நாளைய சந்தர்ப்பத்துக்காய் இன்றைய சூழ்நிலைக்கு ஒத்துழைப்போம்! சுஐப் எம்.காசிம்-
நன்மைக்காகச் செய்த காரியங்கள் நற்பெயர் பெற்ற சந்தர்ப்பங்கள் அரிதுதான். அதிலும் அரசியலில் இப்பெயரை வாங்கவே முடியாத நிலைகளே நிலைக்கின்றன. எங்கோ, என்றோ பொருளாதாரத்தில் விழுந்த நமது நாட்டை மீட்கப்புறப்பட்டிருக்கிறார் புதிய பிரதமர் ரணில். தருணம் தப்பினால் தலையில்தான் அடி என்றிருக்கையில், தலையைக் கொடுத்து நமது தோள்களை நிமிர்த்த வந்த பிரதமரின் முயற்சிக்கு முதலில் ஒரு பாராட்டு. எத்தனையோ பேரை எத்தனை தடவைகள் அழைத்தபோதும், துணிந்து வந்த தலைமகனை வாழ்த்தாமல் விடுதற்கு பின்னாலுள்ள பின்னணிகளைச் சொல்ல வேண்டியதில்லை. வாழ்த்தியவர்களில் சிலர் வீழ்த்தக் காத்திருப்பது விளங்காத விடயமும் இல்லை.
உச்சக்கட்ட ஜனநாயகவாதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குறுக்காக வந்து குந்திக்கொண்டதாகச் சிலர் காட்ட விழைவதுதான் எல்லோருக்குமான அபிலாஷைகளை அழிப்பது போலிருக்கிறது. எனவே, இதில் எதையாவது அடைய ஆசைப்படுவோர் கால அவகாசம் வழங்கவே வேண்டும். மக்களின் பசியைப் பயன்படுத்தி அவர்களை வீதிகளில் இறக்கிவிடும் அரசியல், பாரிய விபரீதங்களுக்கே வித்திடும். இதனால்தான், பொறுமை காக்குமாறு கோரப்படுகிறது. எவரையாவது அல்லது எந்தக் குடும்பத்தையாவது பாதுகாக்கும் நோக்கு இந்தப் பதவிப்பிரமாணத்தில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் விடலாம். ஆனால் நாமெல்லோரும் பஞ்சத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமே! இதற்காகவே இந்தக் கால அவகாசம் அவசியப்படுகிறது.
நமது வாழ்வாதாரத்தை வீழ்த்தி, அரசியலில் வாழப் புறப்பட்ட, புறப்படும் அரசியல் கலாசாரத்தை ஒழிக்கவே இந்தப் புரட்சி வெடித்திருக்கிறது. இந்த வெடிப்புக்களின் வெளிப்பாடுகளால், பல வெற்றிகள் கிட்டியிருப்பதும் உண்மைதான். வென்றவர்கள் வாழ வழியைக் காட்டுவதுதான் புதிய பிரதமரின் வியூகம். இந்த வியூகங்களில் வெற்றியடைவது இன்று, நாளை சாத்தியப்படும் விடயமும் இல்லையே! இதனால்தான், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகண்டு, நிலைமைகள் சரியானதும் பொதுத் தேர்தலுக்குச் செல்லலாம் என்கிறார் பிரதமர்.
ஸ்திரநிலையைக் காட்டி, அரசியல் ஒன்றுபடலைக் காட்டி இன்னும் எல்லோருக்குமான தேவை ஒன்றே எனக் காட்டித்தான், சர்வதேச உதவிகளை வெல்ல வேண்டியுள்ளது. இவைகள் கைக்கு வந்த பின்னர்தான் நாம் மீண்டெழுந்து, மீண்டும் இப்படி மூழாமலிருப்பதற்கான புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பம் நிச்சயமாக இளைஞர்களின் மடியிலும், கைகளிலும் விழத்தானிருக்கின்றன. எனவே, இச்சந்தர்ப்பத்துக்காக இளைஞர்கள் இன்றைய சந்தர்ப்பத்துக்கு ஒத்துழைப்பதுதான் உள்ள வழி.
இலங்கையின் கோரிக்கைகளுக்கு எதிர்வரும் (24) பதிலளிக்கவுள்ளது சர்வதேச நாணய நிதியம். பெரும்பாலும் சாதகமான பதிலே எதிர்பார்க்கப்படுகிறது. புலம்பெயர் தமிழர்களை நாட்டில் முதலிட வருமாறு எதிர்க்கட்சி தலைவர் அழைத்திருக்கிறார். ஏற்கனவே ஏனைய தரப்பினராலும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதுதான். இருந்தாலும் சஜித் பிரேமதாஸவின் அழைப்பும் ஒரு சமிக்கைதானே! ஏற்கனவே அழைத்தவர்களை விடவும், புலம்பெயர் தமிழர்களுக்கு நேசமானதும், நம்பிக்கைகையான அணியும் எஸ்.ஜே.பி தானே! இந்த அணியிலுள்ள சிறுபான்மை சமூங்களின் அரசியல் தலைமைகளுக்கும் இவ்விடயத்தில் பொறுப்புக்கள் உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் அரபுலீக் என்பவற்றுடன் தொடர்புள்ளோரதும் ஒத்துழைப்பும் இன்றைய நிலைமைக்கு தேவைப்படுகிறது. பொதுவாகச் சொன்னால் வற்றி, வரண்டு போயுள்ள வயல்களில் வான்மழையைப் பெறுவதற்கான கூட்டு முயற்சிகளே அவசியப்படுகிறது. இதையே, திருக்குறள் "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை" என்கிறது.
No comments