தால் நாங்களும் சில ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம். இதை ஓடிப்போய் தந்தவுடனே எடுத்து விட்டு , எங்களுடைய தரப்பிலே இருக்கின்ற முக்கியமான பொருளாதார நிபுணர்கள் என்று இருக்கக்கூடியவர்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றன. "உங்களுக்கு நிதியமைச்சர் பதவி  ஒதுக்கிவைத்திருக்கின்றறோம். வருகின்றீர்களா?" என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.


இது என்ன போலித்தனமான- கோழைத்தனமான அரசியல் .இதை விட்டுப் போட்டு மிகத் தெளிவாக நம்பகத்தன்மையோடு இந்த விடயம் கையாளப்பட வேண்டும். இன்னும் காலம் தாழ்த்தி விடவில்லை. நான்கு பேரை நியமித்திருக்கின்றார்கள் ஆளும் தரப்பு கட்சியிலிருந்து  சிலரை நியமித்திருக்கின்றார்கள். அவர்களோடு சில நாட்கள் கழியட்டும். ஆனால் நிதியமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கு பதிலாக இப்போதைக்கு வேண்டுமென்றால் அவரே நிதியமைச்சைப் பொறுப்பெடுக்கட்டும். எடுத்துவிட்டு  சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கட்டும். ஆனால் மற்றைய கட்சிகளில் கைவைக்க வருவாராக இருந்தால் அவருடைய முயற்சிகள் தோல்வியில்தான் முடியும் என்பதை மிகத் தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றோம்.


கேள்வி: நசீர் அஹமட் தங்களுடைய கட்சியை சேர்ந்தவர். அவர் இறுதியாக இருந்த மைச்சரவையில் அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் அடிப்படையில் அவரை கட்சியிலிருந்து நீக்குகின்றதொரு தீர்மானத்தை தாங்கள் எடுத்திருந்தீர்கள் அதேவேளையில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கும் அதற்கு பின்னர் வந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சம்பந்தமான விடயங்களில்  கட்சியினுடைய தலைமைக்கு மாறாக தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்திய உறுப்பினர்கள் விடயத்தில் சில ஒழுக்காற்று நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொண்டிருந்தீர்கள். 


இதேநேரத்தல் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை தங்களுடைய கட்சியை பிரதிநிதிப்படுத்தக்கூடிய தௌபீக், ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோர் சென்று சந்தித்து இந்த நெருக்கடியான காலகட்டதில் ஆதரவு வழங்குவது சம்பந்தமாகப் பேசியிருக்கின்றார்கள் என்கின்ற தகவல்கள்கூட இப்பொழுது வெளியாகி இருக்கின்றன.


 இப்படியான சூழ்நிலையில் தாங்கள் ஆரம்பத்தில் ஒரு விடயத்தை சொல்லுகின்ற போது, பழைய தலைவர்கள் மீண்டும் மீண்டும் வருவதைப் பற்றி மக்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறினீர்கள். ஆகவே, கட்சியினுடைய தலைமைக்கு விசுவாசமில்லாமல் அதற்கு முரணாக தீர்மானங்களை எடுக்கின்றவர்களை அடுத்த ஒரு தேர்தல் வருகின்ற போது அவ்வாறானவர்களுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கக்கூடிய நிலைப்பாடு தலைமை வசம் இருக்கின்றதாஅல்லது கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்ற-அதாவது,  தங்களுடைய வார்த்தையில் சொல்லுவதென்றால் போராளிகளை உள்ளீர்த்துக் கொண்டு இவ்வாறானவர்கள் தொடர்பில் இனிவரக்கூடிய தேர்தல்களில் வாய்ப்புக்கள் கொடுக்காமல் இருக்கின்றதொரு நிலைப்பாட்டை தலைமை எடுத்திருக்கின்றதா?


