Breaking News

பொதுமக்கள் சுகாதாரத் துறைக்கு உதவினால் இந்த வருடத்தில் ஏற்படும் தாக்கத்தை கடந்த வருடத்தைப் போன்று கட்டுப்படுத்துவோம் : டாக்டர் ஜி. சுகுணன்.

மாளிகைக்காடு நிருபர் 

கடந்தவருடம் பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, கல்முனை பகுதிகளில் பாதிப்பு அதிகமாகத்தான் இருந்தது. டெங்கு நோயை உருவாக்கும் ஏடீஸ் நுளம்புகளை பொறுத்தவரையில் சிறிய நீர் தேங்கி இருக்கும் இடங்களில் பெருக்கம் அடைகின்றன. ஏடீஸ் எனப்படும் நுளம்பின் மூலம்தான் டெங்கு வைரஸ்கள் கடத்தப்படுகின்றது. இம்முறை கொரோனா தாக்கம் காரணமாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் அதிக அளவில் எடுக்க முடியவில்லை. இருப்பினும் எமது பிராந்தியத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக ஒரு திட்டமிடல் கூட்டத்தை ஏற்படுத்தி அத்தனை சுகாதார வைத்திய அதிகாரிகளையும் சிரேஷ்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களையும் களத்தடுப்பு பணியாளர்களையும் அழைத்து கடந்த ஆறு மாதங்களாக எடுக்கப்பட்ட பூச்சியியல் அறிக்கையை அவர்களுக்கு விளக்கி எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான அழுத்தம் திருத்தமான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் தெரிவித்துள்ளார். 


அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், மழைக்காலம் தொடங்கிவிட்டால் ஒக்டோபர் மாதம் தொடக்கம் வடக்கு-கிழக்கில் டெங்கு நோய் அதிகூடியதாக அமைந்துவிடும். இலங்கையிலேயே இந்த காலப்பகுதியில் டெங்கு நோய் மிக அதிகமாக காணப்படும் மாவட்டமாக பல வருடங்களாக மட்டக்களப்பு காணப்படுகிறது.கல்முனை பிராந்தியத்தை பொறுத்த வரையிலும் டெங்கு நோய் இந்த காலப்பகுதியில் மோசமாக தாக்குவதுடன் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி தான் வருகின்றது 


பொதுமக்களும் சுகாதாரத் துறைக்கு உதவுகின்ற பொழுது இந்த வருடத்தில் ஏற்படும் டெங்கு தாக்கத்தை நிச்சயமாக எமது பிராந்தியத்தில் கடந்த வருடத்தைப் போன்று கட்டுப்படுத்துவோம் என்று நம்பிக்கையுடன் கூறிக் கொள்வதுடன் வீட்டில் அயலில் பாடசாலைகளில் வேலைத்தளங்களில் காணப்படுகின்ற நீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்களை இல்லாது செய்வதும் கிணறுகளை வலை போட்டு மூடி வைப்பதும் அல்லது மீன் குஞ்சுகளை விடுவதும் பாவிக்கப் படாத மலசல கூடங்களில் நீர் காணப்படுகின்ற இடங்களை அடைத்து விடுவதும் இந்த காலப்பகுதியில் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொண்டு வைத்தியசாலை சிகிச்சை பெற்றுக் கொள்வதும் இன்றியமையாது. சுகாதாரத்துறையினர் ஆகிய நாம் உங்களை காப்பாற்ற தயாராக இருக்கின்றோம் டெங்கு நோயை கட்டுப்படுத்த நுளம்புகளை கட்டுப்படுத்த நீங்கள் தயாரா? "எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.







No comments

note