Breaking News

சாதாரண பெரும்பான்மையை தக்கவைக்க அரசு பகீரதப் பிரயத்தனம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் கொதிநிலையை தொடர்ந்து அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் நாற்பத்திரெண்டு பேர் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்ததுடன் தற்போது சாதாரண பெரும்பான்மையை தக்கவைக்க பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொள்ளுகின்றது.


மொட்டின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் சாதாரண பெரும்பான்மையை தக்கவைக்க பலத்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தலைநகர தகவல்கள் தெரிவிக்கின்றன.


பெருந்தேசிய வாதத்தையும் இனவாதத்தையும் கோஷமாக கையிலெடுத்த ராஜபக்ச குடும்பத்தினர் தனிப் பெரும் சிங்கள வாக்குகளால் அரசமைப்போம் என மார்தட்டி முஸ்லிம்களையும் தமிழர்களையும் மோசமாக ஒதுக்கினர்.


ருவன்வெலிசாயவில் துட்டகைமுனுவின் சிலைக்கு முன்பாக ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட  கோத்தாபாய "தான் அறுபத்தொன்பது இலட்சம் சிங்களவாக்குகளால் ஜனாதிபதியாக ஆகியுள்ளதாக முழங்கினார். 


அந்தளவுக்கு பெருந்தேசியவாதம் சிறுபான்மைக்கு எதிராக பரப்புரை செய்யப்பட்டது.


ஆனால் அந்தப்  பெருந்தேசியமே இன்று கோட்டாவை வீட்டிற்கு போகச் சொல்லுகிறது சிறுபான்மை மக்களையும் தன்னோட இணைத்துக் கொண்டு கோட்டாவை வெளியேறச் சொல்லுகிறது. 


தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை என்று அன்று சொன்னவர்கள் இன்று சாதாரண பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் தக்கவைக்க தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவை கோரியுள்ளனர். 


ஆட்சியாளர்களின் மடமை செயற்பாடுகளே மக்களை இன்று முற்சந்திக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.


இந்த வங்குரோத்து அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் .

சிறுபான்மையின  பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் தேசிய நலனை முன்னிறுத்தி செயற்பட வேண்டிய தருணமிது.


யூ.எல்.எம்.என். முபீன்

முன்னாள் கி.மாகாண சபை உறுப்பினர்.






No comments

note