பதில்: ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நாங்கள் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம். அவருடைய பாராளுமன்ற ஆசனம் வருகின்ற 25ஆம் திகதியோடு  அவர் உயர்நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்றால் வரிதாகிவிடும். மற்ற மூவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அந்த நடவடிக்கைகள் அப்படி இருக்கத்தக்கதாக அவர்களுடைய உறுப்புரிமையிலிருந்தும் அவர்கள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.


 இந்தச் சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அவர்களோடு உத்தியோகபூர்வமாக எதையும் கதைப்பது சாத்தியமல்ல.  எனவே அண்மையில் எதிர்க்கட்சி தலைவரைச் சந்தித்து "நாங்கள் எதிர்கட்சியில் மீளவும்= இணைந்து பயணிப்பதற்கு தயாராக இருக்கின்றோம் " என்று அவர்களும் இஷாக் ரஹ்மான் அவர்களும் அறிவித்திருப்பதை நான் கண்ணுற்றேன். எனவே இந்த விடயங்கள் சம்பந்தமாக இன்று பாராளுமன்றத்தில் இருக்கின்ற சமன்பாடு என்பது இந்த கட்டத்தில் எதிர்க் கட்சிகளுக்கு முக்கியமான விடயம். 


எனவே அந்த சமன்பாட்டை கையாள்வதில்  இயன்றவரை எங்களுடைய உதவிகளை செய்ய வேண்டும்.  அதை குழப்புவதற்கு நாங்கள் முயற்சிக்கப் போவதில்லை. எனவே இதை நாங்கள் மிகவும் மெத்தனமாக அந்த விடயத்தை கையாள வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஒவ்வொருவருடைய அரசியல் எதிர்காலம் சம்பந்தமான விடயத்தில் ஒவ்வொருவருக்கும் அது சம்பந்தமான அனுமானமிருக்கும். நடந்த விவகாரங்கள் சம்பந்தமாக இன்று கட்சிப் போராளிகளுடைய எண்ணங்கள் என்ன என்பதற்கு எல்லோரும் இன்று பத்திரிகைகளை வாசிக்கத் தேவையில்லை. 


இன்று சமூகவளைத்தளங்களில் வருகின்ற பதிவுகளைப் பார்த்தால் எல்லோருக்கும் அந்த தெளிவு வரும். எனவே இந்த கட்டத்தில் அதைவிடவும் கூடுதலாக நாங்கள் எதையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. காலம் இதற்கெல்லாம் தகுந்த பதில் சொல்லும் என்று மாத்திரம் நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.


எனவே அது அவ்வாறு இருக்க இன்னுமொரு விடயத்தை  கேட்டதற்கு புறம்பாக நான்சொல்ல வேண்டும்.  இந்த ஆட்சியாளர்கள் அவர்கள் வழமையாகவே சிறுபான்மை இனங்கள் மீது வெறுப்பை தூண்டுகின்ற அரசியலைச் செய்து வருகின்றனர்.அதுதான் அவர்களுடைய பெரிய மூலதனமாகக் கருதி செய்து வந்த விவகாரமாகும்.இன்று வீதியில் இறங்கிப் போராடுகின்ற புதிய பரம்பரையினர் அதை தலைகீழாக மாற்றியிருக்கின்றார்கள். இந்த நாட்டில் இனி இனங்களுக்கிடையில் தேவையற்ற விரிசல்களையும் வேற்றுமைகளையும் வைத்து அரசியல் செய்வது என்பது எந்தக் காரணம் கொண்டும் நடக்கமாட்டாது என்பதற்கான ஒரு புதிய யுகமொன்று உருவாக வேண்டும் என்று பெரிய வேட்கை இன்று பரவலாக வெளிப்பட்டிருக்கின்றது. 


இது ஒரு பெரிய சாதகமான விடயம். இதை நாங்கள் எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் அரசியல் ஒரு புதிய திசையில் பயணிக்கும் என்பதில் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கின்றது.  எனவே இதற்கு திரைமறைவில் மண்ணை வாரிப் போடுகின்ற மாதிரி எந்த அரசியல் தலைவர்களும் நடந்து கொள்ளக்கூடாது என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு .


