Breaking News

உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் மெளனித்துப் போன முஸ்லிம் சமூகமும் - யூ.எல்.எம்.என். முபீன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இருபத்தொன்பது மாதங்கள் கடந்து விட்டன. 


இக்குண்டுத் தாக்குதலில் பெரும் உயிர்ப் பாதிப்புக்குள்ளான கிறிஸ்தவ சமூகத்திற்கு அப்பால் அதன் பின்னரான பல்வேறு தாக்குதல்  வன்முறைகள் மற்றும்  பாதுகாப்பு கெடுபிடிகளால் முஸ்லிம் சமூகம் மிக மோசமான பாதிப்புக்குள்ளானது.

 

தாக்குதல் நடைபெற்று ஒரு சில நாட்களுக்குள் நிலமைகள் கட்டுப்பாட்டிற்குள் பாதுகாப்பு  தரப்பினரால் கொண்டு வரப்பட்ட போதும்

முஸ்லிம்களுக்கெதிரான வனமுறைகளும் தாக்குதல்களும் தொடர்ந்தன.


பாதிப்பிற்குள்ளான கிறிஸ்தவ சமூகம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் அமைதி பேண சிங்கள பெளத்த  மத பேரினவாதிகள் அப்பாவி முஸ்லிம்களைத் தாக்கினர்.


தீவிர தேரர்கள் உள்ளிட்ட பெளத்த மத தீவிரவாதம் இனவாத அரசியல் நடவடிக்கையாக மாற்றம் அடைந்தது.

இன்று வரை முஸ்லிம்கள் ஈஸ்டர் தாக்குதலின் பேரால் பாதிக்கப்படும் நிலையே காணப்படுகிறது.


முஸ்லிம் பிரதேசங்கள் பாதுகாப்பு தரப்பினரின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டன.


முஸ்லிம்கள் தங்கள் வீட்டுப் பாவனைக்கென பயன்படுத்தும் கத்தி, கோடாரி போன்ற உபகரணங்கள் கூட ஆயுதப் பொருட்களாக பார்க்கப்பட்டன.


சுற்றி வளைப்புகள் ,சந்தேகத்தின் பேரிலான கைதுகள், தாக்குதல் சம்பந்தமில்லாத பல இஸ்லாமிய அமைப்புகள் தடை செய்யப்பட்டமை, அப்பாவிகளின் கைது,நீதிமன்ற விசாரணை இன்றி புனர்வாழ்வு உள்ளாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல்,புர்கா ;நிகாப் தடை, உலமா சபையிடமிருந்து ஹலால் சான்றிதழ் பறிப்பு, பாரம்பரிய முஸ்லிம்கள் ;வஹ்ஹாபி முஸ்லிம்களை கூறு போட்டமை,கருத்தடை கொத்து ரொட்டி தொடக்கம் கருத்தடை ஆடைகள்,டொக்டர் ஷாபி   

எதிரான கருத்தடை பொய் பிரச்சாரம், அருள் மறை அல்குர்ஆனிற்கு எதிரான பிரச்சாரம்

இறுதியில் அல்லாஹ்விற்கு எதிரான பிரச்சாரம் வரை   முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன.


குருநாகல் ,நிக்கவரெட்டி,குளியாப்பிட்டி,மினுவாங்கொடை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் அரங்கேற்றம்,ஹார்கோட்,நோலிமிட் ,மினுவாங்கொடை பஸ்டா தொழிற்சாலைகளபோன்ற பெரிய தொழிலகங்கள் மீது தீவைக்கப்பட்டமை

போதாமல் முஸ்லிம்களின் ஷரீயா சட்டத்தில் கைவைக்கும் நிலைக்கு ஆட்சியாளர்கள் வந்துள்ளனர்.இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான பல அநியாயங்கள் தொடராக நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஏன் முஸ்லிம் சமூகம் பேசாமல் மெளனமாக இருக்கிறது


தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல் தாரிகளை அவர்களோடு தொடர்புடையவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதில் பரிபூரண ஒத்துழைப்பை முஸ்லிம் சமூகம் வழங்கியது.இப் பங்களிப்பை அப்போதைய இராணுவத் தளபதி சிலாகித்துச் சொல்லியிருந்தார்.


