முதலாளிமார்களே பொருட்களின் விலைகளை தீர்மானிக்கின்றார்கள் - ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
இன்று நாட்டை ஊழல் மோசடியுள்ள அரசாங்கம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. பயணத்தடையை நீக்கிவிட்டு சாதாரண மக்களின் வயிற்றில் அடிக்கின்றது. மாணவர்களுக்கு கல்வியில்லை. அதிபர்கள், ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. நாடு அதாளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
விலைக்கட்டுப்பாட்டை மீறியதனால் இன்று அரசாங்கம் ஒன்று ஆட்சியில் இருக்கின்ற போது முதலாளிமார்களின் அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றது. அவர்கள் விலையை தீர்மானிக்கின்றார்கள்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலி சம்மாந்துறையில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாட்டை ஊழல் மோசடியுள்ள அரசாங்கம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. உத்தரவாத விலைகளை நீக்கிவிட்டு பொருட்களின் விலைகளை அதிகரிக்கின்றது. பயணத்தடையை நீக்கிவிட்டு மக்களின் வயிற்றில் அடிக்கின்றது. இதற்கெல்லாம் அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணமாக இருக்கின்றது.
இன்று நாட்டில் டொலரில்லை. நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரமில்லை. சுகாதாரம் சீர்கெட்டிருக்கின்றது. மாணவர்களுக்கு கல்வியில்லை. அதிபர்கள், ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. நாடு அதாளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
அம்பாரை மாவட்டம் தேசிய பொருளாதாரத்தில் நெற் உற்பத்தியில் பாரிய பங்களிப்பு செய்யும் மாவட்டமாகும். இங்குள்ள விவசாயிகளுக்கு மகாபோகத்தில் நெற்பயிர்ச் செய்கை செய்வதற்கு உரமில்லை. அரசாங்கம் உரத்திற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. அரசாங்கம் விவசாயத்தை சேதனப் பசளை மூலம்தான் மேற்கொள்ள வேண்டுமென்று திணிக்கக் கூடாது. காலம் காலமாக செய்து வந்த முறையை திடீரென்று மாற்றக் கூடாது.
நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமானால் விவசாயிகளின் முகத்தில் சிரிப்பு வர வேண்டும். அவர்கள் மனமுடைந்து கவலையாக இருக்கின்றார்கள். சேதன பசளை மூலம்தான் விவசாயம் செய்ய வேண்டுமென்ற கோள்கையை அரசாங்கம் மாற்ற வேண்டும்.
விலைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அரசாங்கம் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியது. அத்தியாவசிய சேவை ஆணையாளர் ஒருவரை நியமித்தார்கள். காலத்திற்கு காலம் வர்த்தமானிகளையும் பிரசுரித்தார்கள். அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையும் விலைகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. அரசாங்கத்திற்கு பாரிய தோல்வி. தோல்வியடைந்ததொரு அரசாங்கமாகக் காணப்படுகின்றது.
விலைக்கட்டுப்பாட்டை மீறியதனால் இன்று அரசாங்கம் ஒன்று ஆட்சியில் இருக்கின்ற போது முதலாளிமார்களின் அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றது. அவர்கள் விலையை தீர்மானிக்கின்றார்கள். அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலையை தீர்மானிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. பால்மா இறக்குமதியாளர்கள் பால்மாவின் விலையை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியாக இருந்தால் எதற்காக ஒரு அரசாங்கம் வேண்டும். அத்தகையதொரு அரசாங்கம் நாட்டிற்கு தேவையில்லை.
இனியும் விலை அதிகரிப்பை தாங்க முடியாத சூழலில் மக்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் விலைக் கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கி இருக்கக் கூடாது. கடந்த காலத்தில் சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்கியவுடன் அதன் விலை இரு நூறு ரூபாவையும் தாண்டிச் சென்றது. இப்போது சீமெந்து, சீனி, பால்மா, கோதுமைமா போன்றவற்றின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இது கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களின் வேலை வாய்ப்பை இழந்த மக்கள் வருமானம் குறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் அரசாங்கம் விலைக் கட்டுப்பாட்டை நீக்கி இருப்பது சாதாரண மக்களின் வயிற்றில் அடிக்கும் பாரிய அடியாகவே கருத வேண்டும். இந்த விலையேற்றத்தை மக்களினால் தாங்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி விவசாயிகளுக்கு உரம் கிடைக்கும் வரை போராடிக் கொண்டிருப்போம் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
No comments