அதில் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலும் ஒரு நல்ல புரிந்துணர்வும் ஒற்றுமையும் வர வேண்டும் என்பதில் நாங்கள் எல்லோரும் எங்களாலான பல முயற்சிகளை செய்திருக்கின்றோம் அதை அடிக்கடி வெறும் குறுகிய அரசியல் இலாபங்களுக்கு குழப்பியடிக்கின்ற கொஞ்சம் பேர் இருக்கின்றார்கள். எனவே அவர்களும் அவர்களுடைய அணுகுமுறைகளைப் பற்றி மீளவாசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.


 அதேநேரம் ,இந்த  வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது மிகவும் வருத்தத்துக்குரிய விடயம். அதில் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடைய இழப்புக்கள் பாரியவை. அதில்  அப்பாவிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். அவர் பொலநறுவையைச் சேர்ந்த உறுப்பினர். பாராளுமன்றத்தில்கூட மிகவும் சாதுவான ஒரு மனிதர். அவர் எப்படி இதில் போய் மாட்டிக் கொண்டு உயிர் இழக்க வேண்டி ஏற்பட்டது என்று நினைக்கின்றபோது கவலையாக இருக்கின்றது. திடீர் ஆத்திரமூட்டல் என்று வருகின்ற போது எதுவும் நடக்கலாம்.


 எனவே இந்த நிலைமை எல்லாவற்றிக்கும் காரணம் இந்த நாட்டில் ஆளும் குடும்பமாக இருக்கும் ஒரு கும்பலாகும். இப்பொழுது வெளியில் வந்து கொள்ள முடியாத ஒரு நிலைமை உருவாகியிருக்கின்றது.   நடந்த விடயங்களை சம்பந்தமாக உண்மையில் வருந்தி, திருந்த வேண்டும். இனங்களுக்கிடையிலான வெறுப்புணர்ச்சியை வளர்த்து அதை மூலதானமாக வைத்து அரசியல் செய்கின்ற விடயம் பாராதூரமானது. அதனால் நடந்திருக்கின்ற விபரீதங்கள் பற்றி சரியான புரிந்துணர்வோடு நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.


 அலரிமாளிகைக்கு முன்னால் டான் பிரசாத் என்கின்ற ஒரு பேர்வழி படுகின்றபாட்டைப் பார்த்தோம். இப்போதுஅந்தப் பேர்வழிக்கு என்ன நடந்திருக்கின்றது என்று பார்க்கின்றோம். ஞானமுள்ள தேரருக்குஎன்ன நடந்திருக்கின்றது என்று பாரக்கின்றோம். நான் "ஞானமுள்ள தேரர் "என்று சொல்லுவது யார் என்று உங்களுக்குத் தெரியும்.அவர்களுக்கு வெளியே வர முடியாது. இதில் கிடைத்திருக்கின்ற மிகப் பெரியதொரு ஆசிர்வாதம் இதுதான். இந்த நாட்டில் இனிமேல் இந்த குளறுபடிகளை செய்கின்ற கும்பல் இனி தலைதூக்குவது கஷ்டம்.  என்றாலும்  வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தப்பார்க்கின்றார்கள். 


நண்பர் மனோ கணேசனும் ஒரு தூதுவரித்தில் சொன்னார். இன்று இந்தியாவிலிருந்து மீண்டும் விடுதலை புலிகள் இந்த நாட்டுக்குள் வந்து குழப்பமெடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற ஒரு குழப்பமான செய்தியைப் போட்டிருக்கின்றார்கள். அதில் உண்மையில்லை என்பது இப்பொழுது தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. ஒரு தேவையில்லாத பீதியை உருவாக்கி இப்போது  திரும்பவும் அப்பாவி நாட்டுபுற சிங்கள மக்களுக்கு மத்தியில்  ஒசுப்பேத்திப் பார்க்கலாமா என்று முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது.