தற்போது கிறிஸ்தவ சமூகத்தின் தலைவராக செயற்படும் வணக்கத்திற்குரிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதிலும்

அவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென்பதிலும் முனைப்பாக போராடி வருவதுடன் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதில் மிகப்பெரிய போராட்டத்தையே நடத்தி வருகின்றார்.


சஹ்ரான் குடும்பமும் அவனது விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரண்டு நண்பர்களும் செய்த இந்த அராஜகத்திற்கு எப்படி முழு முஸ்லிம் சமூகமும் பொறுப்பாக முடியும்?


பேராயர் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸ அவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கேட்டு கடிதம் அனுப்பிய பின்பு 13 /ஜூலை /2021ல் ஊடக சந்திப்பை நடாத்தினார்.அவ் ஊடக சந்திப்பில் அரசியல் சாயம் பூசப்படாதவர்களைக் கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறும் தாக்குதல் நடைபெற்று இருபத்தாறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஆணை குழு அறிக்கை வெளியிடப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ளன.


இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியவர்கள்,அதனை திட்டமிட்டவர்கள்,இந்த கொடூர தாக்குதலை தவிர்க்க முடிந்திருந்தும் பொருட்படுத்தாது விட்டவர்கள் ஆகியோரை சட்டத்தின் முன் கொண்டு வரும் செயற்றிட்டம் மிகவும் மந்த கெதியில் நடைபெற்று வருகின்றது என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்வதாக  தெரிவித்ததுடன்


 மில்லியன் கணக்கில் செலவிட்டு நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரேரணைகள் ஏன் தாமதப்படுத்தப்படுகிறது என கேள்வியும் எழுப்பினார்.


 அத்துடன் தாக்குதல் தொடர்பில் நாற்பது பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறும் சிறை உள்ளவர்கள் மாத்திரம்தானா குற்றவாளிகள்? என்று வினா எழுப்பியதுடன் இந்த  தாக்குதல் விடயத்தை முன்கூட்டி அறிந்தவர்கள்,கடமைகளை தட்டிக் கழித்தவர்கள்,பொறுப்புக் கூறலில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக திரியும் அரசியல் வாதிகள்,அரச அதிகாரிகள்,புலனாய்வு அதிகாரிகள்,பொலிஸார் என பலர் காணப்படும் போது சிறையில் உள்ள நாற்பது பேருக்கு மாத்திரம் சட்ட நடவடிக்கை எடுப்பது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயற்பாடாகும்.


மேலும் அறிக்கை சில விடயங்களை ஆழமாக விசாரிக்க வேண்டும் என கோருகிறது. தமக்கு உள் நாட்டில் நீதி கிடைக்காவிட்டால் சர்வதேசத்தை நாட வேண்டி வரும் என எச்சரிக்கை செய்தார்.


ஓய்வு பெற்றுச் சென்ற முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா  

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெரும் சதிஉள்ளதாக தெரிவித்திருந்தார்.முன்னாள் சட்டமா அதிபரின் கூற்றை இலேசாக எடுத்துக் கொள்ள முடியாது.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த போது பின்வருமாறு கூறினார் "முன்னாள் இராணுவ புலனாய்வு பணிப்பாளர்  சுரேஷ் சாலே 2015 ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் விடயங்களை முன் வைத்த போது அப்போதைய பிரதமர் ரணில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாகவும் 


தனக்கு  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன் கூட்டி கிடைத்த தகவல்களை வழங்காமை தொடர்பில் அப்போதைய தேசிய உளவுப் பிரதானி சிசிர மென்டிஸ்,தேசிய உளவுப்  பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தன, முன்னாள் பொலிஸ் மா அதிபர்  பூஜித,முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணாண்டோஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் "என்றார்.


.பாதுகாப்பு சபையின் முக்கிய கூட்டங்களுக்கு தன்னை ஜனாதிபதி அழைக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் குற்றம் சாட்டினார்.


இந்திய புலனாய்வுப் பிரிவினர் மிகத் துல்லியமான புலனாய்வு தகவல்களை வழங்கி இருந்தும் மிகுந்த பொடுபோக்குடன் இருந்த அப்போதைய ஜனாதிபதி,பிரதமர்,பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர்  உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் குண்டுத் தாக்குதல் நடைபெற காரணமாக இருந்து விட்டு பழியை ஏன் மட்டும் ஏன் முஸ்லிம் சமூகத்தின் மீது போட்டனர்?.


இதைச் சாட்டாக வைத்து ஏன் முஸ்லிம் சமூகத்தை வதைக்கின்றனர்?


இந்த அநியாயத்தை தட்டிக் கேட்காமல் ஆழ்ந்த மெளனத்தில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது?


தேர்தல் மேடைகளில் வீராப்பு பேசும் முஸ்லிம் அரசியல் வாதிகள் ஏன் 

மெளனமானார்கள்?

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம்,ஆசாத் சாலி ஆகியோர் அவ்வப்போது குரல் கொடுத்தனர்.


முஸ்லிம்களின் சமயத் தலைமையாக தன்னை வெளிப்படுத்திக் 

கொண்டு உரிமை கோரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏன் ஆழ்ந்த  உறக்கத்தில் உள்ளது?


கடந்த மஹிந்த அரசாங்க காலத்தில் ஜெனீவா வரை சென்று வக்காலத்து வாங்கிய உலமா சபை இப்போது ஏன் பேசாமல் உள்ளது?


தேசிய சூரா சபை எங்கே?


முஸ்லிம் கவுன்சிலப் ஸ்ரீலங்கா எங்கே?


பள்ளிவாயல்கள் சம்மேளனம் எங்கே?


முஸ்லிம் சிவில் சமூக எங்கே?


நாம் செய்ய வேண்டியவை


#கிறிஸ்தவ சமூகத்துடன் உடன் இணைந்து செயற்படல்.

பேராயரின் கரத்தை வழுப்படுத்தல்.


இவ்விடயத்தில் அரசியலவாதிகள்,உலமாசபை,சூறா சபை, முஸ்லிம் கவுன்சிலப் ஸ்ரீலங்கா ,பள்ளிவாயல்கள் சம்மேளனங்கள்,முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஒரு பொது வேலைத்திட்டத்திற்குள் உடன் வரல்


# உண்மையான நீதியான அரசியல் சாயமற்ற விசாரணையை உறுதிப்படுத்த உத்தரவாதத்தை பெற்றுக் கொள்ளல். 


# உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிய தூண்டல்.


# ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சொல்லப்பட்டுள்ள விடயங்களுக்கு உண்மையான விளக்கம் அளித்தல்.


# இந்த தாக்குதலின் சதி தொடர்பில் இன்று நடுநிலையான சிங்கள ,தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர். அவர்களுடன் பொது வேலைத் திட்டத்திற்கு முஸ்லிம் சமூகம் செல்லல்.


# சர்வதேச அழுத்தங்களை இவ் விவகாரத்தில் அரசுக்கு கொடுத்தல்.

இதற்கு இராஜதந்திர மட்டத்திலான உறவுகளை கட்டியெழுப்பல். முஸ்லிம் நாடுகளின் தூதுவராலயங்கள்,முஸ்லிம் சர்வதேச அமைப்புகள்,ஏனைய சர்வதேச அமைப்புகள்,ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கு இவ்விடயத்தை கொண்டு செல்லல்.


இவ்வேலைத்திட்டத்திற்கு அகில  இலங்கை ஜம்இய்யாவின் தலைமையில் ஒரு குழுவாக இணைந்து மேற் சொன்ன அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் இயங்குவார்களா?


பணிவுடன் 

யூஎல்எம்என் முபீன் 

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்







No comments

note