எனவே இப்படி இந்த வங்குரோத்து அரசியலை எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்து விட்டு ,இந்த நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு போய்க்கொண்டிருக்கும் நிலையில்  மக்களின் கஷ்டங்களைத் தீர்க்க வேண்டும்.


 இந்த இடைபோகத்திற்கு பசளை இல்லை. இதை விநியோகிப்பதற்கான நடவடிக்கையைச் செய்ய வேண்டும். இது70வீதம் விவசாயிகள் வாழுகின்ற நாடு. எனவே இந்த நாட்டில் அவர்களுடைய பிரச்சினைக்கு காரணமான இந்த ஜனாதிபதிஇந்த சேதனப் பசளை விவகாரத்தைக் கொண்டு வந்து உருவாக்கியிருக்கன்ற சேதம் சாதாரணமான சேதமல்ல.


 எனவே இது முதல்கொண்டு எத்தனை ஊழல்கள். இந்த ஊழல் விவகாரங்கள் எல்லாம் என்று பகிரங்கமாக இன்று எல்லோருக்கும் தெரிந்த விடயம். சீனி மோசடி, வெள்ளவெங்காயம் மோசடி என எத்தனை மோசடிகள். மோசடிகளுக்கு அளவே இல்லை. கடைசியில் கொரோனா அண்டிஜன் டெஸ்ட் கிட்டிலும் மோசடி .எல்லாவாற்றிலும் மோசடி.


  ஊடக உரிமையாளர்களும் இவற்றிற்கெல்லாம் பொறுப்பு சொல்ல வேண்டும். உங்களை நான் சொல்லவில்லை. உங்களின் ஊடகம் மிகவும் கௌரமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டிருக்கின்றது. தேவையில்லாமல் இனமுறுகல்களைத் தூண்டிவிடவில்லை. ஆனால் சில ஊடகங்கள்   நான் சொன்னதைக் கேட்டால் ஏதாவது பழைய விடயத்தைக் கிளறிப் போட்டு எனக்கு ஏதாவது ஒன்றைச் செய்யலாமா என்று பார்ப்பார்கள். சில ஊடக முதலாளிமாரும் வாங்கிக் கட்டினார்கள்.


இந்த இடத்தில் நான் உங்களுடைய மறைந்த ராஜமஹேந்திரன் அவர்களை நினைத்துப் பார்க்கின்றேன் .அவர்  துணிகரமானதோர் ஊடகவாதி. மிக நேர்மையானவர். ஏதும் பிரச்சினை இருந்தால் அவரோடு போய் கதைக்கலாம். எந்த நேரமும் தொலைபேசியில் கதைத்தால் உடனே அவர் பதில் சொல்லுவார். அது மட்டுமல்ல தன்னாலான வகையில் அதற்கெல்லாம் என்ன செய்யலாம் என்று பார்ப்பார்.  ஊடக தர்மம் என்பது சரியாக பேணப்பட வேண்டும் என்பதில் நேர்மையாக இருப்பார்.அவருடைய இழப்பு இந்த கட்டத்தில் பெரிய நஷ்டம். எனவே அவரை நாங்கள் இந்தக் கட்டத்தில் ஞாபகப்படுத்திக் கொள்கின்றோம்.


  இந்த புதிய பிரதமர் என்று வந்திருப்பவர் எங்களுக்கு பரிட்சயமான பழைய பிரதமர். எனவே புதிய அணுகுமுறைகளை கையாளாது விட்டால் அவர் நிச்சயமாகத் தோல்வியடைவார். அவர் தோல்வி அடைய வேண்டும் என்று இங்கு பேசிவதற்கு நாங்கள் வரவில்லை. அவர் இந்த விடயத்தில் மாற்றமான நடைமுறைகளைக் கையாண்டு இந்த நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைக் கொண்டு வருவதற்கான புதிய யுக்திகள் கையாளப்பட வேண்டும். இந்த ஆட்சிப் பொறிமுறையை மாற்ற வேண்டும்.


(ஜம்ஷாத் இக்பால்)




No comments

note